
கண்ணாடி டம்ளர்கள், பீங்கான் கப், எவர்சில்வர் பாத்திரங்கள் ஆகியவற்றின் உள்ளே கறை படிந்திருந்தால் அவற்றை பளிச்சென்று மாற்ற இதோ ஓர் அருமையான யோசனை. ஒரு
பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து, அதில் ஒரு எலுமிச்சம் பழத்தைப் பிழியுங்கள். இந்த நீரை கறைபடிந்த பாத்திரங்களில் நிரப்பி, அரை மணி நேரம் ஊறவிடுங்கள். பிறகு தேய்த்தால் பாத்திரங்களில் உள்ள கறைகள் முழுவதும் நீங்கிவிடும்.
வீட்டினுள் வைத்துள்ள அலங்கார பிளாஸ்டிக் அல்லது பூச்செண்டுகளை எவ்வளவு துடைத்தாலும் பளிச்சென்று ஆகாது. அதற்கு ஹேர் டிரையரை பயன்படுத்தி க்ளீன் செய்தால் பளிச்சென்று ஆகிவிடும்.
விசேஷ நாட்களில் விளக்கேற்றும்போது எண்ணெயில் சில துளிகள் தேன் சேர்த்தால், விளக்கு நெடுநேரம் நின்று எரிவதோடு பிரகாசமாகவும் இருக்கும்.
உங்கள் வீட்டுத்தோட்டத்தில் உள்ள கறிகாய்கள், பூக்கள் முதலியவற்றை பறிக்கும்போது, கையால் பறித்தால் புழு, பூச்சி தாக்கலாம் என்று மட்டுமல்லாமல் காய்களும், பூக்களும் கசங்கிவிடும். இதைத் தவிர்க்க ஒரு சிறிய கத்தரிக்கோலை பயன் படுத்தி காய்களையும், பூக்களையும் கத்தரித்து எடுத்தால் பாதுகாப்பாக இருக்கும்.
வைட் வினீகரை சிறிதளவு நீரில் கலந்து, பாத்ரூம் டைல்ஸில் தெளித்து பிளாஸ்டிக் நாரினாலான பிரஷ்ஷால் தேய்த்தால் டைல்ஸில் படிந்துள்ள கறை காணாமல் போய்விடும்.
கீரைவகைகள், கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா போன்றவற்றை எப்போதும் தனித்தனி கவரில்தான் போட்டு வைக்க வேண்டும். இவை எல்லாவற்றையும் ஒன்றாக வைத்தால் சீக்கிரமேஅழுகிவிடும்.
பயணம் முடிந்து வீடு திரும்பியதும் பயணப்பெட்டிகளை நன்கு துடைத்து, பெட்டிகளின் ஜிப் மீது ஒரு மெழுகுவர்த்தி கொண்டு தேய்த்து விடுங்கள். பிறகு எடுத்து வையுங்கள். அடுத்தமுறை உபயோகிக்க எடுக்கும்போது ஜிப் சுலபமாக திறக்கவரும்.
வீட்டில் பாத்திரம் கழுவும் சிங்க் அடைத்துக் கொண்டால் சோடா மாவு, மற்றும் வினீகர் கலந்து ஊற்றி ஒரு மணி நேரம் கழித்து சுடுநீர் ஊற்றிவிடுங்கள். அடைப்பு அறவே நீங்கிவிடும்.
வீட்டில் ஏசி இருக்கும் அறையில் அதிகமான பொருட்களை வைப்பதை தவிருங்கள். இவை ஏசி தரும் குளிர்ச்சியை இழுத்துக் கொள்ளும். இதனால் நமக்கு போதிய அளவு குளிர்ச்சி கிடைக்காததுடன், மின்சாரச் செலவும் அதிகரிக்கும்.
சீரகத்தில் சிறு பூச்சிகள் வராமல் தடுப்பதற்கு அதனுடன் சில மிளகுகளை போட்டு வைத்தால் போதும்.
சோப்புக் கரைசலில், சிறிது சோடாமாவைக் கலந்து, அதில் சமையல் துணிகளை ஒருமணி நேரம் ஊறவைத்து துவைத்தால் எண்ணெய் பிசுக்கும் போகும், துணிகளும் பளிச்சென்று ஆகிவிடும்.
வெள்ளை நிற வாஷ் பேசின், டைல்ஸ் முதலியவற்றை சுத்தம் செய்தபின், கடைசியாக சொட்டு நீலம் சில துளிகள் கலந்த நீரால் கழுவித் துடைத்துவிட்டால் அவை பளிச்சென்று ஆகிவிடும்.