

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வரும் நிலையில், பல இடங்களில் மழைநீர் அதிக அளவில் தேங்கியுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது எலி காய்ச்சல் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் தேங்கிய மழை நீரில் வெறும் காலுடன் நடக்க வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சுழல் வடிவ நுண்ணுயிரியான 'லெப்டோஸ்பைரா' பாக்டீரியாவால் எலி காய்ச்சல் ஏற்படுகிறது. முதலில் விலங்குகளுக்கு பரவுகின்ற எலி காய்ச்சல், அதன் பிறகே மனிதர்களுக்கு பரவுகிறது. இது நுரையீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் குஜராத், கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும், அந்தமான் நிக்கோபார் தீவிலும் எலி காய்ச்சல் பாதிப்பைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் சென்னை உட்பட 10 இடங்களில் எலி காய்ச்சல் நோயைக் கண்டறிய மத்திய அரசால் ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் எலி காய்ச்சல் பரவுவதை தடுக்க பொதுமக்கள் வெறும் காலுடன் மழை நீரில் நடக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
எலியின் கழிவு வாயிலாகவும், பன்றி, நாய் மற்றும் கால்நடைகளின் கழிவுகள் வாயிலாகவும் மனிதர்களுக்கு எலி காய்ச்சல் பரவுகிறது. தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் எலி காய்ச்சல் பரவுவது தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 2021 ஆம் ஆண்டில் 1,046 பேர் எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்தது. 2022 இல் 2,612 பேருக்கும், 2023 இல் 3,002 பேருக்கும் எலி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது.
எலி காய்ச்சல் பாதிப்பு குறித்து பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், “2024இல் 2,000-க்கும் மேற்பட்டோர் எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் நடப்பாண்டில் இதுவரை 1,500 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்பு அதிகமாக உள்ள மாவட்டங்களில் மருத்துவ கண்காணிப்பும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அதோடு தேவைப்படும் இடங்களில் சிகிச்சையளிக்க நடமாடும் மருத்துவ முகாம்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கால்நடை மற்றும் எலிகளின் கழிவுகள், தேங்கியுள்ள நீரில் கலந்திருக்க வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் யாரும் வெறும் காலுடன் மழை நீரில் நடக்க வேண்டாம். தேங்கிய நீரில் நடக்கும் போது, மனிதர்களுக்கு எலி காய்ச்சல் பாதிப்பு எளிதாக பரவி விடும். எலி காய்ச்சல் பாதிப்பைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், பொதுமக்களும் ஒத்துழைப்பு தர வேண்டியது அவசியம்.
வெளியே சென்று வீட்டிற்கு வரும்போது கை மற்றும் கால்களை சோப்பு போட்டு நன்றாக கழுவுவது நல்லது. தொற்று பரவும் அபாயம் உள்ள நிலையில், முடிந்தால் குளித்துவிட்டு வீட்டிற்குள் செல்வது நல்லது. பருவ மழை முடிந்து நோய்த் தொற்று குறையும் வரை பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய அவசியம்” என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.