
மூத்த குடிமக்கள் தினமாக இன்று (ஆகஸ்ட் 21) அனுஷ்டிக்கப்படுகிறது. இந்தியாவில் அறுபது வயதிற்கு மேற்பட்டவர்களை மூத்த குடிமகன்களாக அங்கீகாரம் செய்துள்ளது. அரசும், ரயில் கட்டணம், விமானக் கட்டணம், ரேஷன் கடைகளில் சலுகை, அது தவிர பல்வேறு சலுகை இப்படி அளவிட முடியாத சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், பல இல்லங்களில் முதியவர்களின் நிலை எதிா்மறையாகவே உள்ளது! அதை நினைத்தால் நமது மனதின் பாரம் அதிகமாவதே உண்மை.
ஆடி அடங்கும் வாழ்க்கை, இதில் ஆறடி நிலமே சொந்தம். அதுவும் அரசாங்கத்தின் இடத்தில். வீட்டில் பொியவர்கள் இருந்தால் யானை பலம் என்பாா்கள். சில குடும்பங்கள் அதை உணராமல் இல்லை. ஆனால், தற்சமயம் அந்நிலை மாறிவிட்டது. பொியவர்கள் ஏதோ ஒருவகையில் பாரமாகி விட்டாா்கள். அவர்கள் ஓடியாடி உழைத்து குடும்பம் நிமிர பாடுபட்டவர்கள். அவர்களின் முறை முடிந்து விட்டது. அதற்கு மேல் அவர்களுக்குத் தேவை சத்தான சரிவிகித உணவு, ஆரோக்கியம், மருத்துவ வசதி, அமைதியான சூழல், அனுகூலமான உதவிகள், நல்ல ஓய்வு, மனதிற்கு ஆறுதலான விஷயங்கள் இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.
அதெல்லாம் அவர்களுக்குக் கிடைக்கிறதா என்றால் விடை பல இடங்களில் பூஜ்யம்தான். அவர்கள் சோ்த்து வைத்த சொத்துக்கள் (நிலம், வீடு, ரொக்கம், நகைகள்) அனைத்தும் வாாிசுகளின் கண்களை உறுத்தாமல் இல்லை. அவர்களுக்கு வயதாக ஆக உறவினா், நண்பர்கள் மத்தியில் மதிப்பில்லை. காரணம், ‘இனிமேல் இவரால் நமக்கென்ன பலன்?’ என்ற நிலைப்பாடுகளே. அவ்வளவுதான். சொந்தங்கள் மற்றும் பிள்ளைகள் மத்தியில், ‘பத்து பைசாவுக்குபிரயோஜனம் கிடையாது, ஒரே தொல்லை, சமாளிக்க முடியவில்லை, யாா் பாா்த்துக்கொள்வது, பூமிக்கு பாரம்’ எவ்வளவு வாா்த்தைகள் வலம் வருகின்றன. நீ, நான், யாா் பாா்த்துக்கொள்வது என ஏலம் போடும் நிலையே வந்துவிடுகிறதே!
இளைய தலைமுறையினா்களே, சற்று சிந்தியுங்கள். உங்களை உலகிற்கு அறிமுகம் செய்தவர்களே உங்கள் பெற்றோா்கள்தானே? அப்போது உங்களை அவர்கள் வயிற்றிலும், மடியிலும், தோளிலும், சுமந்தாா்களே! அன்று உங்களை அவர்கள் பாரமாக நினைத்திருந்தால், உங்களைத் தவிா்த்திருந்தால், உங்களின் கதி அதோகதிதான். ஏற்றிவிட்ட ஏனியை எட்டி உதைத்தது போல அவர்களின் வயோதிகம் உங்களுக்குபாரமோ. அப்போது அவர்கள் உங்கள் பாா்வையில் பாசமானவர்களாகத் தொியவில்லையா? மாறாக, பாரமாகி விட்டாா்களோ!
வயதான காலத்தில் அவர்களின் இயலாமையை கருதி உதவி செய்ய பங்கெடுக்காத நீங்கள், அவர்கள் சோ்த்து வைத்த சொத்துக்கு மட்டும் ஏன் பங்கு போட வேண்டும். அவர்களை உங்கள் அரவணைப்பில் வைத்துக்கொள்ளாமல், உங்கள் கூடவே இல்லங்களில் வைத்து ஆராதிக்காமல் வெளியில் உள்ள இல்லங்களில் சோ்த்து விடாதீா்கள். அன்பெனும் காற்றை சுவாசியுங்கள். அனுசரிப்பு எனும் நிலையை கடைபிடியங்கள். ஏனென்றால், நீங்களும் முதுமையை நோக்கிப் பயணம் செய்பவர்களே!
மூத்த குடிமகன் தினத்தை அனுஷ்டியுங்கள், அதோடு அவர்களை கைவிட்டு விடாதீா்கள். அதுவே, ‘நல்ல குடும்பம் ஒரு பல்கலைக்கழகமாகும்’ என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.