

எலித் தொல்லை என்பது பெரும் பிரச்சனை. என்ன செய்தாலும், எப்படியான வழிமுறைகளை மேற்கொண்டாலும் அவற்றை ஒழிப்பது சுலபமாக இருக்காது. எலிகளின் மூலமாகவும், அவற்றின் கழிவுகள் மூலமாகவும் நோய்கள் ஏற்படக்கூடும் என்பதால் இது ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனையும் கூட. எனவே எலிப் பிரச்சனையை சிறிதும் அலட்சியம் செய்யாமல் வீட்டில் இருக்கும் எளிய பொருட்களைக் கொண்டு எலியை விரட்டலாம்.
எலி தொல்லையை நீக்க சமையலறையை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். உணவுப் பொருட்கள் சிந்திய நிலையில் இருந்தால் கட்டாயம் எறும்பு, பல்லி, எலிகள் போன்றவை வரும். எனவே உணவுப் பொருட்களை இறுக்கமான பாத்திரங்களில் மூடி வைக்கவும்.
எலிகளை விரட்ட இயற்கையான முறைகள்:
1) புதினா எண்ணெய்:
இயற்கையான முறையில் எலிகளை விரட்டலாம். இதற்கு புதினா எண்ணெயில் நனைத்த துணியை அல்லது பஞ்சை எலிகள் உலவும் இடங்களில் வைக்க இதன் வாசனை எலிகளை எரிச்சலூட்டி ஓடச் செய்து விடும். ஓரிரு நாட்களுக்கு ஒருமுறை அந்த எண்ணைத் துணியை மாற்றி வர எலிகள் வராது.
2) கிராம்பு, பட்டை மற்றும் மிளகு:
கிராம்பு, பட்டை மற்றும் மிளகைத் தூள் செய்து எலிகள் நடமாடும் இடங்களில் தூவி வரலாம் அல்லது அவற்றைத் தண்ணீரில் கலந்து ஸ்ப்ரே செய்ய அந்த நெடிக்கு எலிகள் ஓடிவிடும். பூண்டைக் கூட அரைத்து ஸ்ப்ரே செய்யலாம். பலன் கிடைக்கும்.
3) பிற வாசனை பொருட்கள்:
பெப்பர்மின்ட் எண்ணெய், புதினா, யூகலிப்டஸ் போன்ற வலுவான வாசனைகள் எலிகளை விரட்டும். புதினாக்களை சின்ன சின்ன தொட்டிகளில் வைத்து வளர்ப்பதும் ஒரு சிறந்த தீர்வாக இருக்கும்.
4) வெங்காயம்:
வெங்காயத்தை தோலுரித்து எலிகள் நடமாடும் பகுதிகளில் வைக்க அவற்றின் வாசனை எலிகளுக்கு பிடிக்காது என்பதால் எலிகள் ஓடிவிடும். ஆனால் வெங்காயம் இரண்டு மூன்று நாட்களில் அழுகிவிடும் என்பதால் அவற்றை அவ்வப்பொழுது மாற்றி விடுவது அவசியம்.
5) மிளகாய் விதைகள்:
வீட்டின் அறைகளில் உள்ள மூலைகளில் மிளகாய்களைக் கிள்ளி மிளகாய் விதைகளைத் தூவலாம். இவற்றின் காரத்தன்மைக்கு எலிகள் வீட்டினுள் வராது. நம் வீட்டுத் தோட்டங்களிலும் சிறிது தூவி வைக்க செடிகளைக் கடித்து பாழ் பண்ணாமல் இருக்கும்.
6) எலிப்பொறிகள்:
எலிகள் ஏற்கனவே வீட்டில் இருந்தால் அவற்றைப் பிடிக்க எலிப் பொறிகளை பயன்படுத்தலாம். வடை, வேர்க்கடலை, சாக்லேட் அல்லது வெண்ணெய் போன்ற உணவு பொருட்களை பொறிகளில் வைத்து எலிகளைப் பிடிக்கலாம்.
7) நுழைவு வழிகளை அடைத்தல்:
சுவர்களில் உள்ள ஓட்டைகள், கதவு மற்றும் ஜன்னல்களுக்கு அடியில் இருக்கும் இடைவெளிகள் போன்ற எலிகள் நுழையும் வழிகளைக் கண்டறிந்து அடைத்து விடுவது எலிகளின் வருகையை வெகுவாக குறைத்து விடும். குறிப்பாக கழிவுநீர் குழாய்கள் வழியாக எலிகள் வீட்டிற்குள் நுழைய அதிக வாய்ப்புள்ளது.
8) சுத்தமாக பராமரித்தல்:
சமையலறையில் உணவுகள் சிந்தாமலும், சிந்திய உணவுகளை உடனுக்குடன் அகற்றி விடுவதும், குப்பைகளை சேரவிடாமல் வீட்டை சுத்தமாக பராமரிப்பதும், வீட்டிற்குள் வைத்திருக்கும் குப்பைத் தொட்டிகளை எப்பொழுதும் மூடி வைப்பதும் எலிகளை விருந்தாளியாக அழைத்து வராது.
9) அபாயகரமான முறைகள்:
எலி விஷம் மிகவும் ஆபத்தானது. இதனை சிறு குழந்தைகள் உள்ள வீடுகளில் நிச்சயம் பயன்படுத்தக் கூடாது. இது மனிதர்கள் மற்றும் பிற விலங்குகளுக்கும் தீங்கு விளைவிக்கும். எனவே முடிந்த வரை இவற்றைத் தவிர்த்து இயற்கை முறைகளை பின்பற்றுவதுதான் பாதுகாப்பானது.
எலிகளின் கழிவுகள் மற்றும் சிறுநீர் மூலம் பல நோய்கள் பரவக் கூடும் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வீட்டில் எலித் தொல்லை அதிகம் இருந்தால், தொழில்முறை பூச்சிக் கட்டுப்பாட்டு சேவைகளின் உதவியை நாடுவது சிறப்பு.