
நமது குழந்தைகள் ஒவ்வொருவரும் வித்தியாச மானவர்கள். அவர்களுக்கென்று தனித்தனி, விருப்பங்கள், திறமைகள், தேவைகள் உள்ளன. அவர்களுக்கு அனைத்து வாழ்வியல் நற்பண்புகளையும் இளமையிலேயே கற்றுத்தருவது பெற்றோர்களின் பொறுப்பே ஆகும். எவ்வளவு வேலையிருப்பினும் தங்கள் குழந்தைகளிடம் பேசுவதற்கு என்று நேரம் ஒதுக்கவேண்டும்.
குழந்தைகளுக்கு ஒவ்வொரு நாளின் தொடக்கமும் சிறப்பாக அமைய வேண்டும். அவர்கள் எந்தவித கவலையுமின்றி, மகிழ்ச்சியுடன் ஒவ்வொரு நாளையும் தொடங்க வேண்டும். இதன் மூலம் அவர்கள் அந்நாள் முழுவதும் படிப்பிலும் முழுகவனத்தை செலுத்த முடியும்.
அவர்களின் மூளை வளர்ச்சிக்கும் உடல் வளர்ச்சிக்கும் தேவையான ஆரோக்கியமான உணவை தினமும் அவர்களுக்கு வழங்க வேண்டும். இரவில் போதுமான அளவு அவர்கள் உறங்குவதை உறுதிப்படுத்த வேண்டும்.
ஒவ்வொரு குழந்தையின் சிக்கலும் அவர்களின் குடும்ப பின்புலத்துக்கு ஏற்ப மாறுபடுகின்றது. இந்நிலையில் குழந்தைகளிடம் அதிக நேரம் அன்பாக பேசுவதும், குறைகளை முழுவதுமாக புரிந்துகொண்டு திருத்துவதே பெற்றோர்களின் சரியான அணுகுமுறையாக இருக்க முடியும்.
தற்போதைய குடும்ப முறையில் குழந்தைகள் அவர்களுடைய பணிகளை அவர்களே பார்த்துக் கொள்வதுதான் விரும்பப்படுகிறது. குழந்தைகள் இந்த சமுதாயம், வாழ்க்கை மற்றும் உலகின் விதிகளை புரிந்து கொள்ளுவது அவசியமானது. எனினும் அதற்கான திறமையையும், பொறுப்பினையும் அவர்கள் பெற்றுக் கொள்வதற்கு குறைந்தபட்ச கால அவகாசமும் தேவைப்படுகிறது.
குழந்தைகள் சொல்ல வருவதை காது கொடுத்துக் கேட்பது குழந்தை வளர்ப்பிற்கான நல்ல துவக்கமாகும். அவர்களின் தேவைகளில் நியாயம் இருப்பின் அவைகளை விரைவில் நிறைவேற்றித் தரவேண்டும். பெற்றோர் தம்மால் இயலாத உறுதி மொழிகளை அவர்களுக்கு ஒரு போதும் தருதல் கூடாது. தவறான பழக்கங்கள் இருந்தால் மட்டுமே அவர்களிடம் தீவிரமான கண்டிப்பினை காட்ட வேண்டும். அவர்களை கண்டிக்கும்போது அக்கறையுடன் அன்பும் கலந்து இருக்க வேண்டும்.
குழந்தைகளை அவர்களது நற்குணங்கள், சாதனைகளை சொல்லி பாராட்டும் பழக்கத்தை பெற்றோர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். இது அவர்களின் அறிவாற்றல் வளர்ச்சிக்கும், படைப்பாற்றல் வளர்ச்சிக்கும் மிகவும் உதவியாக இருக்கும்.
