
மனிதன் முதன் முதலாகப் பயிரிட்ட தாவரங்களில் அவரைக்காயும் ஒன்று என்று கூறப்படுகிறது. கிரீஸ் மற்றும் ரோம் நகர மக்கள் அந்தக் காலத்திலேயே இதைத் தங்கள் உணவில் சேர்த்திருந்ததாகவும் தெரிகிறது. ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள காய்கறிகளில் ஒன்றுதான் அவரைக்காய். துவர்ப்பு சுவையான அவரைக்காய், பலவித உடல் பிரச்னைகளை சரிசெய்ய உதவுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
அவரை என்றாலே நார்ச்சத்து காய். மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்கள் தாராளமாக உணவில் அவரையை சேர்த்துக் கொள்ளலாம். அவரையில் உள்ள விதை மிகச்சிறந்த உணவு. அவரை பிஞ்சுவிலும் சத்துக்கள் அதிகம். இதை சமையலில் சேர்த்து கொண்டால் பித்தம் குறையும்.
‘லெசித்தின்’ எனும் நார்ப்பொருள் அவரைக்காயில் உள்ளது. இது ஹார்ட் அட்டாக், உயர் இரத்த அழுத்தம் மற்றும் மலச்சிக்கல் வராமல் தடுப்பதோடு, கொழுப்பு இரத்தக் குழாய்களை அடைத்து விடாமல் தடுக்கும். எனவே 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இதை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள சிபாரிசு செய்யலாம். இதிலுள்ள ‘பைட் டோஸ்பெரல்ஸ்’ என்ற தாவர உயிர்கூறு புற்றுநோயை தடுக்க வல்லது. இரும்புச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், புரதச்சத்து, கால்சியம், நியாசின், பைரிடாக்சின், ரிபோபிளவின், தைமின், சோடியம், பொட்டாசியம், காப்பர், மெக்னீசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், செலினியம், ஜின்க் போன்ற சத்துக்கள் அவரையில் உள்ளது.
இதில் ஏகப்பட்ட நார்ச்சத்து உள்ளதால் இதயத்துக்கு நல்லது. அவரையில் உள்ள கால்சியம், பற்களுக்கும், எலும்புகளுக்கும் வலு தரக்கூடியது. அதேபோல, ஈறுகளுக்கு பலம் சேர்ப்பவை. உடலில் புற்றுநோய் கட்டி வளர்வதை தடுப்பதில் அவரைக்கு நிறைய பங்கு உண்டு. மூளை மற்றும் நரம்பு மண்டலத்திற்கு பல நன்மைகளை வழங்கும் வைட்டமின் பி அவரையில் அதிகமுள்ளது. கண் பார்வை மங்கல் குறைபாடுகளுக்கு பிஞ்சு அவரைக்காய் சாப்பிட்டு வர அந்தக் குறைபாடுகள் சரியாகும்.
நார்ச்சத்து மிகுந்த அவரையை, சர்க்கரை நோயாளிகள் அதிகம் சாப்பிடலாம். ரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதால் ஏற்படும் நோய்களை தடுப்பதிலும் அவரை அதிகம் உதவுகிறது. அவரை பிஞ்சில் துவர்ப்பு சுவை உள்ளதால் இது ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொண்டால், நீரிழிவு நோயால் உண்டாகும் மயக்கம், தலைச்சுற்றல், கை, கால் மரத்துப்போதல் போன்றவை சரியாகும். உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் அல்லது டயட்டில் இருப்பவர்கள் அவரையை உணவில் சேர்த்து கொள்ளலாம். காரணம், இதில் நார்ச்சத்து அதிகம் என்பது மட்டுமல்ல, கொழுப்பை கரைக்கக்கூடிய அத்தனை தன்மையும் அவரைக்கு உண்டு.
அவரை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், நரம்பு கோளாறுகளையும் நீக்குகிறது. இரவில் தூக்கமின்மை பிரச்னை இருப்பவர்கள் அடிக்கடி அவரையை சாப்பாட்டில் சேர்த்து கொள்ளலாம். அவரைக் காய்களில் பொட்டாசியம் சத்து அதிகமாக உள்ளதால், இதயத்திற்கு ரத்தத்தை கொண்டு செல்லும் நரம்புகளில் இறுக்கம் ஏற்படுவதை தடுக்கிறது. அத்துடன் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பாதிப்புகளையும் தடுக்கிறது.
ஹீமோகுளோபின் பிரச்னை உள்ளவர்கள், இரும்பு சத்து நிறைந்த அவரையை சாப்பிட்டு வரலாம். இதில் துவர்ப்பு சத்து உள்ளதால் ரத்தத்தை சுத்தப்படுத்தும். நுரையீரல் தொந்தரவுகளை அவரை நீக்குகிறது. குறிப்பாக, இருமல், ஜுரம் மட்டுமல்லாமல், ஆஸ்துமா போன்ற பிரச்னைகள் இருந்தாலும், அவரை சிறந்த தேர்வாக இருக்கிறது. அவரையை அடிக்கடி சாப்பிட்டால், நுரையீரலுக்கு அதிகம் பிராண வாயு கிடைத்து சுலபமாக சுவாசிக்க வகை செய்கிறது. தினமும் அவரைக் காய் கூட்டு செய்து சாப்பிட நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களிலிருந்து விடுபடலாம்.
வயிற்றுப் புண்களை குணமாக்கும் அவரையை மூலநோய் தாக்கம் உள்ளவர்களும், மூட்டு வலி உள்ளவர்களும் வாரம் இரு முறையாவது சாப்பிட வேண்டும். உடல் சூடு மற்றும் மலச்சிக்கலால் வரும் கட்டிகளை உடைக்க விதை எடுத்த அவரைக்காய், மருதாணி, கிராம்பு சேர்த்து அரைத்து கட்டிகள் மீது பூசி வெள்ளை துணியில் துளைகள்யிட்டு கட்டி வர கட்டிகள் விரைவில் உடையும். இன்றும் கூட, கிராமப்புறங்களில் கொப்புளம், காயங்களுக்கு, அவரை இலையை அரைத்து பத்து போடுவது வழக்கம். மூட்டு வலிக்கும் இது ஒரு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.