

சமையல் செய்ய வரும்போது ஸ்டவ்வும் பர்னரும் பளிச்சென்று இருந்தால்தான் நமக்கு சமைப்பதற்கே உத்வேகம் ஏற்படும். கேஸ் ஸ்டவ் பர்னரில் அடைப்பு ஏற்பட்டால் சுடர் (Flame) சரியாக எரியாது, மஞ்சள் நிறத்தில் எரியும், மேலும் எரிபொருளும் வீணாகும். நமக்கு மூடும் அவுட் ஆகும். அதைத் தவிர்க்க சமையலறையில் உள்ள எளிய பொருட்களைக்கொண்டே பர்னரை புதிதுபோல மாற்றக்கூடிய நான்கு எளிய முறைகள்.
பித்தளை, அலுமினியம், காஸ்ட் அயன் (Cast Iron) மற்றும் குரோமியம் கலந்த பர்னர்கள் ஒவ்வொன்றிற்கும் சுத்தம் செய்யும் முறைகளும், பராமரிப்பும் முற்றிலும் மாறுபடும். தவறான பொருட்களைப் பயன்படுத்தினால் பர்னரின் நிறம் மாறவோ அல்லது துருப்பிடிக்கவோ வாய்ப்புள்ளது.
ஆதலால் ஒவ்வொரு வகை பர்னருக்கும் ஏற்ற பாதுகாப்பான சுத்தம் செய்யும் முறைகள் பற்றியும் இப்பதிவில் காண்போம்!
1. அலுமினியம் பர்னர் சுத்தம்:
அலுமினியம் பர்னர்கள் இலகுவாக இருக்கும், ஆனால் அமிலத்தன்மை (Acidic) கொண்ட பொருட்களைப் பயன்படுத்தினால் கருப்பாக மாறிவிடும். ஆதலால், வினிகர், எலுமிச்சை சாறு அல்லது கடுமையான லிக்விட்களைப் பயன்படுத்த வேண்டாம் (இவை அலுமினியத்தைக் கருத்துப்போகச் செய்யும்).
எனவே பாதுகாப்பான முறையில் வெதுவெதுப்பான நீரில் பாத்திரம் கழுவும் டிஷ் வாஷ் லிக்விட் (Dishwash Liquid) கலந்து பர்னரை 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். ஒரு பழைய டூத் பிரஷ் அல்லது சாஃப்ட் ஸ்க்ரப்பர் கொண்டு அழுக்கை நன்றாகத் தேய்த்து எடுக்கவும். சுத்தமான நீரில் கழுவி, உலர்ந்த துணியால் துடைத்து உடனடியாகக் காயவைக்கவும்.
2. காஸ்ட் அயன் பர்னர்:
காஸ்ட் அயன் (இரும்பு) பர்னர்கள் மிகவும் பலமானவை, ஆனால் ஈரப்பதம் பட்டால் துருப்பிடிக்கும் அபாயம் அதிகம்.
சுத்தம் செய்யும் முறை: வெதுவெதுப்பான நீர் மற்றும் லேசான சோப்பு நீரைக் கொண்டு பிரஷ்ஷால் தேய்த்து அழுக்கை நீக்கவும். தண்ணீரில் அதிக நேரம் ஊறவைக்க வேண்டாம்.
முக்கியமான விஷயம்:
கழுவித் துடைத்த பிறகு, பர்னரை லேசான தீயில் (Gas Flame) 1 நிமிடம் வைத்து அதில் உள்ள ஈரப்பதத்தை முற்றிலும் உலர்த்த வேண்டும். பிறகு, 2 சொட்டு சமையல் எண்ணெயை ஒரு துணியில் தொட்டு பர்னர் மீது லேசாகத் தடவி வைக்கவும். இது துருப்பிடிப்பதைத் தடுக்கும்.
3. குரோமியம் பிளேட்டட் / ஸ்டீல் பர்னர்:
இவை வெளிப்புறம் பளபளப்பான குரோமியம் பூச்சுடன் (Chrome Finish) இருக்கும். கரடுமுரடான நாரைப் பயன்படுத்தினால் பூச்சு உரிந்துவிடும்.
பர்னர் அடைப்பு சுத்தம் செய்ய:
1 ஸ்பூன் பேக்கிங் சோடாவுடன் சிறிதளவு நீர் கலந்து பேஸ்ட் போல ஆக்கிக் கொள்ளவும். இந்த பேஸ்ட்டை பர்னர் மீது தடவி 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். ஒரு மென்மையான டூத் பிரஷ் கொண்டு லேசாகத் தேய்த்துக் கழுவினால், குரோமியம் பூச்சு சேதமடையாமல் பளபளப்பாகும். எஃகு நாரை (Steel Wool Scrubber) பயன்படுத்தக் கூடாது.
