பெரும்பான்மையான மக்கள் வலது கைப்பழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள். ஏனென்றால், மனித மூளையின் அமைப்பும், மரபியல் காரணிகளும், நரம்பியல், பரிணாம காரணிகளும் இதற்குக் காரணங்களாக இருக்கின்றன. ஆனால், எப்போதும் இல்லாவிட்டாலும் கூட அவ்வப்போது இடது கையைப் பயன்படுத்தினாலே ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைப் பெற முடியும். அது பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
இடது கையை அவ்வப்போது பயன்படுத்துவதால் உண்டாகும் நன்மைகள்:
மூளை வளர்ச்சி: மனிதனின் மூளை இரண்டு அரைக் கோளங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொன்றும் வெவ்வேறு செயல்பாடுகளுக்குக் காரணமாக இருக்கின்றன. பெரும்பாலான நபர்களுக்கு மொழி மற்றும் சிறந்த மோட்டார் திறன்கள் இடது அரைக்கோளத்தால் நிர்வகிக்கப்படுகின்றன. இது உடலின் வலது பாகத்தை கட்டுப்படுத்துகிறது. இடது கையை ஈடுபடுத்துவது மூளையின் வலது அரைக்கோளத்தைத் தூண்டும். இது பெரும்பாலும் படைப்பாற்றல் மற்றும் இடம் சார்ந்த விழிப்புணர்வுடன் தொடர்புடையது. இந்தத் தூண்டுதல் மேம்பட்ட அறிவாற்றல் செயல்பாடுகளுக்கு வழி வகுக்கும்.
சிறப்பான ஒருங்கிணைப்பு: இடது கையை அவ்வப்போது பயன்படுத்துவது கண், கை ஒருங்கிணைப்பு மற்றும் சிறந்த உடல் இயக்கத் திறன்களை மேம்படுத்தலாம். விளையாட்டு முதல் இசைக் கருவிகளை வாசிப்பது வரை பல்வேறு செயல்பாடுகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.
சமமான உடல் அழுத்தம்: பலரும் வலது கையை அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். இது தசை நாண் அழற்சி, கார்பல டன்னல் சிண்ட்ரோம் போன்ற அதிகப்படியான காயங்களுக்கு வழிவகுக்கும். மாற்று உபயோகமாக இடது கையை பயன்படுத்தும்போது உடல் அழுத்தத்தை சமமாக விநியோகிக்க உதவும்.
சாதகமான செயல்பாடுகள்: இடது கையை மிகவும் எளிதாகப் பயன்படுத்த ஒருவர் தன்னை பயிற்றுவித்துக்கொள்ள வேண்டும். இதனால் விளையாட்டு மற்றும் இசைக்கருவிகள் வாசிப்பது உள்ளிட்ட பல செயல்பாடுகளில் சாதகமாக இருக்கும்.
சவால் மற்றும் தகவமைப்பு: பொதுவாக, வலது புறம் செய்யப்படும் பணிகளுக்கு இடது கையை பயன்படுத்துவது சிறிது சவாலானதாகும். ஆனால், அது சமயத்தில் சிக்கலை தீர்க்கும் திறன் மற்றும் தகவமைப்புத் திறனை மேம்படுத்துகிறது.
அறிவாற்றல் நன்மைகள்: இடது கையை அவ்வப்போது பயன்படுத்துவது நியூரோ பிளாஸ்டிசிட்டியை மேம்படுத்தும். இது புதிய நரம்பியல் இணைப்புகளை உருவாக்குவதன் மூலம் தன்னை மறு சீரமைக்கும் மூளையின் திறன் ஆகும்.
அதிகரித்த கவனம்: பொதுவாக, இடது கையை அவ்வளவாக நாம் பயன்படுத்த மாட்டோம். எப்போதாவது அதை பயன்படுத்தும்போது செய்யும் வேலையை நினைவாற்றலோடு கவனத்தோடு செய்வோம். அதனால் அது செறிவு மற்றும் நினைவாற்றலை அதிகரிக்கக்கூடும்.
படைப்பாற்றல் அதிகரிப்பு: சில ஆய்வுகள், ஆதிக்கம் செலுத்தாத கையை பயன்படுத்துவது படைப்பாற்றல் தொடர்பான மூளையின் வெவ்வேறு பகுதிகளை செயல்படுத்துகிறது. புதிய யோசனைகள் மற்றும் அணுகுமுறைகளை வளர்க்கும் என்று கூறுகிறது. அதுபோலவே, இடது கை பழக்கம் உள்ளவர்கள் அதாவது அவர்களுக்கு ஆதிக்கம் செலுத்தும் கையாக இடது கை இருக்கும். அவர்கள் அவ்வப்போது வலது கையை பயன்படுத்தும்போது அவர்களுக்கும் மேற்சொன்ன நன்மைகள் கிடைக்கும்.