
பால்கனி தோட்டம் அமைப்பதற்கு நிறைய இடமோ, ஆடம்பரமான உபகரணங்களோ தேவையில்லை. கொஞ்சம் படைப்பாற்றலும், சில தொட்டிகளும், கற்பனைத் திறன்களும் இருந்தால் போதும், நம் பால்கனியை அழகான தோட்டமாக மாற்றி விடலாம்.
பால்கனி அல்லது மொட்டை மாடி போன்ற இடங்களில் செடிகளை வளர்ப்பது என்பது ஒரு சவாலாகத்தான் இருக்கும். என்ன செடிகளை வளர்க்கலாம், அதை வளர்ப்பதற்கான தொட்டிகளை எப்படித் தேர்ந்தெடுப்பது, எந்த இடத்தில் எந்தவிதமான செடிகளை வளர்ப்பது போன்றவற்றை யோசித்து சரியான முறையில் வளர்க்க வீட்டின் வெப்பநிலை குறைந்து, தென்றல் காற்று வீச ஆரம்பிக்கும்.
பால்கனி தோட்டம் அமைப்பதற்கு குறைந்த பராமரிப்பு தாவரங்கள், தொங்கும் கூடை செடிகள், சிறிய தொட்டிகள், செங்குத்து தோட்டம், ரயில் தண்டவாளச் செடிகளை நடவு செய்வது ஆகியவை நம் பால்கனியின் அழகைக் கூட்டுவதுடன் நம்மை ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும்.
1. குறைந்த பராமரிப்பு தாவரங்கள்: குறைந்த நீர் மற்றும் உரம் தேவைப்படும் தாவரங்கள், பூச்சிகள் மற்றும் நோய்களால் எளிதில் பாதிக்கப்படாத தாவரங்கள் நம் உட்புற தோட்டத்திற்கு சிறந்த தேர்வாகும். ஏனெனில், இவற்றை பராமரிப்பது எளிது. பாம்பு செடிகள், போத்தோஸ் (Pothos), ZZ தாவரம் (ZZ plant), சிலந்தி தாவரம் (spider plant), சதைப்பற்றுள்ள செடிகள் போன்ற அதிக பராமரிப்பு தேவைப்படாத செடிகளை தேர்ந்தெடுத்து வளர்க்க கண்ணுக்கு குளிர்ச்சியாகவும், பசுமை நிறைந்ததாகவும் ஆக்குவதுடன் காற்று மாசுபாட்டை குறைக்கவும் உதவும்.
2. தொங்கும் கூடை செடிகள்: தொங்கும் கூடை செடிகளை பயன்படுத்தி பால்கனியை அலங்கரிக்கலாம். இது பால்கனிக்கு ஒரு அழகான தோற்றத்தை கொடுக்கும். இவற்றை தொங்கவிடும்பொழுது அவை இடத்திற்கு அழகையும், பசுமையையும் சேர்க்கின்றது. தொங்கும் செடிகளின் அழகு என்னவென்றால், அவை பெரும்பாலும் கவனிக்கப்படாத செங்குத்து இடத்தை பயன்படுத்துகின்றன. தொங்கும் கூடைகள் வழக்கத்தை விட வேகமாக காய்ந்து விடும் என்பதால் செடிகளுக்கு அடிக்கடி தண்ணீர் ஊற்ற வேண்டும் என்பதை மறக்க வேண்டாம். செடிகளின் வளர்ச்சியை கட்டுப்படுத்தவும், அவற்றின் வடிவத்தை பராமரிக்கவும் தேவைக்கு ஏற்ப கத்தரிக்கவும்.
3. தண்டவாளத் தோட்ட பெட்டிகளில் செடிகள்: தண்டவாளத் தோட்ட பெட்டிகளை பயன்படுத்தி செடிகளை நட்டு வளர்க்கலாம். இவை நம் பால்கனிக்கு ஒரு வித்தியாசமான தோற்றத்தை கொடுப்பதுடன் கண்ணுக்கும் குளிர்ச்சியாக இருக்கும். தண்டவாளங்கள் மீது அருவியாக விழும் மலர்களும், குறுக்கு நெடுக்காக அடிக்கப்பட்ட தட்டுகளில் ஏறும் மலர்களும் அழகான ஐரோப்பிய பால்கனி தோற்றத்தை நமக்குத் தரும். விதவிதமான வண்ணங்களில் நறுமணத்தை தரும் செடிகளை வைக்கலாம்.
4. செங்குத்து தோட்டம்: செங்குத்து தோட்ட அமைப்புகளைப் பயன்படுத்தி சுவரில் செடிகளை வளர்க்கலாம். இவை இடத்தை மிச்சப்படுத்துவதுடன் சுத்தமான காற்றை சுவாசிக்கவும் உதவும். மரத்தாலான தட்டுகள் முனையில் பொருத்தப்பட்டிருக்கும் பழைய புத்தக அலமாரிகள் அல்லது நீளவாக்கில் வெட்டி சுவரில் பொருத்தப்பட்ட PVC குழாய்களைப் பயன்படுத்தி இடத்தை மிச்சப்படுத்துவதுடன் செங்குத்து தோட்டத்தை உருவாக்கலாம். இதில் வெந்தயக்கீரை போன்ற கீரை வகைகள், கொத்தமல்லி போன்றவற்றை வளர்க்கலாம். ஆழமான மண் தேவையில்லாத இலை காய்கறிகளுக்கு இந்த அமைப்பு அற்புதமாக வேலை செய்யும்.
5. சிறிய தொட்டிகள்: சிறிய தொட்டிகளைப் பயன்படுத்தி பூச்செடிகள், குரோட்டன்ஸ் வகைகளை வைக்கலாம். ஆரோக்கியம் தரும் கீரை வகை விதைகளைத் தூவி வளர்க்கலாம். எலுமிச்சை புல், துளசி, புதினா, கற்பூரவல்லி போன்ற மூலிகை செடிகளையும் வளர்க்கலாம். தினசரி பயன்பாட்டிற்கு உதவும் கொத்தமல்லி, வெந்தயக் கீரை போன்றவற்றையும் வளர்க்கலாம். பெரும்பாலான மூலிகைகள் வெயில் படும் பால்கனியில் அல்லது மொட்டை மாடியில் நன்கு செழித்து வளரும். அத்துடன் இவை வளர்வதற்கு மிகக் குறைந்த இடமே தேவைப்படும்.
6. பசுமை பைகள்: பசுமை பைகள் லகு ரக, மலிவு விலையில் கிடைக்கின்றன. இவை சிறிய இடங்களில் காய்கறிகளை வளர்ப்பதற்கு ஏற்றவை. தக்காளி, கத்திரிக்காய், பச்சை மிளகாய், வெண்டைக்காய் போன்ற செடிகள் இவற்றில் நன்கு செழித்து வளரும்.
7. பால்கனி தோட்ட தீம் யோசனைகள்: ஒரு குறிப்பிட்ட தீமை பின்பற்றி தோட்டத்தை அழகாக அலங்கரிக்கலாம். விதவிதமான வண்ணங்களில் ரோஜா செடிகளை வைத்து ரோஜா தோட்டமாகவோ, மூலிகை செடிகளாக வைத்து மூலிகை தோட்டமாகவோ உருவாக்கலாம். இந்த சிறிய தோட்டத்தின் நடுவில் நாற்காலியைப் போட்டு தினமும் காலை, மாலை வேளைகளில் அமர்ந்து சிறிது ஓய்வெடுக்க உடல் மற்றும் மனம் புத்துணர்ச்சி பெறும்.