வீட்டு உரிமையாளர் Vs வாடகைதாரர்: இந்த இரு தரப்பும் சந்தோஷமாக இருக்க என்ன வழி?

House owner Vs Tenant
House owner Vs Tenant
Published on

சொந்த வீட்டில் வசிக்கும் பாக்கியம் எல்லோருக்குமே அமைவதில்லை. அறுபது அல்லது எழுபது சதவிகிதத்திற்கு மேற்பட்டோர் வாடகை வீட்டிலேயே வசிக்கிறார்கள். சிலருக்கு சொந்த வீடு இருந்தும் வாடகை வீட்டில் வசிக்கும் சூழ்நிலையும் உருவாகி விடுகிறது. என்ன விசித்திரமான வாழ்க்கை இது!

வீட்டு உரிமையாளர்களுக்கும் அவர்களின் வீட்டில் வாடகைக்கு வசிப்போருக்கும் இடையில் ஏராளமான பிரச்னைகள் காலம் காலமாக இருந்து கொண்டேதான் இருக்கின்றன. வீட்டு உரிமையாளர்கள் வாடகைதாரர்களைப் பற்றி பல குறைகளைச் சொல்லுவதும், வாடகைதாரர்கள் வீட்டு உரிமையார்களைப் பற்றி பல குறைகளைச் சொல்லுவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. இருவருக்கும் இடையில் எங்கே பிரச்னை தொடங்குகிறது என்று பார்த்தால் அது ஒரு சிறிய ஆணியாகவே இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
வெறும் ஒரு ரூபா பொருள் போதும்! துரு புடிச்ச கடாய் புதுசு மாதிரி ஜொலிக்கும்!
House owner Vs Tenant

தற்காலத்தில் வீட்டிற்கு குடி வருபவர்கள் ஏசி, கெய்சர், வாட்டர் ப்யூரிபையர், வாஷிங் மெஷின், துணி காயப்போடும் கொடி, கோட் ஸ்டாண்ட், டியூப் லைட் என பல வகையான உபகரணங்களை பயன்படுத்துபவர்களாக இருக்கிறார்கள். புதிதாக வீட்டிற்கு வரும்பட்சத்தில் இவற்றையெல்லாம் ஆணியடித்தே மாட்ட வேண்டியிருக்கிறது. அதைச் செய்து கொண்டிருக்கும்போதே உரிமையாளர் உடனே வீட்டிற்கு வந்து என்ன உங்க இஷ்டத்துக்கு ஆணி அடிக்கிறீங்க என்று ஒரு கேள்வியைக் கேட்டு எரிச்சலூட்டுவார். இதற்கு வாடகைதாரர் என்ன பதில் சொல்ல முடியும். வீட்டிற்கு குடிவந்து சில மாதங்களுக்குப் பின்னால் அடிக்கடி ஆணி அடித்தால் அதைக் கேட்பதில் ஒருவித நியாயம் இருக்கிறது.

பெரும்பாலான வாடகைதாரர்கள் தாங்கள் வசிக்கும் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ளுவதில்லை என்பதும் உண்மை. குறிப்பாக, டாய்லெட் பாத்ரூமை சரியாக சுத்தம் செய்வதே இல்லை. அவை அழுக்குபடிந்து உள்ளே நுழைந்தாலே குமட்டிக் கொண்டு வரும்படியாகத்தான் பெரும்பாலான வீடுகள் உள்ளன. அவர்கள் வீட்டை காலிசெய்து கொண்டு சென்ற பின்னர் அவற்றை சுத்தம் செய்வதற்கே பல ஆயிரம் ரூபாய் செலவழிக்க வேண்டிய சூழ்நிலை வீட்டு உரிமையாளருக்கு ஏற்பட்டு விடுகிறது.

ஜன்னல்கள், முன்புற பால்கனி, தோட்டம் முதலான பகுதிகளை பெரும்பாலானோர் சுத்தம் செய்வதே இல்லை. ஜன்னல்கள் பெரும்பாலும் மண் மற்றும் தூசி படிந்தேதான் காணப்படுகின்றன.