குழந்தைகள் தங்கள் பெற்றோர்களிடமிருந்து எதை எதிர்பார்க்கலாம், எதை எதிர்பார்க்கக் கூடாது என்பதை தெளிவாக அறிந்திருக்க வேண்டும். அவர்கள் தங்கள் முயற்சிகளில் தோல்வியடைந்தாலும் கூட அவர்களின் முயற்சியை மனதார பாரட்டவேண்டும். அவர்களுடன் அவர்களின் பள்ளியிலும் வகுப்பிலும் அன்றாட நிகழ்வுகளைப் பற்றி தினமும் கலந்துரையாட வேண்டும். அவற்றில் கூடா நட்புகளின் தொடர்பு காணப்பட்டால் தொடக்கத்திலேயே அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
வாழ்க்கையில் தடைகளை தைரியமாக எதிர்கொள்ளும் வாழ்வியல் திறனை குழந்தைகள் வளர்த்துக்கொள்ள வேண்டும். அவர்களை அதிகமாக பொத்தி, பொத்தி வளர்த்தல் கூடாது. குழந்தைக்கு ஏற்படும் ஒரு சிறிய எதிர்ப்பும் போராட்டமும் அவர்களின் திறமையை வளர்க்கும் நல்வாய்ப்பாக மாறலாம்.
பெற்றோர்கள் அவர்கள் தவறு செய்த உடனேயே திருத்த வேண்டும். ஒவ்வொரு பெற்றோரின் ஒவ்வொரு அசைவும், வார்தையும் குழந்தைகளின் நடத்தையை மிகவும் பாதிக்கின்றன. இதை நினைவில் கொண்டு, அவர்களுக்கு சிறந்த முன்மாதிரியாக வாழவேண்டும். பள்ளியிலும், பொதுவெளியிலும் மற்ற குழந்தைகளுடன் இணக்கமாகப் பழகும் குழந்தைகளிடம் வீண்வம்புகளும் சண்டைகளும் மன அழுத்தமும் குறைவாகவே காணப்படுகின்றன.
குழந்தைகளுக்காக பெற்றோர்கள் நிபந்தனையற்ற அன்பினை செலுத்துதல், பாதுகாப்பான சூழலை வழங்குதல், உலகில் அவர்கள் வாழத் தேவையான திறன்களை பெற உதவுதல், அவர்களுக்கு சரி எது, தவறு எது என்று கற்பித்தல், தம்மால் இயன்றவரை பிறருக்கு உதவுதல் போன்றவற்றை கற்பித்தல் வேண்டும். இவை அவர்களை நல்ல குடிமகனாக நாட்டுக்கு அடையாளம் காட்டும்.
குழந்தைகளின் தவறுகளுக்காக அடி வயிற்றில் இருந்து காட்டு கத்தலாக கத்துவது, முறையற்ற வார்த்தைகளை பேசுவது, குடும்ப உறுப்பினர்களுக்கிடையே அடிக்கடி ஏற்படும் சண்டை,சச்சரவுகள் போன்றவை அவற்றை பார்க்கும் குழந்தைகளின் நடத்தைக் கோலங்களை வெகுவாக பாதிக்கும். இது சார்ந்து பெற்றோர் தங்களின் நடவடிக்கைகளை அவர்களின் குழந்தைகள் நலன் கருதி மாற்றிக்கொள்வதில் உடனடி கவனம் செலுத்த வேண்டும்.
பெற்றோர்களும்,பள்ளியும் பிள்ளைகள் ஒழுக்கம், விளையாட்டு போன்றவற்றிலும் திறமைகளை வளர்த்துக்கொள்ள வாய்ப்புகளை வழங்க வேண்டும். ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்களுடைய குழந்தைகளைப் பற்றிய கனவு எப்போதுமே இருந்து கொண்டிருக்கும். இருவரின் கனவும் ஒன்றாக இருந்தால் அதை அவர்கள் அடைவது எளிது. தற்காலங்களில் அவர்களை வளர்த்து ஆளாக்குவது என்பது ஒவ்வொரு பெற்றோருக்கும் ஒரு சிறந்த கலையாகவே மாறிவருகிறது எனலாம்.