

தற்காலத்தில் நம் அனைவரிடமுமே மொபைல் உருவத்தில் ஒரு காமிரா இருக்கிறது. எந்த நொடியில் எதைப் பதிவு செய்ய நினைத்தாலும் நம்மால் படம் பிடித்து விட முடிகிறது. புகைப்படம் மட்டுமின்றி, வீடியோவையும் நினைத்த மாத்திரத்தில் எடுத்து விட முடிகிறது. ஆனால், முன்பெல்லாம் புகைப்படம் என்பது ஒரு வியக்க வைக்கும் ஆச்சரியமான கலையாக இருந்தது. விழாக்களுக்குச் செல்லும் எல்லோருமே தங்களை புகைப்படங்களில் பதிவு செய்துகொள்ள விரும்புவார்கள். போட்டோகிராபர்களை அணுகி, ‘என்னை ஒரு போட்டோ எடுங்க சார்’ என்று ஆர்வத்துடன் கேட்பார்கள். போட்டோகிராபர்களுக்கு அவ்வளவு மரியாதை இருந்த காலம் அது.
புகைப்படக் கலை என்பது செலவு மிகுந்த ஒரு கலையாகக் கருதப்பட்ட காலம் உண்டு. ஒரு பிலிமை வாங்கி காமிராவிற்குள் பொருத்தினால் அதில் அதிகபட்சமாக முப்பத்தி ஆறு புகைப்படங்களை பதிவு செய்யலாம். இப்படியாக பதிவு செய்த புகைப்படங்களை லேபில் கொடுத்து டெவலெப் செய்து பின்னர் கறுப்பு வெள்ளை அல்லது வண்ணத்தில் பிரிண்ட் செய்வார்கள்.
அக்காலத்தில் பாஸ்போர்ட் புகைப்படங்களை எடுத்தால் அதை பிரிண்ட் போட்டு வாங்க குறைந்தபட்சம் ஒருவார காலமாவது ஆகும். ஏனென்னால் காமிராவில் உள்ள பிலிமில் அனைத்தும் பதிவு செய்யப்பட்ட பின்னரே லேபில் டெவலெப் செய்து பிரிண்ட் போட்டுத் தருவார்கள். அவசரமாக வேண்டும் என்றால் சற்று அதிக பணம் கொடுத்தால் அப்போதே காமிராவை ஒரு இருட்டறையில் திறந்து அந்த ஒரு பகுதியை மட்டும் வெட்டி டெவலெப் செய்து பிரிண்ட் போட்டுத் தருவார்கள். திருமணம் முதலான விசேஷங்களில் புகைப்படத்தை எடுத்தால் அதைப் பெற குறைந்தது பதினைந்து நாட்களாவது ஆகும்.
தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் நாம் எடுக்கும் புகைப்படங்களை அந்த நொடியே அது சரியாக வந்துள்ளதா என்பதைப் பார்த்துத் தெரிந்து கொள்ள முடிகிறது. சரியாக வரவில்லை என்று தெரிந்தால் உடனடியாக மீண்டும் எடுத்து விடலாம். பழைய காமிரா முறையில் ஒரு சிக்கல் என்னவென்றால் நாம் லோட் செய்த பிலிம் சரியாகப் பொருந்தி புகைப்படம் சரியாக வருமா என்று தெரியாத ஒரு சூழ்நிலை உண்டு. லோட் செய்த பிலிம் சரியாக சுழலாமலேயே நின்று விடுவதும் உண்டு. சுழலாமல் போனால் நாம் எடுக்கும் புகைப்படங்கள் பதிவாகாது. லேபில் கொடுத்து பிரிண்ட் போடும் வரை நாம் எடுத்த புகைப்படங்களின் நிலை என்னவென்று நமக்குத் தெரியாது.
இதனால் தாலி கட்டும் நிகழ்வின்போது நான்கைந்து புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளுவார்கள். நிகழ்ச்சி முடிந்ததும் பிலிம் ரோலை லேபில் கொடுத்து டெவலெப் செய்து எடுத்த புகைப்படங்கள் நன்றாக வந்துள்ளது என்பதை அறிந்த பின்னரே மனதில் ஒருவித நிம்மதி ஏற்படும். அதுவரை போட்டோகிராபரின் மனமானது ஒருவித பதற்றத்துடனே காணப்படும்.
தற்காலத்தில் எடுத்த புகைப்படங்களின் இமேஜ்களை உடனுக்குடன் யாருக்கு வேண்டுமானாலும் வாட்ஸ்அப் மற்றும் மின்னஞ்சல் மூலமாக உடனுக்குடன் அனுப்பிவிட முடிகிறது. அக்காலத்தில் புகைப்படக்கலைஞர்களுக்கு இருந்த மதிப்பும் மரியாதையும் தற்போது இல்லை என்றே சொல்லலாம். காரணம், எல்லோராலும் தற்காலத்தில் நினைத்த நேரத்தில் நினைத்த புகைப்படங்களை தங்களிடமிருக்கும் கைப்பேசி மூலமாக மிகச்சுலபமாக எடுத்துவிட முடிகிறது. தற்காலத்தில் கைப்பேசியிலேயே ஜூம் செய்து படமெடுக்க முடிகிறது. அந்த அளவிற்கு தொழில்நுட்பம் முன்னேறியுள்ளது.