உலகெங்கிலும் பல நூறு ஆண்டுகளாக அரிசியானது பிரதான உணவாக இருந்து வரும் நிலையில், கடந்த சில வருடங்களாக வெள்ளை அரிசி சாப்பிடுவதால் உடல் நலத்திற்கு கேடு என பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. வெள்ளை அரிசி என்பது சுத்திகரிப்பு செய்யப்பட்ட அரிசியாகும். பழுப்பு நிற அரிசியில் மேல் தோல் நீக்கப்படுவதால் அரிசி வெள்ளை நிறமாக மாறுகிறது. வெள்ளை அரிசியை சாப்பிடுவது உடல் நலத்திற்கு கேடு என சொல்லப்படும் நிலையில், இதனால் ஏற்படும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ஜீரணத்தை எளிதாக்கும்: மற்ற அரிசிகளை விட சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை அரிசி எளிதில் ஜீரணம் ஆகும். இதனால் நம்முடைய செரிமான ஆரோக்கியம் மேம்பட்டு, குடலுக்கு அதிக அழுத்தம் தராமல், குடல் சார்ந்த பல பிரச்சினைகள் நீங்க உதவும்.
அதிக கலோரி: உடல் எடையைக் கூட்ட விரும்புபவர்கள், வெள்ளை அரிசி சாப்பிடுவது நல்லது. அரிசியின் கலோரி அடர்த்தி அதிகம் என்பதால், கொஞ்சமாக சாப்பிட்டாலும் அதிலிருந்து அதிக கலோரிகள் கிடைத்து உடல் எடை கூட உதவும். அரிசியில் அதிகப்படியான மாவுச் சத்தான கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளதால், உடலுக்குத் தேவையான உடனடி ஆற்றலை வழங்குகிறது.
ஆற்றலை அதிகரிக்கும்: வெள்ளை அரிசி விரைவாக செரிமானம் ஆவதால் உடலில் விரைவாக ஆற்றலாக மாறுகிறது. எனவே விளையாட்டு வீரர்களுக்கு வெள்ளை அரிசி சிறந்த ஆற்றல் மூலமாக அமைகிறது. நமது உடலுக்குத் தேவையான கிளைக்கோஜன் சேமிப்பை நிரப்பி ஆற்றலை அதிகரிக்கிறது.
குறைந்த எதிர்ப்பு சத்துக்கள்: வெள்ளை அரிசியில் மற்ற தானியங்களைப் போலல்லாமல், ஆன்ட்டி நியூட்ரியன்ட்கள் குறைவாக உள்ளது. எனவே சுத்திகரிக்கப்பட்ட அரிசியில் அதன் தவிடு நீக்கப்படுவதால், உடலில் அழற்சியை ஏற்படுத்தும் எதிர்ப்பு சத்துக்கள் இதில் குறைவு.
விரைவில் கெட்டுப் போகாது: வெள்ளை அரிசியானது பிற தானியங்களுடன் ஒப்பிடுகையில் விரைவில் கெட்டுப்போகாது. சரியான முறையில் சேமித்து வைத்தால், நீண்ட காலம் வெள்ளை அரிசியை பயன்படுத்தலாம்.
பசையம் இல்லை: செலியாக் என்ற ஒரு வகை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெள்ளை அரிசி சிறந்த உணவாகும். இதில் இயற்கையாகவே பசையம் இல்லை. எனவே செரிமான அமைப்பின் மூலக்கூறுகளை உடைத்து, செரிமான மண்டலத்திலேயே ஒட்டிக் கொள்வதைத் தவிர்க்கிறது.
இப்படி பல வழிகளில் வெள்ளை அரிசி நமக்கு சிறந்த உணவாக அமைகிறது. இருப்பினும் இதை ஏன் மோசமான உணவு எனச் சொல்கிறார்கள் என்றால், இது நமது ரத்த சர்க்கரை அளவை விரைவாக உயர்த்திவிடும். மேலும் அதிக கலோரி அடர்த்தி காரணமாக உடற்பருமனை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.