

கடவுளை காண
தவம் இருந்தவனுக்கு
கடவுளே நேரில் வந்து
காட்சித் தந்தார்.
கடவுளை கண்டதும்,
‘காலமெல்லாம்
கவலை இல்லாமல்
உற்சாகமாக வாழ’...
வரம் தர வேண்டுமென
வேண்டிக்கொண்டான்.
‘உயிருள்ளவரை
உனது வாழ்வு
உற்சாகமாக இருக்க
உழைத்து பிழைக்க பழகு!’
என்றார் கடவுள்.
கடவுளின் பதிலில்
கடுப்பான மனிதன்...
‘வயிற்றுப் பசிக்கு
புழு பூச்சிகளைப் பிடித்து
புசித்து வாழும்
பறவையல்ல.!
இரையை தேடித் திரிந்து
வேட்டையாடி தின்னும்
விலங்கும் அல்ல.!
எங்கேயும் செல்லாமல்
இருந்த இடத்தில் இருந்தபடியே
என் தேவைகளை எளிதில்
அடையும் மனிதன் நான்!’
என்றான் இறுமாப்போடு.
‘அட அறிவாளி !
இயற்கையின் நியதிப்படி
இயங்குகின்ற ஜீவன்களுக்கு
இயல்பாய் பசி தீரும்.
எந்த பிணிகளும் வாராது.!
இயந்திரமே கதியென
எதுவுமே செய்யாது இருந்தால்...
இளமையிலேயே வயோதிகமும்
வாழும் காலத்திலேயே
வியாதிகளும்
விருந்தாளியாக வரும்!
இலவச இணைப்புகளாக
உணவோடு சேர்ந்து மருந்தும்
விருந்தாக மாறி விடும்! ‘
என்று இன்முகத்தோடு
இறைவன் அறிவுரைத்தார்.
ஆனால் அவனோ
அலட்சியமாகப் பார்த்து விட்டு…
கலங்காமல் கைபேசியில்
இறைவன் சொன்னதை
அறிவுரைப் பதிவாக
அவனது நண்பர்களுக்கு
அனுப்பி…
‘இதைப் படித்ததும்
இன்னும் பத்து பேருக்கு
அவசியம் பகிரச்சொல்லி’
அவரசரமாக பகிர்ந்து விட்டு…
இறைவன் சொன்ன
இலவசங்களோடு ஐக்கியமாக
தயாராகி விட்டான்.!