
வீடு கட்டுவது என்பது ஒவ்வொருவருக்கும் கனவு போன்றது. கட்டப்படும் வீடானது நல்ல உறுதியாகவும், நீண்ட ஆயுளுடனும் இருக்க வேண்டும் என்பது வீட்டுக்காரரின் எண்ணம். ஒரு வீட்டை கட்டும்போது அதில் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு பொருளும் தகுதியானதா? நீடித்து உழைக்கக்கூடியதா? என்று சோதித்துப் பார்த்துதான் வாங்குவார்கள். கட்டுமான உபகரணங்கள் ஒவ்வொன்றையும் தரம் பார்த்து திறனறிய வேண்டும். தற்போது அறிவியல் தொழில்நுட்பம் முன்னேறி உள்ளதால் புதிய பொருட்கள் கட்டுமானத்திற்கு வந்துள்ளன. புதிதாக வீடு கட்டுவதற்கு செங்கல் சரியானதாக இருக்குமா? அல்லது சிபோரக்ஸ் கல் சரியாக இருக்குமா என்று ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
செங்கல்: வீடு கட்டுவதற்கு அடிப்படை கட்டுமான பொருளாக செங்கல் பயன்படுத்தப்படுவது பல நூற்றாண்டுகளாக வழக்கத்தில் உள்ள ஒன்று. இது இந்தியாவில் மட்டுமல்லாமல், சர்வதேச அளவிலும் பாரம்பரிய கட்டுமானத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. செங்கல் என்பது நல்ல தரமான களிமண்ணில், சாதாரண மண் கலந்து செவ்வக அச்சில் பதிக்கப்பட்டு எடுக்கப்படுகிறது. ஒருசில நாட்கள் வெயிலில் காய வைக்கப்பட்டு, பின்னர் அதிக வெப்பநிலையில் சூலையில் இட்டு சரியான பதத்தில் வார்த்து எடுக்கப்படுகிறது.
சிபோரக்ஸ்: சிபோரக்ஸ் என்பது செங்கல்லிற்கு மாற்றாக உள்ள புதிய வகை கட்டுமான கல். சிலிக்கா மணல், சிமெண்ட், மணல், சுண்ணாம்பு, அலுமினிய தூள் ஆகியவற்றைக் கலந்து அச்சுகளில் ஊற்றி, அது விரிவடைந்ததும் வெட்டி எடுக்கப்பட்டு, பின்னர் நீராவியின் மூலம் வேக வைக்கப்படுகிறது. இந்த வகை கற்கள் மிகவும் இலகுவானது. அதே நேரத்தில் உறுதியானது.
சிபோரக்ஸ் கட்டுமானத்தில் சாதாரண கல்லிற்கு பதிலாகவும் பயன்படுத்தலாம், அல்லது பெரிய சுவராக வாங்கியும் வீட்டில் இணைத்துக் கொள்ளலாம். உங்களது திட்டம் எதுவாக இருக்கிறதோ அதற்கு தகுந்த முறையில் சிபோரக்சை பயன்படுத்திக் கொள்ளலாம். சிபோரக்ஸை ஒரு எடை குறைந்த கல்லாக கட்டுமானத்தில் பயன்படுத்தலாம். இதை பொதுவாக AAC கற்கள் என்று சந்தையில் அழைக்கிறார்கள்.
செங்கல் VS சிபோரக்ஸ்: செங்கல் பாரம்பரியமானது, குளுமை நிறைந்தது, இயற்கையில் கிடைக்கும் பொருட்களில் இருந்து தயாராகிறது. செங்கல் நீரினை உறிஞ்சும் தன்மை கொண்டது. அதேபோல வெயில் காலத்தில் வெப்பத்தை உறிஞ்சுகிறது. இது எடை அதிகமானது. அதனால் அடிக்கடி கையாளுவதற்கு ஊழியர்களுக்கு அதிக ஆற்றல் தேவைப்படும். செங்கல் கட்டுமானத்தில் சேர்க்கும் முன்னர் வரை அதிக உறுதியானது இல்லை. கீழே போட்டால் உடனடியாக சிதறும் தன்மை கொண்டது.
மழைக் காலத்தில் கட்டுமானப் பணிகளில், செங்கல் நீரினை உறிஞ்சி இருக்கும்போது கவனமுடன் கையாளுதல் அவசியம். அந்த நேரத்தில் அவை எளிதில் உடைந்து போக வாய்ப்பு உள்ளது. வெளிப்புற பூச்சு இதற்கு கனமாக தேவைப்படுகிறது. இல்லாவிட்டால் மழை நீரை இவை உறிஞ்சி கசிவினை ஏற்படுத்தும். குறிப்பிட்ட அளவு நெருப்பினை தாங்கும் தன்மை கொண்டது. அதற்கும் மேல் வெப்பம் இருந்தால் செங்கல் அதிக சூடாகி உருக்குலைந்து விடும்.
சிபொரக்ஸ் நவீன தொழில் நுட்பம், எடை குறைவாக இருப்பதால் பணியாளர்களுக்கு கையாளுதல் எளிதாக இருக்கும். இதுவும் இயற்கையில் இருந்து கிடைக்கும் சில வேதிப்பொருட்களுடன் கலந்து தயார் செய்யப்படுகிறது. இதன் நீர் உறிஞ்சும் திறன் செங்கல்லை விட குறைவுதான். தீயில் தாங்கும் திறனும் செங்கல்லை விட இதற்கு அதிகம்தான். ஆனால், உடையும் தன்மையில் செங்கல்லை போன்று எளிதில் உடையக்கூடியதாகத்தான் உள்ளது.
இதில் சிறப்பான விஷயம் என்னவென்றால், சிபொரக்ஸ் கல் அளவு செங்கல்லை விட பெரியதாக இருக்கும். குறைந்தபட்சம் 2 செங்கல்லை விட பெரியதாகவும் 12 செங்கல் வைக்கும் இடத்தில் ஒரு சிபொரக்ஸ் கல் வைத்தால் போதும் என்ற அளவில் கூட பெரிதாகக் கிடைக்கும. இதனால் வேலை நேரம் பெரிதும் மிச்சமாக்கும். சிபொரக்ஸ் கல்லாக மட்டும் இல்லாமல், ஒரு அறையின் முழு சுவராகவும், முழு அறையாகவும், படிக்கட்டாகவும், கான்கிரீட் மேற்கூரையாகவும் கூட பெரியளவில் கிடைக்கும். ஆனால், செங்கல் கல் அளவில் மட்டுமே கிடைக்கும். பெரிய அளவில் உருவாக்க முடியாது.
தற்போது விரைவான கட்டுமானப் பணிகளுக்கு சிபோரக்ஸ் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. பெருநகரங்களில் செங்கல்லின் தேவை பெருமளவில் குறைந்து விட்டது. இரண்டில் எது சிறந்தது என்பது ஒருவரின் தேவையைப் பொறுத்து விருப்பமான முடிவாக இருக்கும். ஆனால், செங்கல் ஆயிரம் ஆண்டுகால கட்டடங்களில் கூட உறுதியாக நிலைத்து நிற்கும் சான்றாக இருக்கிறது. இந்த சான்று சிபோரக்ஸ்க்கு கிடைப்பது இல்லை.