கார்த்திகை தீபத் திருநாள் நெருங்கிவிட்டது. வீட்டில் உள்ள வெண்கலப் பாத்திரங்கள் மற்றும் விளக்குகளை எண்ணெய் பிசுக்குகள் போக நன்றாக சுத்தம் செய்து பளபளப்பாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும். அதற்கு சில டிப்ஸ்களை இந்தப் பதிவில் காண்போம்.
1. புளிக்கரைச்சல்: பாத்திரங்களை புதிதுப் போல ஜொலிக்கவைக்க புளிக்கரைச்சலைதான் முன்பெல்லாம் பயன்படுத்துவார்கள். பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் புளியை சேர்த்து நன்றாகக் கொதிக்க விட்டு பிறகு ஆற வைக்கவும். இப்போது இந்த புளிக்கரைச்சலை பித்தளை பாத்திரங்களில் போட்டு ஊற வைத்து எடுத்து கழுவினால் பாத்திரம் புதிது போல ஜொலிக்கும்.
2. கோலமாவு: வீட்டில் பயன்படுத்தும் கோலமாவை விளக்குகளில் போட்டு நன்றாகப் பாத்திரம் தேய்ப்பதுப்போல தேய்த்துக் கழுவினால், விளக்குகள் பளபளப்பாக ஆகிவிடும்.
3. பீதாம்பரி பவுடர்: தற்போது சந்தையில் பாத்திரங்களை பளபளப்பாக மாற்ற இந்த பீதாம்பரி பவுடர் விற்கப்படுகிறது. இது பித்தளையில் படிந்திருக்கும் அழுக்கு, எண்ணெய் பசை, மங்கிய நிறம் ஆகியவற்றை சரிசெய்ய உதவுகிறது.
4. எலுமிச்சை சாறு மற்றும் பேக்கிங் சோடா: வீட்டிலேயே இருக்கும் எலுமிச்சை சாறு மற்றும் பேக்கிங் சோடாவை பேஸ்ட் போல கலந்து வைத்துக்கொள்ளவும். இப்போது இந்த பேஸ்ட்டை வைத்து பித்தளை பாத்திரங்களை அழுத்தி தேய்க்கவும். பிறகு பாத்திரம் கழுவும் பவுடரை பயன்படுத்தி நன்றாகக் கழுவி காய வைக்கவும்.
5. கடலைமாவு மற்றும் வினிகர்: கடலைமாவு மற்றும் வினிகரை பேஸ்ட் போல கலந்துக் கொள்ளவும். இதை விளக்குகள் மற்றும் பாத்திரங்கள் மீது தடவி அரை மணி நேரம் ஊறவிடவும். பிறகு பாத்திரம் கழுவும் பவுடரை வைத்து கழுவவும். பாத்திரங்கள் பளிச்சென்று மாறிவிடும்.
6. டூத்பேஸ்ட்: வீட்டில் இருக்கும் டூத்பேஸ்ட்டை பயன்படுத்தி பாத்திரத்தை ஜொலிக்க வைக்கலாம். ஜெல் போன்று இருக்கும் டூத்பேஸ்ட்டை தவிர மற்றவற்றை பயன்படுத்தலாம். முதலில் நன்றாக பித்தளை பாத்திரத்தை கழுவி எடுத்துக்கொண்டு பேஸ்ட் வைத்து நன்றாக தேய்த்து கழுவவும். எண்ணெய் பிசுக்கு போய் பாத்திரம் நன்றாக ஜொலிக்கும். விளக்குகளை கழுவும்போது டூத்பிரஷ் புதிதாக வாங்கி அதைப் பயன்படுத்தி கழுவவும். அப்போதுதான் இடுக்குகளில் இருக்கும் அழுக்கை எளிதாக நீக்கலாம். பாத்திரங்களை கழுவியதும் நன்றாக வெயிலில் காய வைப்பது நல்லதாகும்.