

மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் ஒருவித தனித்துவமான குணம் உண்டு. அது நன்மை தருவதாகவும் இருக்கலாம் அல்லது தீமை விளைவிக்கக் கூடியதாகவும் இருக்கலாம். ஒருசிலரிடம் மட்டும் அதிசயிக்கத்தக்க மேன்மையான குணங்கள் நிறைந்திருக்கும். அப்படிப்பட்டவர்களை. 'அழகிய ஆன்மா' (Beautiful Soul) கொண்டவர்கள் என அழைக்கிறோம். அவர்களிடம் காணப்படும் ஏழு வகையான சிறந்த பண்புகள் குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.
1. இருக்கும் இடத்தை இதமான சூழலாக உருவாக்கும் பண்பு: மற்றவர்களை திருப்திப்படுத்த வேண்டுமென்ற எண்ணம் ஏதுமின்றி, அவர்கள் அவர்களாக இருப்பதாலேயே அனைவராலும் அவர்கள் விரும்பப்படுவர். அவர்களிடமுள்ள வெளிப்படைத் தன்மை, முழுமையுற்ற அறிவாற்றல், இதமான பேச்சு போன்ற நற்குணங்கள் அவர்களைச் சுற்றியுள்ள மற்ற அனைவரையும் அவர்கள்பால் கவர்ந்திழுக்கும். அவர்களுடன் பேசிக்கொண்டிருப்பதே ஒரு சுகானுபவம் தரும்.
2. எப்போதும் மென்மையான குரலில் உண்மையே பேசுதல்: அவர்கள் பேசுவது ஆதாரத்துடன்கூடிய உண்மையான உரையாடலாக இருக்கும். அவர்கள் கூறும் விதம் மற்றவர்களை எவ்விதத்திலும் புண்படுத்தாது. இப்படி உண்மைத் தன்மையுடன் கருணையுள்ளமும் கொண்டிருப்பது மிக அபூர்வம். இதற்காகவே, சமூக வட்டாரங்களில், அவர்கள் மீது நம்பிக்கை கொண்டு, வழிகாட்டிகளாக ஏற்றுக்கொண்ட நல்ல நண்பர்கள் பலர் இருப்பர்.
3. ஆழ்ந்து சிந்திக்கவும், சிந்தனையிலேயே மூழ்கிவிடாமலிருக்கவும் அறிந்திருப்பது: அழகிய ஆன்மா கொண்ட ஒருவர் ஆழ்ந்த சிந்தனையாளராகவும், எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவராகவும் இருப்பார். இருந்தாலும், அவருக்கு உணர்ச்சிகளைக் கையாள்வதும், அவற்றிற்கு அடிமையாகாதிருப்பதும் கைவந்த கலை. இது அவரின் ஆழ் மனது முதிர்ச்சியைக் காட்டும் ஒரு வலுவான குறிகாட்டி. கஷ்டமான நேரங்களில் உண்டாகும் அதீத உணர்வுகளால் அவரை ஓய்ந்துவிடச் செய்ய முடியாது.
4. மற்றவர்கள் கவனிக்க முடியாத சிறு சிறு விஷயங்களையும் கூர்ந்து கவனிக்கும் திறன்: இந்த மாதிரியானதொரு திறமை மாயாஜாலம் போன்றது. ஒருவர் குரலில் உண்டாகும் சிறு பிசிரையும், அந்நியர் ஒருவர் தனிமை உணர்வில் தடுமாறுவதையும், எவருமே முயற்சிக்காத ஒரு விஷயத்தில், ஒருவர் முழு முயற்சியுடன் ஈடுபட்டுக் கொண்டிருப்பதையும் இவர் கவனிக்கத் தவறுவதே இல்லை. இத்திறமையை, மனோதத்துவ நிபுணர்கள் உயர் பரிவுத் துல்லியம் (high empathic accuracy) என்கின்றனர். ஒருவரின் உணர்ச்சிகளின் உண்மையான தன்மையையும் அதன் பின்னால் உள்ள காரணங்களையும் பரிவோடு துல்லியமாக கண்டறிவதாகும் இது.
5. கணக்குப் பார்க்காமல் உதவி செய்யும் குணம்: அழகிய ஆன்மா கொண்டவர், பிறருக்குக் கொடுப்பது, உதவி செய்வது, கஷ்டங்களில் துணை நிற்பது போன்ற நல்ல செயல்களை எந்த எதிர்பார்ப்புமின்றி, எப்பொழுதும் செய்துகொண்டே இருப்பர். இது அவரின் பிறவிக் குணங்களில் ஒன்றாக இருக்கும். இவர் செய்த உதவிகளை அன்றைக்கே அவர் மறந்தும் விடுவார். ஆனால், இவரிடம் உதவி பெற்றவர்கள் இவரை வாழ்நாள் முழுக்க நினைத்துக்கொண்டிருப்பர். புகழுக்காக உதவி செய்பவர்கள் மத்தியில், இவரைப் போன்றவர்கள் ஆத்ம திருப்திக்காக அதை செய்து கொண்டிருக்கின்றனர்.
6. சந்திக்கும் ஒவ்வொரு மனிதரையும் மனிதாபிமானத்துடன் நடத்தும் குணம்: அழகிய ஆன்மா உடையவர்கள் மனிதர்களை எடை போட முயற்சிக்காமல் அவர்களைப் புரிந்துகொள்ளவே முயல்வர். அதாவது, எவரிடமும் குற்றம் குறை கண்டுபிடிக்காமல், அவர்களிடம் இயற்கையாய் அமையப்பெற்ற உள்ளார்ந்த மதிப்பறிந்து பழகுவார்கள். இம்மாதிரியான மனோபாவம் அவர்களின் குடும்பத்திற்குள் சண்டை சச்சரவு வராமல் பாதுகாக்க உதவும்.
7. அழகிய ஆன்மா உடையவர்களை பிறர் மீண்டும் மீண்டும் சந்திக்க விரும்புவது: அழகிய ஆன்மா உடைய ஒருவரை சந்தித்த பின் அவரின் இதமான பேச்சு பிறரை மீண்டும் அவரை சந்திக்கத் தூண்டும். அவருடன் பேசும்போது அவரின் கண்கள் பிறர் கண்களை நேருக்கு நேர் பார்த்து, குறுக்கீடின்றி பிறர் பேசுவதைக் கேட்பதைக் காண முடியும். அவரிடம் மற்றவர் கூறியதை நீண்ட நாள் நினைவில் கொள்ளவும், மற்றவர் வளர்ச்சியை கண்காணிக்கவும், உணர்ச்சிகளை ஏற்றுக்கொள்ளவும் செய்வார் அவர்.
மேலே கூறப்பட்ட ஏழு வகைப் பண்புகளும், தொழில் நுட்பத்தாலோ அல்லது போர்த் தந்திரங்கள் மூலமாகவோ பெறப்படுவதல்ல. அழகிய ஆன்மா உள்ளவர்களின் இயல்பான வாழ்வியல் முறையே இப்படித்தான்.