
வீட்டை நன்றாக கட்டிவிட்டால் மட்டும் போதாது. அதை எப்பொழுதும் சரியான முறையில் பராமரிக்க வேண்டும். அப்படி பராமரித்தால்தான் வீடு எப்பொழுதும் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். இல்லையேல் பழைய வீடுபோல் தோற்றமளிக்கும். அதற்கு வீட்டையும் அதற்குள் இருக்கும் ஒவ்வொரு பொருளையும் எப்படி பராமரிக்க வேண்டும் என்பதை இப்பதிவில் காண்போம்.
வீட்டில் இருக்கும் கதவு அதன் கைப்பிடி சுவர், நிலைப்படி என்று அனைத்தையும் சுத்தமாக துடைத்து வைக்க வேண்டும். அப்படி துடைக்கும்பொழுது ஈரத்துணி வைத்து துடைக்க கூடாது.
அதேபோல் கதவுகளின் கீல்கள், பூட்டுகள் ஆகியவற்றை அவ்வப்போது எண்ணெய் விட்டு சுத்தம் செய்யவேண்டும். அப்பொழுதே சரியில்லாத போல்ட், பூட்டு சாவிகளை அப்புறப்படுத்தி,புதியனவற்றை பொருத்திவிட வேண்டும். அப்பொழுதுதான் திடீர் ஊர் பயணம் புறப்படும் பொழுது பூட்டி திறப்பதற்கு எளிதாக இருக்கும். டென்ஷன் இல்லாமல் கிளம்பலாம்.
சில கதவுகள் சுருங்கி, விரிந்து காலநிலைக்கு ஏற்ப மாறும்பொழுது கதவு கீழே தரையை தட்டுவது நடக்கும். உரிய கார்பெண்டரை அழைத்து உடனே சரி செய்துவிடுவது நல்லது.
குறிப்பாக மாடுலர் கிச்சனில் அதன் ஷெல்ப்புகளில் போட்டு இருக்கும் கைப்பிடிகள் சில நேரம் புடவை மற்றும் நைட்டிகளில் சிக்கிக் கொள்வதுண்டு. இதனால் நைட்டி கிழிவதற்கான வாய்ப்புகளும் அதிகம். துணிகள் அதில் மாட்டிக்கொண்டு கீழே விழும் அபாயமும் ஏற்படுவதுண்டு. அவற்றை உடனடியாக பார்த்து சரியான கைப்பிடியை, துணிகளை கிழிக்காத வண்ணம் பார்த்து அமைப்பது அவசியம் ஆனது.
கதவு, ஜன்னல் வழியுடன் ஏ.சிக் காகத் துளையிட்டிருக்கும் வழியிலும் மழைத்தண்ணீர் வராதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்.
மொட்டை மாடியில் மழை தண்ணீர் செல்லும் குழாய்களில் அடைப்பு இல்லாதபடிக்கு அதில் மரத்தின் இலை தழைகள் அடைத்துக்கொள்ளாது சுத்தம் செய்து வைத்திருக்க வேண்டியது அவசியம். இல்லையேல் இவைகள் எல்லாம் தண்ணீர் போகும் வழியை அடைத்துக் கொண்டு அதன் வழியாக அது வீட்டு சுவற்றினில் ஓதங்கொள்ள வைக்கும்.
அதேபோல் எல்லா கதவுகளுக்கும் ஸ்டாப்பர் பொருத்த வேண்டும். ஜன்னல்களைத் திறந்து வைக்க கொக்கிகள் அவசியம். அப்பொழுதுதான் காற்றில் அடிபட்டு சத்தம் வராமல் இருக்கும். மரச்சட்டங்களும் தெறித்து உடைந்து போகாமல் இருக்கும்.
பர்னிச்சர்களின் அடியிலும் புஷ் போட்டு வைத்துவிட்டால் தரை பாழாகாமல் இருக்கும்.
ஊஞ்சல் வைத்திருப்பவர்கள் அதன் சங்கிலிகளை கவனித்து துரு ஏறாதபடிக்கு, நல்ல உறுதியாக இருக்கின்றதா என்பதையும் உறுதிப்படுத்தி வைத்திருக்க வேண்டியது அவசியம்.
எக்ஸாஸ்ட் ஃபேன், சிம்னி, ஜன்னல்களை அவ்வப்போது சுத்தப்படுத்தி விடவேண்டும். இல்லையேல் சிம்னியில் உள்ள எண்ணெய் அடுப்பில் கசிய வாய்ப்பு உண்டு.
ஜன்னல் கம்பிகள், மரத்தால் ஆன அனைத்து பொருட்களுக்கும் வார்னிஷ், வண்ணம் பூசி பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். இது அனைத்து பொருட்களையும் நீண்ட நாள் உழைக்கும் படி வைத்திருக்க உதவிபுரியும்.
பாத்ரூம் கதவுகளில் வார்னிஷ், பெயிண்ட் அடித்தவுடன் அதில் தண்ணீர் பட்டு வீணாகாமல் இருப்பதற்காக கதவின் உள்பகுதியில் ஷீட் அடித்திருப்பார்கள். அந்த ஷீட் கையில் கிழித்து விடாதபடிக்கு இருக்க வேண்டும். இல்லையேல் கை வைக்கும் போது கையில் குத்தி ரணப்படுத்தும்.
கதவிடுக்கில் மாங்கொட்டை வைத்து உடைப்பது, அக்ரூட் வைத்து உடைப்பது போன்றவற்றை தவிர்ப்பது நலம். இல்லையேல் கதவு அழுக்காக அந்த இடத்தில் மட்டும் மரம் துருத்திக் கொண்டு இருக்கும்.
ஸ்லைடிங் ஜன்னல்களில் அதன் இடைவெளிகளை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் அதன் உருளைகள் சரியாக இயங்கும். ஸ்லைடிங் கண்ணாடியாக இருந்தால் மிகவும் கவனமுடன் இழுத்து கையாளவேண்டும். அலுமினியம் மற்றும் மரமாக இருந்தால் தண்ணீர் தெளிக்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். மாவு, மற்றும் மிளகாய் பொடி போன்றவற்றை தொட்டுவிட்டு அந்த கையை அதில் பயன்படுத்தாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
எல்லாவற்றுக்கும் மேலாக இடி, மின்னலுடன் காற்று வேகமாக அடிக்கும் பொழுது அதிலும் எதிர் காற்று வீசும் பொழுது எக்காரணத்தைக் கொண்டும் கண்ணாடியால் ஆன ஜன்னல்களை திறக்காதீர்கள்.
எல்லா ஷெல்ப்புகளையும் அவ்வப்போது சுத்தப்படுத்தி அதற்கான தரை விரிப்புகளை விரித்து அழகாக பாத்திர பண்டங்களை அடுக்கி, தானிய வகைகள் அனைத்தையும் அததற்குறிய பாத்திரங்களில் போட்டு வைத்து பராமரியுங்கள். இதனால் கரப்பான் பூச்சி ,எறும்பு தொல்லை, பல்லி போன்றவை இல்லாமல் இருக்கும்.
தீபம் ஏற்றி தெய்வப் படங்கள் வைத்திருக்கும் பூஜை அலமாரியை வார்னிஷ் செய்து புத்தம் புதிதுபோல் மாற்றி வைத்துவிட்டால் அது வீட்டிற்க்கே நல்ல ஒரு அழகையும் அமைதியையும் கொண்டுவரும்.