
குளிர்காலத்தில் நிலவும் குளிர்ந்த காற்று நுரையீரல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். குளிர்ந்த காற்று பெரும்பாலும் நீண்டகால நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்துவதாகவும், நுரையீரல் நோய் உள்ளவர்களின் சுவாசப்பாதையை எரிச்சலடையச் செய்து பல்வேறு தொந்தரவுகளுக்கு காரணமாகவும் மாறுகிறது.
மனித சுவாச அமைப்பில் முக்கிய உறுப்பான நுரையீரல் உடலுக்கு ஆக்ஸிஜனை வழங்குவதிலும் கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றுவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. காற்று மாசுபாடு, சுற்றுச்சூழல் நச்சுகள் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை ஆகியவை நமது நுரையீரலின் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பதால் நமது நுரையீரலை ஆரோக்கியமாகவும் இயற்கையாகவும் சுத்தமாக வைத்திருப்பது முக்கியம்.
நம்முடைய நுரையீரலை சுத்தமாக வைத்திருக்க இந்த வழிமுறைகளை பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியமாகும்.
* புகைபிடித்தல் மற்றும் கஞ்சா போன்ற போதை பொருட்கள் நுரையீரல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும் பழக்கமாகும். சிகரெட்டில் நுரையீரல் திசுக்களை சேதப்படுத்தும் இரசாயனங்கள் அதிகளவு உள்ளதால், உங்களுக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தால் அதை உடனடியாக நிறுத்துவது தான் உங்கள் நுரையீரலை சுத்தம் செய்வதற்கான மிக முக்கியமான முதல் படியாகும்.
* சத்தான உணவுகள் நுரையீரல் ஆரோக்கியமாக வைத்திருக்கும் என்பதால் தினமும் புதிய பழங்கள், பச்சை காய்கறிகள் மற்றும் தானியங்கள் போன்ற ஆக்ஸிஜனேற்ற நிறைந்த உணவுகளை உட்கொள்வது நுரையீரலில் வீக்கத்தைக் குறைக்க உதவும்.
* நுரையீரல் ஆற்றலுடன் செயல்பட உடற்பயிற்சி ஒரு சிறந்த வழி என்பதால் நடைபயிற்சி, ஜாக்கிங், சைக்கிள் ஓட்டுதல் அல்லது நீச்சல், ஸ்கிப்பிங் போன்ற உடற்பயிற்சிகளை தினமும் 30 நிமிடங்கள் செய்வதன் மூலம் சுவாச செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவும்.
* மூச்சுபயிற்சி, நாடி சுத்தி, பிராணாயாமம் போன்ற மூச்சு பயிற்சிகள் மற்றும் ஆழமான சுவாசம் போன்ற சுவாச பயிற்சிகளை தினமும் செய்வது நுரையீரலை இயற்கையாகவே சுத்தம் செய்ய உதவும். ஆழ்ந்த சுவாச பயிற்சி நுரையீரல் திறனை அதிகரிக்கவும், நுரையீரலில் உள்ள நச்சுகள் மற்றும் சளியை அகற்றவும் உதவுகிறது.
* காற்று மாசுபாடு, நச்சு இரசாயனங்கள் உங்கள் நுரையீரலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதால் இந்த சூழல்களை முடிந்தவரை தவிருங்கள் முடியாவிட்டால் பாதுகாப்பு முகமூடிகளைப் பயன்படுத்த மறக்காதீர்கள்.
* கிரீன் டீ, மூலிகை தேநீர், தேன் மற்றும் இஞ்சி, பட்டை, கிராம்பு, ஏலக்காய் போன்ற பொருட்கள் மூலம் தயாரிக்கும் ஆரோக்கியமான பானங்கள் நுரையீரலை சுத்தப்படுத்தும், சளி வராமல் தடுக்கும். இருமலைப் போக்கவும், நுரையீரல் வீக்கத்தைக் குறைக்கும்.
* வைட்டமின் சி, ஈ மற்றும் ஒமேகா-3 போன்ற சில வைட்டமின்கள் மற்றும் நுரையீரல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும் இவற்றை எடுத்து கொள்வதற்கு முன்பு உங்கள் குடும்ப மருத்துவரிடன் கலந்தாலோசிப்பது நல்லது.
* தினமும் 5 லிட்டர் தண்ணீர் குடிப்பது, அதிக நார்ச்சத்து உள்ள உணவுகளை உட்கொள்வது மற்றும் அதிகப்படியான பதப்படுத்தப்பட்ட மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்ப்பது நுரையீரல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
* மலை அல்லது கடலோரப் பகுதிகளில் உள்ள சுத்தமான காற்று உங்கள் நுரையீரலுக்கு புத்துணர்ச்சி தரும். புதிய காற்றை ஆழமாக சுவாசிக்கும் போது அது உங்கள் நுரையீரலை சுத்தம் செய்யவும் நுரையீரல் திறனை மேம்படுத்தவும் உதவும்.
நுரையீரலை இயற்கையான முறையில் சுத்தம் செய்வது என்பது ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும். மேலும் நீங்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றினால் மட்டுமே உங்கள் நுரையீரல் ஆரோக்கியத்தை பாதுகாக்க முடியும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.