வாழ்க்கையை மாற்ற இரவு தூங்கும் முன் செய்ய வேண்டிய ஐந்து விஷயங்கள்!

வாழ்க்கையை மாற்ற இரவு தூங்கும் முன் செய்ய வேண்டிய ஐந்து விஷயங்கள்!

ங்கள் வாழ்க்கை நிலையை மாற்ற தினமும் இரவு உறங்கச் செல்லும் முன்பு கீழே உள்ள முக்கியமான ஐந்து விஷயங்களைக் கண்டிப்பாகச் செய்து பாருங்கள். நிச்சயம் உங்கள் வாழ்க்கையில் நல்ல பல முன்னேற்றங்கள் ஏற்படும் என்பது உறுதி.

1. அன்றைய நாளை அசை போடுதல்:

* இன்றைய நாள் எப்படிச் சென்றது? அதனால் உணர்ந்து என்ன?

* இன்று நான் செய்த எந்தச் செயல் இலக்கை நோக்கி தன்னை நகர்த்துவதற்கு உந்து சக்தியாக இருந்தது?

* என் வாழ்க்கையில் இப்போது இருக்கும் நிலையிலிருந்து ஏதாவது சிறு மாற்றத்தையாவது ஏற்படுத்த என்னால் முடிந்ததா?

இந்த மூன்று கேள்விகளை நீங்கள் தினமும் இரவு தூங்கும் முன் உங்களை நீங்களே கேட்பதால், நீங்கள் எந்த நிலையில் உள்ளீர்கள், இலக்கை நோக்கி எப்படிச் செல்ல வேண்டும், உங்களால் என்ன செய்ய முடியும் என்ற நம்பிக்கையும், எதிர்காலத் திட்டமும் உங்கள் கண் முன் தோன்றும்.

2. தொடர்புகளைத் துண்டித்தல்: நினைத்துப் பாருங்கள்! ஒரு காரை நிறுத்த முயற்சி செய்கிறீர்கள். ஆனால், அந்த வாகனம் மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் செல்கிறது. அதை எந்த ஒரு விபத்தும் இன்றி சட்டென்று நிறுத்த முடியுமா? இங்கு வாகனம் என்பது வேறொன்றுமில்லை; வாகனத்தினை விட வேகமாகச் செயல்படும் உங்கள் மூளைதான். தூங்குவதற்கு முன்னால் கொஞ்சம்கூட ஓய்வு கொடுக்காமல் நேரத்தையும் மூளையையும் செலவு செய்யக்கூடிய ரீல்ஸ், யூட்யூப், வீடியோ கேம், மூவி என பல செயல்களைச் செய்கிறோம். அப்படிச் செய்துவிட்டு உடனே தூங்கச் சென்றால் தூக்கம் உடனே வந்துவிடுமா? அந்த வாகனத்தின் நிலைதான் நம் மூளையின் நிலை. வாகனத்தினை நிறுத்துவதற்கு வேகத்தைக் குறைத்து மெதுவாகச் சென்று அமைதியாக நிறுத்துவதைப் போல தூங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பாகவே உங்கள் ஃபோனை ஆஃப் செய்வது அவசியம். அதேபோல், உங்கள் கணினியையும் மூடி வைக்கவும். இந்த இரண்டு செயல்களுமே (காரை போல்) வேகமாக இயங்கும் உங்கள் மூளையின் வேகத்தைக் குறைத்து நிம்மதியான தூக்கத்தைத் தரும்.

3. நாளைய வேலையை இன்றே திட்டமிடல்: தூங்கச் செல்வதற்கு முன்பாக, நாளைய தினம் செய்யவேண்டிய வேலைகளை  அப்பொழுதே எழுதி வையுங்கள். அதில் கடினமான, முக்கியமான வேலையை முதலிலும், வாழ்க்கைக்குத் தேவையான வேலைகளை இரண்டாவதாகவும், பொழுதுபோக்குக்குச் செய்யும் வேலையை மூன்றாவது பிரித்து எழுதிவிட்டால் போதும். அன்றைய நாள் நிச்சயம் சிறப்பாகச் செல்லும்.

4. மூச்சுப் பயிற்சி (யோகா): சாதாரண மனிதன் ஒரு நாளில் 20,000 முறை சுவாசிக்கின்றான். மூச்சு விடுவதை எப்படிக் குறைக்கின்றானோ, அதற்கு ஏற்றாற்போல் அவன் ஆயுள் கூடும். அதனால் இரவு தூங்கும் முன்பு 15 நிமிடம் மூச்சுப் பயிற்சி (யோகா) செய்வோம். ஆனால், இது வழக்கமான மூச்சுப் பயிற்சியாக இல்லாமல், இந்த முறையை பயன்படுத்தி செய்வோம். அதாவது, நான்கு நொடி மூச்சை உள்ளிழுக்கவும், பின்பு உள்வாங்கிய மூச்சை ஏழு நொடி அப்படியே வைத்திருக்கவும். பிறகு எட்டு நொடி உள்வாங்கிய மூச்சினை மெதுவாக வெளிவிடவும். இந்த முறைப்படி மூச்சுப் பயிற்சி செய்வதால் அந்த நாளில் ஏற்பட்ட மன அழுத்தம் எல்லாம் குறையும். நீண்ட ஆயுளும் கிடைக்கும்.

5. வாசிப்பு: நம்மில் பெரும்பாலானவர்க்கு புத்தகத்தை வாசித்தால் உறக்கம் வருவது இயல்பான ஒன்று. அது குழந்தைகள், பெரியவர்கள் என்று பாராமல் எல்லோருக்கும் இருக்கக்கூடிய இயல்பு. உறங்கும் முன் புத்தகத்தை வாசித்து பாருங்கள். முதலில் வாசிக்கும்பொழுது (புனைக் கதைகள்) அதாவது, கல்கி எழுதிய, ‘பொன்னியின் செல்வன்’ போல் உள்ள கதைகளை வாசியுங்கள். இத்தகைய கதைகளைப் படிக்கும் பொழுது படிப்பதற்கான ஆர்வம் வரும். பின்னர் நாளடைவில் ஒரு பழக்கமாக மாறும். இன்று நீங்கள் தூங்குவதற்காக ஏற்படுத்திக்கொள்ளும் படிக்கும் பழக்கம், வாழ்க்கையில் உங்களை தூக்கிவிடும் பழக்கமாக மாறும். படித்துவிட்டு உறங்குவதால் புதிய கற்பனைகள் வளரும். சிந்திக்கும் திறன் கூடும். அதைக் காட்டிலும் உறக்கம் நன்றாக வரும்.

இந்த ஐந்து செயல்களை மட்டும் இரவில் உறங்கும் முன் செய்தால், உங்கள் உடல் நலமும், மன வளமும், அறிவும் பெருகும்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com