

நாம் நம்முடைய குளிர்சாதனப் பெட்டியை துர்வாடை இல்லாமலும் மற்றும் மிக சுத்தமாகவும் வைத்திருக்க வேண்டியது அவசியமான ஒன்று. நம்முடைய ஃப்ரிட்ஜில் ஃப்ரீசரில் சில சமயம் ஐஸ் கட்டிகள் உருவாகிவிடும். இதை சுத்தம் செய்வது சிரமமாக இருக்கும். ஐஸ் கட்டிகள் உருகுவதற்கு அதிக நேரம் ஆகும். ஆனால், சிரமமில்லாமல் ஐஸ்கட்டிகளையும் கெட்ட வாடையையும் சுடு நீரால் நீங்கச் செய்யலாம். இப்படி சுடுநீர் பயன்படுத்தும்போது எவ்வித கறை இருந்தாலும் அது நீங்கும்.
மிக அதிக அளவில் செலவு செய்யாமல் உங்கள் ஃப்ரிட்ஜ் சுத்தமாக சுடுநீரே போதுமானது. இது பலமுனைப் பயன்களைத் தரக்கூடியது. ஐஸ் கட்டிகளை
டீஃப்ராஸ்ட் செய்ய பல மணி நேரம் ஆகும். ஒருசிலர் ஐஸ் கட்டிகளை கத்தியால் வெட்டி எடுப்பார்கள். அது ப்ரிட்ஜ்ஜிற்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். ஐஸ் கட்டிகள் இல்லாமல் சுத்தமாக குளிர்சாதனப் பெட்டியை வைக்க மின்சாரமும் மிச்சமாகும். அதிக அளவு மின்சாரம் தேவைப்படாது. இதன் மூலம் உங்கள் மின்சாரக் கட்டணம் குறையும். இந்த மாதிரி சுடுநீர் கொண்டு சுத்தம் செய்வதற்கு ஒற்றைக் கதவு ஃப்ரிட்ஜ் ஏற்புடையது.
சுடு நீரை எப்படிப் பயன்படுத்துவது?
முதலில் ஃப்ரிட்ஜ் சுவிட்சை ஆஃப் செய்து விடுங்கள். ப்ளக்கையும் எடுத்து விடலாம். உள்ளே இருக்கும் அனைத்து உணவுப் பொருட்களையும் முழுவதுமாக எடுத்து விடுங்கள். தண்ணீரை நன்றாகக் கொதிக்க வையுங்கள். அதை நல்ல அடர்த்தியான கண்ணாடி க்ளாஸ், சிராமிக் மக் அல்லது சூடு தாங்கும் பௌலில் எடுத்து வைக்கவும். அதிகமாக கொதிக்க வைக்க வேண்டாம். இதை ஃப்ரிட்ஜ் கதவு, ஃப்ரீசர் அருகில் வையுங்கள்.
ஃப்ரிட்ஜ் கதவை 15 நிமிடம் மூடி விடுங்கள். இந்த சுடுநீர் ஆவி ஐஸ் கட்டிகளை உருக வைக்கும். நன்கு உருகிய பிறகு சுத்தமான மென்மையான துணியால் நன்கு துடைத்து விட வேண்டும். உள்ளே உள்ள ஃப்ரிட்ஜ் ஷெல்ஃபுகளை வெதுவெதுப்பான நீருடன் ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து துடைக்கவும்.
இதற்குப் பிறகு நல்ல சுத்தமான டவல் கொண்டு ஃப்ரிட்ஜ்ஜின் உட்புறத்தை நன்கு துடைக்கவும். ஈரமில்லாமல் துடைத்த பிறகு உணவுப் பொருட்களை உள்ளே வைக்கலாம். இந்த மாதிரி செய்வது நல்லது. ஆனால், சிலர் கெமிக்கல் சேர்த்து சுரண்டி சுத்தம் செய்வார்கள். இதனால் ஃப்ரிட்ஜ்ஜில் கோடுகள் ஏற்படலாம். அதோடு, ஃப்ரிட்ஜ்ஜின் கூலிங் சிஸ்டம் பாதிக்கப்படலாம்.
மேலும், கெமிக்கல்கள் பயன்படுத்துவதால் உணவுப் பொருட்களில் அதன் வாசனை ஏறிவிடும். ஆகையால், ஆவியால் சுத்தம் செய்வதுதான் இயற்கையான வழியாகும். இந்த முறையினால் ஐஸ் கட்டிகள் சுலபமாக உருகும். இந்த மாதிரி வெந்நீரால் சுத்தம் செய்வதன் மூலம் உங்கள் குளிர்சாதனப் பெட்டி அதிக நாள் நல்ல நிலையிலேயே இருக்கும்.
ஃப்ரிட்ஜ் துர்நாற்றம் நீங்க: உங்கள் ஃப்ரிட்ஜ்ஜில் கெட்டவாடை வராமலிருக்க ஒரு சிறிய கிண்ணத்தில் பேக்கிங் சோடா அல்லது காபி பௌடர் வைக்கலாம். ஃப்ரிட்ஜ்ஜில் உணவுப்பொருட்களை அளவிற்கு அதிகமாக அடைக்க வேண்டாம். ஃப்ரிட்ஜ்ஜில் ஏதாவது சிந்தி விட்டால் உடனே சுத்தம் செய்யவும். அப்படிச் செய்யத் தவறினால் கறை படுவதுடன் பூஞ்சையும் ஏற்படும்.
அதிக வாசனை கொண்ட பொருட்களை நன்கு மூடி வைக்கவும் ஃப்ரிட்ஜ் கதவுகளில் உள்ள காஸ்கெட்டுகளையும் நன்கு சுத்தம் செய்ய வேண்டும். இந்த மாதிரி சுடுநீரைக் கொண்டு ஆறு வாரத்திற்கு ஒருமுறை ஃப்ரிட்ஜ்ஜை சுத்தம் செய்யவும். இப்படிச் செய்வதன் மூலம் ஃப்ரிட்ஜ் நல்ல நிலையில் இருப்பதால் உங்களுக்கு செலவை ஏற்படுத்தாது.