ஒரு வருடத்தில் 25 ஏகாதசிகள் வந்தாலும் மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசியும், கார்த்திகை மாதத்தில் வரும் கைசிக ஏகாதசியும் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. பாணர் குலத்தைச் சேர்ந்த நம்பாடுவான் கைசிகப் பண்ணிசையில் இறைவனைப் பாடியதால் இந்த ஏகாதசியை கைசிக ஏகாதசி என்று அழைக்கிறார்கள். கைசிக ஏகாதசி விரதம் இருந்தால் வருடத்தின் அனைத்து ஏகாதசி விரதங்களும் இருந்த பலன் உண்டு. அத்தகைய கைசிக ஏகாதசி குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
கைசிக ஏகாதசி வரலாறு:
‘மகேந்திரகிரி' என்ற மலையடிவாரத்தில் வசித்து வந்த ஒரு பாணன் கைசிக பண்ணில் பாடுவதில் வல்லவர். இவர் பெயர் நம்பாடுவான் என்பதாகும். இவர் ஒரு நாள் கோயிலுக்குச் செல்லும்போது வனப் பகுதியில் இருந்த பிரம்மராட்சசன் ஒருவன் நம்பாடுவானை பிடித்துத் தனக்கு உணவாக்கிக் கொள்ளப் போவதாகத் தெரிவித்தான். இதற்கு, "நான் கார்த்திகை ஏகாதசி விரதத்தில் இருப்பதால் விரதம் முடித்துப் பெருமாளை வணங்கிவிட்டு வரும்போது உனது பசிக்கு உணவாவேன்'' என்று சத்தியம் செய்து கொடுக்க , ராட்சசனும் அதற்கு சம்மதித்து அவரை அனுப்பினான்.
வழக்கம்போல் கோயிலுக்கு வெளியே துவஜஸ்தம்பத்துக்கு எதிரே நின்று பாடி, அழகிய நம்பிராயரை தரிசிக்க வேண்டுமென மனதில் எண்ணியவுடன் கொடிமரம் விலகிக் காட்சி தர பெருமாளைக் கண்டு மகிழ்ந்து தனது விரதம் முடித்து திரும்பினார் நம்பாடுவான்.
நம்பாடுவான் திரும்பும்போது குறுங்குடி அழகிய நம்பி முதியவர் வேடத்தில் நம்பாடுவானுக்கு எதிரில் வந்து, "இவ்வழியே செல்லாதே. பிரம்மராட்சசன் இருக்கிறான். அவன் உன்னைத் தின்று விடுவான்'' என்று சொல்ல, நம்பாடுவான் சிரித்துக்கொண்டே, "அவனுக்கு உணவாவதற்காகவே நான் செல்கிறேன். பெருமானே சொன்னாலும் செய்த சத்தியத்தை மீற மாட்டேன்'' என்று கூறியதும் எம்பெருமான் நம்பாடுவானுக்கு சுயரூபத்தைக் காட்டி மறைந்தார்.
பிரம்மராட்சசனைச் சந்தித்த நம்பாடுவான், "என்னைப் புசித்துப் பசியாறு'' என்றார். "அவன் எனக்குப் பசியே இல்லை. அதற்கு பதிலாக நீ உனது விரதத்தால் பெற்ற பலனை எனக்கு கொடு'' என்று கேட்க, நம்பாடுவான் முடியாதென்று மறுக்க, பிரம்மராட்சசன், “முற்பிறவியில் யோக சர்மா என்ற பிராமணனாக இருந்தேன். யாகத்தை இழிவாகக் கருதியதால் இப்படியாக நேர்ந்தது. எனது பிரம்மராட்சச உருவம் நீங்க நீ பெற்ற விரத பலத்தில் கால் பங்காவது எனக்குக் கொடு'' என்று நம்பாடுவானின் பாதத்தில் வீழ்ந்து சரணடைந்தான். அதையடுத்து நம்பாடுவானும் பலனைத் தருவதாகச் சொல்ல, ராட்சசனும் சுய உருவடைந்தான்.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த கார்த்திகை மாத கைசிக ஏகாதசி விரத தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. கைசிக ஏகாதசியின் மகத்துவம் வராஹ புராணத்தின் ஒரு பகுதியான கைசிக புராணத்தில் காணப்படுகிறது.
இறைவனிடம் பக்தி, தர்மத்தைக் கடைப்பிடிப்பது, உலகைத் துறக்கத் தயாராக இருப்பது ஆகியவை முக்கியமான அளவுகோள்களாக இருக்கின்றன. கைசிக ஏகாதசி அன்று உப்பில்லாமல் விரதம் கடைப்பிடித்தால் 108 ஏகாதசிகள் விரதம் இருந்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். பழம், பால், பயத்தம் கஞ்சி சாப்பிட்டு பகவானை பிரார்த்திக்க நல்ல பயன் பெறலாம்.