
ஜெனரேஷன் Z அல்லது ஜூமர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் 1997-ல் இருந்து 2012 வரை பிறந்தவர்களைக் குறிக்கிறது. இவர்களில் பலர் உள்முக சிந்தனையாளர்கள் அதாவது இன்ட்ரோவர்ட்டுகள் ஆக இருக்கிறார்கள் அதனால் நிறைய நன்மைகள் உள்ளன.
ஜூமர்கள் உள்முக சிந்தனையாளராக இருப்பதன் நன்மைகள்:
ஆழ்ந்த சிந்தனை:
இன்ட்ரோவர்ட்டுகள் இயல்பாகவே ஆழ்ந்து சிந்திக்கும் திறன் பெற்றவர்கள். இவர்களுக்கு மேலோட்டமான சிந்தனை என்பதே இருக்காது. ஆழ்ந்து சிந்திப்பதால் சிறந்த முடிவுகளை எடுக்கும் திறன் பெற்றவர்கள்.
படைப்பாற்றல்:
உள்முக சிந்தனையாளர்களின் படைப்பாற்றல் மற்றும் புதுமைகளை ஆதரிக்கும் திறன்கள் அதிகமாக இருக்கும். இவர்களது தனித்துவமிக்க கருத்துக்கள் பிறரால் மிகவும் மதிக்கப்படும். இன்றைய வேகமான தொழில்நுட்ப உலகத்தில் இந்தப் பண்புகள் மிகவும் அத்தியாவசியமாக கருதப்படுகின்றன.
கேட்கும் திறன்:
பொதுவாக உள்முக சிந்தனையாளர்கள் இயல்பாகவே கேட்பதில் திறமையானவர்கள். இதனால் அவர்கள் சிறந்த தொடர்பாளர்களாக இருக்கிறார்கள். பிறர் பேசுவதை ஆழ்ந்து பொறுமையாக உற்று கவனித்து கேட்பதால் அவர்கள் பிறருடைய கருத்துக்களை நன்றாக உள்வாங்கிக் கொள்கிறார்கள். அவற்றை சிறந்த முறையில் செயல்படுத்துகிறார்கள்.
சிந்தனை மிக்க பதில்களையும் நுண்ணறிவையும் வழங்குகிறார்கள். இவர்கள் தமது குடும்பத்திலும் மற்றும் தொழில் துறையிலும் வலுவான உறவுகளை உருவாக்குவதிலும் கூட்டு சூழல்களில் வெற்றியை அடைவதிலும் மிக முக்கியப் பங்கு வகிக்கிறார்கள்.
கவனம் மற்றும் உற்பத்தித் திறன்:
பொதுவாக உள்முக சிந்தனையாளர்கள் பிறரால் அல்லது பல தேவையில்லாத விஷயங்களால் எளிதில் திசை திருப்பப்படுவதில்லை. தங்கள் பணிகளில் முழுமையாக மூழ்கி விடுவார்கள். இதனால் உற்பத்தி திறன் அதிகரித்து செயல் திறனும் நன்றாக சிறப்பாக அமைகின்றது.
இந்த கவனத்துடன் இருக்கும் பாங்கு சமூக வலைதளங்கள் மற்றும் பிறரால் திசை திருப்பப்படாமல் கவனச் சிதறல் அடையாமல் தங்களது இலக்குகளை அடைய உதவுகிறது.
அர்த்தமுள்ள நட்பு மற்றும் உறவுகள்:
இவர்களுக்கு குறைவான ஆனால் நல்ல ஆழமான நட்புகளும் உறவுகளும் இருக்கும். அவர்களை தக்கவைத்துக் கொள்ள அவர்கள் பெரும் முயற்சி எடுப்பார்கள்.
அவர்களிடத்தில் மிகவும் விசுவாசம் மற்றும் அற்பணிப்பு உணர்வுடன் பழகுவார்கள். இதனால் இவர்களுடைய தொடர்புகள் சிறந்த முறையில் மதிக்கப்படும். உறவு முறையில் மற்றும் தொழில் துறையில் இந்த அணுகுமுறை மிகுந்த நன்மை பயக்கும்.
திடீர் முடிவுகளை தவிர்த்தல்;
இவர்கள் பொதுவாக திடீரென்று முடிவெடுக்கும் குணம் இல்லாதவர்களாக இருப்பார்கள். தேவையற்ற அபாயங்களைத் தவிர்க்கவும் அதிக சிந்தனையுடன் முடிவுகளை எடுக்கவும் இவர்களது உள்முகச் சிந்தனை உதவுகிறது. வேகமான தற்போதைய உலகில் இந்த எச்சரிக்கையான அணுகுமுறை நிலையான வெற்றிக்கும் குறைவான நஷ்டத்திற்கும் உதவுகிறது.
தனிமையில் அமைதி:
உள்முக சிந்தனையாளராக இருக்கும் ஜென் Zக்கள் தனிமையில் அமைதியை காண்கிறார்கள். இந்த மனநிலை அவர்களது சொந்தத் தேவைகள் மற்றும் ஆற்றல் நிலைகளை முன்னுரிமைப்படுத்த அனுமதிக்கிறது. தனிமையில் இருப்பது இவர்கள் தங்களுடைய ஆற்றலை புத்துணர்ச்சி பெற செய்து ஆரோக்கியமான வேலை வாய்ப்பு சமநிலையை பராமரிக்கவும், இலக்குகளை அடையவும் உதவுகிறது.
கல்வி மற்றும் தொழில் துறை வெற்றி:
பெரும்பாலும் உள்முக சிந்தனையாளர்கள் கல்வியில் சிறந்து விளங்குகிறார்கள். ஆழ்ந்த கவனம் செலுத்தும் திறன் மற்றும் சிந்தனையை திறன் இரண்டும் இதற்குக் காரணமாக அமைகிறது. இவர்களது சிறந்த கல்வித்திறன் தொழில் முன்னேற்றத்திற்கு உதவியாக இருக்கிறது.