இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) உத்தரவுகள் 2024 - ஒரு பார்வை!

FSSAI
FSSAI
Published on

- மதுவந்தி

இந்தியாவில் உணவு மற்றும் அதன் சம்பந்தப்பட்ட பொருட்களின் கொள்முதல், உற்பத்தி, பதப்படுத்தல், விநியோகம், விற்பனை, தரம் மற்றும் இறக்குமதி போன்றவற்றைச் செய்வது இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) ஆகும். ஹோட்டல்கள் முதல் டீ கடை வரை, பெரிய பல்பொருள் அங்காடி முதல் சிறிய பெட்டி கடை வரை இவர்களுக்குச் சோதனை செய்ய அனுமதி உண்டு. அப்படிச் செய்து விதிமுறைகள் மீறப்பட்டிருந்தால் கடையினை மூடி சீல் வைக்கவும் இவர்களுக்கு அதிகாரம் உள்ளது.

அப்படி உணவு சம்பந்தப்பட்ட விதிமுறை மீறல்கள் ஏதேனும் இருந்தால் அதற்குத் தகுந்தாற்போல் அவ்வப்பொழுது தடை மற்றும் ஒழுங்குமுறை உத்தரவுகளைப் பிறப்பிக்கும் இந்த ஆணையம். அப்படி இந்த ஆண்டு துவக்கம் முதல் இன்று வரை பிறப்பிக்கப்பட்ட முக்கியமான 5 தடைகள் மற்றும் ஒழுங்குமுறை மாற்றங்களை இங்குக் காணலாம் வாருங்கள்.

  • கடைகளில் மற்றும் மருந்தகங்களில் விற்கப்படும் ORSகளில் தவறாக ORS என டெட்ரா பாக்கில் அச்சிடப்பட்டால், அப்படி அச்சிடும் பிராண்டுகளின் மீது நடவடிக்கை எடுக்க அந்தந்த மாநில அரசுக்கு அதிகாரம் அளித்து உத்தரவு இட்டுள்ளது உணவுக் கட்டுப்பாடு ஆணையம். தப்பாக பிராண்டிங் செய்தல் நோயாளிகளையும் மற்றும் அதனை உபயோகிக்கும் மக்களையும் பாதிக்கும் என்பதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  • போர்ன்விட்டா, ஹார்லிக்ஸ், கார்பனேட்டட் பானங்கள் போன்றவை ஹெல்த் ட்ரிங் அல்லது எனர்ஜி ட்ரிங் இல்லை எனவும், அப்படி ஹெல்த் ட்ரிங் மற்றும் எனர்ஜி ட்ரிங் என இடப்பட்ட பெயர்களை நீக்குமாறும், அதற்குரிய முறையான பிரிவுகளின் படி வகைப்படுத்துமாறும் அந்த நிறுவனங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதுபோன்ற பானங்களை வாங்குவோரைத் தவறாக வழிநடத்தாமல் இருக்க இந்த ஒழுங்குமுறையைக் கொண்டுவந்துள்ளதாக FSSAI கூறியுள்ளது.

இதையும் படியுங்கள்:
அறுபது வயது வாழ்வியல் எப்படி இருக்கோணும்?
FSSAI
  • உணவகங்களில் தரப்படும் மெனு கார்டு எனப்படும் உணவு பட்டியலட்டையில் அந்த அந்த உணவின் கலோரி மதிப்பு, ஒவ்வாமையை உண்டாகக்கூடிய பொருள்கள் இருப்பின் அதன் பெயர்கள், உணவு சைவமா அசைவமா என்பதன் சின்னம் மற்றும் உணவின் சத்துகளின் குறிப்பு போன்றவை இடம்பெற வேண்டும் என ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனைக் கடைகளுக்கும் ஹோடல்களுக்கும் உரிமம் வழங்கும் அதிகாரி சோதனை செய்தபிறகே அனுமதி அளிக்க வேண்டும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

  • தாய்ப்பாலை குழந்தைகளுக்கும் சிசுக்களுக்கும் மட்டுமே பயன்படுத்தவேண்டும், அதனை விற்பது உணவு பாதுகாப்பு துரையின் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் எனவும் அனைத்து மாநிலங்களும் இதனைக் கடுமையாக நடைமுறைப் படுத்த வேண்டும் மற்றும் தாய்ப்பாலின் விற்பனைக்கு உரிமம் தரக்கூடாது எனவும் உணவு பாதுகாப்பு ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

  • பழங்களின் சாற்றை எடுத்து அதனுடன் பிற இனிப்பூட்டிகள் (இயற்கையானவை மற்றும் செயற்கையானவை) மற்றும் தண்ணீர் கலந்து செய்யப்படும் மறுசீரமைக்கப்பட்ட பழச்சாறுகள் இனி நூறு சதவிகிதம் (100%) பழச்சாறு எனப் போடமுடியாது. இந்த பிராண்டுகள் தங்களின் பெயர்க்கு அருகில் மறுசீரமைக்கப்பட்டது என்று கட்டாயம் போட வேண்டும் என இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் ஒழுங்குமுறை அறிக்கையை வெளியிட்டுள்ளது. இயற்கையான மற்றும் சத்துள்ள சுவையூட்டிகள் 15gm/kg மேல் சேர்க்கப்பட்டிருப்பின் அதற்குச் சுவையூட்டப்பட்ட பழச்சாறு எனப் போடலாம் என்று ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இப்படி அவ்வப்பொழுது வரும் ஒழுங்குமுறை அறிக்கைகளையும் உத்தரவுகளையும் மக்கள் கவனமுடன் படித்து அதனைப் பின்பற்றுவது அனைவருக்கும் நன்மை தரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com