இதையும் படியுங்கள்:
நெயில் கட்டர் நகம் வெட்ட மட்டுமா? பலருக்கும் தெரியாத இதன் 3 பயன்கள்!
House owner Vs Tenant

வீட்டில் ஏதாவது ஒரு சிறு ரிப்பேர் ஏற்பட்டால் அதை குடியிருப்பவர் சிறு தொகையை செலவு செய்து சரிசெய்து கொள்ளலாம். வீட்டு உரிமையாளரிடம் முன் அனுமதி பெற்று வாடகையிலும் கழித்துக் கொள்ளலாம். ஆனால், எதையும் யோசிக்காமல் உடனே வீட்டு உரிமையாளருக்கு போன் செய்து உடனே சரிசெய்து தரச்சொல்லுவர். பல வீட்டு உரிமையாளர்கள் வேறு ஏதாவது ஒரு ஊரில் வசிப்பவராக இருப்பர். அத்தகையவர்கள் இத்தகைய ரிப்பேர்களை செய்ய தனது ஊரிலிருந்து ஐநூறு ஆயிரம் என செலவழித்து புறப்பட்டு வர முடியுமா?

பெரும்பாலான வீட்டு உரிமையாளர்கள் தங்கள் வீட்டில் குடியிருப்பவர்களை மதிப்பதே இல்லை. ஏதோ அவர்கள் சூழ்நிலை வாடகை வீட்டில் வசிக்க வேண்டியிருக்கிறது. நாளையே அவர்கள் வசதி ஏற்பட்டு தற்போது குடியிருக்கும் வீட்டை விட ஒரு பெரிய வீடு வாங்கும் சூழ்நிலையும் ஏற்படலாம். நான்கைந்து வீடுகளை வாங்கும் நிலையும் ஏற்படலாம். அதேபோல வீட்டு உரிமையாளர்களும் சூழ்நிலை காரணமாக இருக்கும் வீட்டை விற்றுவிட்டு வாடகை வீட்டில் வசிக்கும் சூழ்நிலையும் உருவாகலாம்.

இதையும் படியுங்கள்:
செங்கல் Vs சிபோரக்ஸ்: உங்கள் கனவு வீட்டிற்கு எது சிறந்தது?
House owner Vs Tenant

இரவு ஒன்பது மணிக்குள் வீட்டிற்குத் திரும்பி விடவேண்டும். அடிக்கடி உறவினர்கள் வரக் கூடாது. தண்ணீரை சிக்கனமாக செலவு செய்ய வேண்டும். இப்படியெல்லாம் பல கண்டிஷன்களைப் போட்டு குடியிருப்பவரின் மனதை கஷ்டப்படுத்துவதையும் நாம் காண முடிகிறது. கேட்டால் லட்சக்கணக்கில் கொட்டி கஷ்டப்பட்டு இந்த வீட்டைக் கட்டியிருக்கிறேன் என்பார்கள். அதனாலென்ன. இஷ்டப்பட்டுதானே வீட்டை வாடகைக்கு விடுவதற்காகக் கட்டினீர்கள்.

சில வாடகைதாரர்கள் மாத வாடகையை குறிப்பிட்ட தேதிக்கும் கொடுப்பதில்லை. இதிலும் பிரச்னைகள் முளைக்கின்றன. வீட்டு உரிமையாளர் இஎம்ஐ கட்ட வேண்டிய சூழ்நிலையில் இருக்கலாம். பொதுவாக, முதல் ஐந்து தேதிக்குள் வாடகையைக் கொடுத்து விடுவது நல்லது.

எல்லா வீட்டு உரிமையாளர்களும் கெட்டவர்கள் இல்லை. அதேபோல எல்லா வாடகைதாரர்களும் கெட்டவர்களும் இல்லை. இரு தரப்பிலுமே நல்லவர்கள், நேர்மையானவர்கள் இருக்கத்தான செய்கிறார்கள். எல்லோருமே இந்த உலகில் மகிழ்ச்சியாக வாழத்தான் பிறந்திருக்கிறோம். இரண்டு தரப்பினரும் ஒருவரை ஒருவர் மதித்து இணக்கமாக வாழ்ந்தால் எல்லோருக்கும் மகிழ்ச்சிதானே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com