4. பித்தளை (Brass) பர்னர்களைத் தங்கம்போல பளபளக்க வைக்க இந்த முறை உதவும்.
தேவையானவை: எலுமிச்சை சாறு, பேக்கிங் சோடா, சுடுநீர்.
ஒரு எலுமிச்சை பழத்தின் சாற்றுடன் 2 ஸ்பூன் பேக்கிங் சோடா கலந்து பேஸ்ட் போல ஆக்கிக்கொள்ளவும். இந்த பேஸ்ட்டை பர்னர் முழுவதும் தடவி 10-15 நிமிடங்கள் ஊறவிடவும்.எலுமிச்சைத் தோலைக்கொண்டே பர்னரை நன்றாகத் தேய்த்துக் கழுவினால், பித்தளையின் கருமை நீங்கி பளபளப்பாகும்.
துளைகளின் அடைப்பு நீக்க:
அடைப்புகளை நீக்க பிளாஸ்டிக் அல்லது மெல்லிய மெட்டல் கம்பி / சேஃப்டி பின் (Safety Pin) பயன்படுத்தி ஒவ்வொரு துளையிலும் உள்ள அடைப்பை நீக்கலாம்.
தீக்குச்சி அல்லது பற்கள் குத்தும் குச்சியைப் பயன்படுத்த வேண்டாம். அவை உடைந்து உள்ளேயே மாட்டிக்கொள்ள வாய்ப்புள்ளது.
5. அடர்ந்த எண்ணெய் பிசுக்கு மற்றும் அடைப்புகளை நீக்க சிறந்த வழி.
தேவையானவை: வெள்ளை வினிகர் (White Vinegar), பேக்கிங் சோடா, சூடான நீர், பழைய டூத் பிரஷ்.
ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீர் மற்றும் அரை கப் வினிகர் கலந்து, அதில் பர்னர்களை 15-20 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்னர், பர்னர்களை வெளியே எடுத்து, அதன் மீது பேக்கிங் சோடாவைத் தூவவும் (வினிகரும் சோடாவும் சேர்ந்து நுரைத்து அழுக்கை வெளியேற்றும்).
5 நிமிடங்கள் கழித்து, பழைய டூத் பிரஷ் கொண்டு பர்னரின் சிறிய துளைகளை நன்றாகத் தேய்க்கவும். நீரால் கழுவி, துணியால் துடைத்து காய வைக்கவேண்டும்.
6. அதிகமான கறை மற்றும் அடைப்பு இருந்தால் இந்த முறையைப் பயன்படுத்தலாம்.
ஒரு பாத்திரத்தில் சூடான நீர் எடுத்துக்கொண்டு, அதில் 2 ஸ்பூன் சிட்ரிக் ஆசிட் பொடி (அல்லது எலுமிச்சை சாறு + கல் உப்பு) கலக்கவும். இதில் பர்னர்களை 30 நிமிடங்கள் ஊறவைக்கவும்.பிரஷ் கொண்டு தேய்த்தால் அடைப்புகள் அனைத்தும் எளிதில் வந்துவிடும்.
முக்கியமானவை:
பர்னர்களைக் கழுவிய பிறகு, ஈரப்பதம் முற்றிலும் போகும் வரை காய்ந்த துணியால் துடைத்து, சிறிது நேரம் வெயிலிலோ அல்லது காற்றிலோ காயவைக்க வேண்டும். ஈரத்துடன் வைத்தால் சுடர் சரியாக எரியாது. ஆதலால்,பர்னர்கள் எந்த வகையான உலோகமாக இருந்தாலும், சுத்தம் செய்த பிறகு முழுமையாக உலர்ந்த பிறகே மீண்டும் கேஸ் ஸ்டவ்வில் பொருத்த வேண்டும்.
பர்னர்களைக் கழற்றுவதற்கு முன் கேஸ் சிலிண்டர் ரெகுலேட்டரை (Gas Regulator) கட்டாயம் அணைத்துவிட வேண்டும். இந்த முறைகளை பின்பற்றி கேஸ் ஸ்டவ் பர்னர்களை பளிச்சென்று வைத்து பராமரித்து நீடித்த உழைப்புக்கு தயார்படுத்தலாம்.
இப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள எளிய குறிப்புகளைப் பின்பற்றுவதன் மூலம், உங்கள் கேஸ் ஸ்டவ் பர்னர்களில் ஏற்படும் அடைப்புகளை முற்றிலும் நீக்கி, நீல நிறச் சுடருடன் திறம்பட எரிய வைக்க முடியும். இதன் மூலம் எரிபொருள் வீணாவது தடுக்கப்பட்டு, சமையல் நேரம் மிச்சமாவதோடு, உங்கள் சமையலறை சாதனங்களின் ஆயுட்காலமும் கணிசமாக அதிகரிக்கும்.