House Humidity
House Humidity

உங்கள் வீட்டில் கெட்ட வாடை அடிக்கிறதா..? உடனே இதை ட்ரை பண்ணிப் பாருங்கள்!

Published on

வெயில் காலம் அல்லது மழைக்காலம் வந்தாலே நம் வீடுகளில் ஒருவித புழுக்கம் வந்து குடியேறிவிடும். வெளியே இருக்கும் சீதோஷ்ண நிலையை விட வீட்டுக்குள் இருக்கும் அந்த பிசுபிசுப்பான தன்மை பலருக்கும் எரிச்சலைத் தரும். இந்த அதிகப்படியான ஈரப்பதம் வெறுமனே புழுக்கத்தை மட்டும் தருவதில்லை. ஒரு மாதிரி கெட்ட வாடை வீசுவது போன்ற பல பிரச்னைகளை கொண்டு வரும்.

இதை அப்படியே கண்டுகொள்ளாமல் விட்டால் வீட்டின் சுவர்கள், மரச்சாமான்கள் என எல்லாமே மெல்ல மெல்ல வீணாகிவிடும். அதுமட்டுமில்லாமல் வீட்டின் உள்ளே வசிப்பவர்களுக்கு ஆஸ்துமா, அலர்ஜி போன்ற உடல்நலப் பிரச்னைகளும் வர வாய்ப்புள்ளது. வீட்டை எப்போதுமே ஃபிரெஷ்ஷாக வைத்திருக்க சில சிம்பிளான வழிகள் இருக்கின்றன. 

காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சும் ரகசியம்!

வீட்டுக்குள் இருக்கும் புழுக்கமான காற்றை சமாளிக்க டிஹியூமிடிஃபயர் என்ற இயந்திரத்தை பயன்படுத்தலாம். இது காற்றில் உள்ள அதிகப்படியான ஈரத்தை அப்படியே உறிஞ்சி எடுத்துவிடும். ஒருவேளை உங்களிடம் அந்த மிஷின் இல்லை என்றால் அதைப்பற்றி கவலைப்படவே வேண்டாம். நம் சமையலறையில் இருக்கும் சில பொருட்களை வைத்தே இதை சுலபமாக சமாளிக்கலாம்.

ஒரு சிறிய பிளாஸ்டிக் கிண்ணத்தில் கல் உப்பு, பேக்கிங் சோடா அல்லது கரியை போட்டு மூடியில் சிறு சிறு ஓட்டைகள் போட்டு வீட்டின் மூலைகளில் வைத்துவிட்டால் போதும். இவை இயற்கையாகவே காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி வீட்டை உலர்வாக மாற்றிவிடும். அதேபோல ஏசியை ஆன் செய்து வைப்பதும் ஈரப்பதத்தை குறைக்க ஒரு அருமையான வழியாகும். 

காற்றோட்டம் அவசியம்! 

வீட்டின் ஜன்னல்களை அவ்வப்போது திறந்து வைப்பது மிக மிக அவசியம். வெளியே ஈரப்பதம் அதிகமாக இருந்தாலும், வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கும் காற்று வெளியேற இது பெரிதும் உதவும். குறிப்பாக சமையலறையில் சமைக்கும்போதும், பாத்ரூமில் குளிக்கும்போதும் எக்ஸாஸ்ட் ஃபேன்களை கட்டாயம் பயன்படுத்த வேண்டும். இது உள்ளே உருவாகும் சூடான மற்றும் ஈரமான புகையை உடனுக்குடன் வெளியே தள்ளிவிடும். 

வீட்டுக்குள் நிறைய செடிகள் வளர்க்கும் பழக்கம் இருந்தால், அதிலிருந்து வெளியேறும் ஈரப்பதமும் வீட்டின் காற்றை பெருமளவு பாதிக்கலாம். எனவே அவற்றை கொஞ்ச நாட்களுக்கு பால்கனியில் அல்லது வெராண்டாவில் மாற்றி வையுங்கள்.

இதையும் படியுங்கள்:
கண் திருஷ்டி மற்றும் வீட்டின் எதிா்மறை ஆற்றல் விலகி ஓட எளிய பரிகாரம்!
House Humidity

வீட்டின் வெளிப்புறம் கவனிக்கவும்!

வீட்டிற்கு உள்ளே எவ்வளவுதான் சுத்தமாக வைத்திருந்தாலும், வீட்டின் வெளிப்புறத்தில் உள்ள சில விஷயங்களும் ஈரப்பதத்தை அதிகரிக்கும். மழைநீர் செல்லும் வடிகால்கள் மற்றும் வீட்டின் மேற்கூரையில் உள்ள தண்ணீர் குழாய்களில் எந்த ஒரு அடைப்பும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அடைப்பு இருந்தால் அந்தத் தண்ணீர் சுவரில் ஊறி வீட்டுக்குள் ஈரப்பதத்தைக் கொண்டு வரும். 

அதேபோல ஜன்னல் மற்றும் கதவு இடுக்குகளில் ஏதேனும் விரிசல்கள் இருந்தால், அதை அடைத்து வைப்பது வெளியே இருக்கும் ஈரக்காற்று உள்ளே வராமல் தடுக்கும். வீட்டிற்குள் ஈரத்துணி காயவைப்பதைத் தவிர்த்துவிட்டு, சூரிய ஒளியில் காயப்போடுவது வீட்டை கெட்ட வாடை இல்லாமல் பாதுகாக்கும்.

இதையும் படியுங்கள்:
நுழைவாயிலே வீட்டின் முகம்! ஷூ ரேக்குகளால் உங்கள் வீட்டை அழகாக்குவது எப்படி?
House Humidity

வீட்டின் சுவரில் பெயிண்ட் உரிவது, கண்ணாடிகளில் ஆவி படிவது அல்லது வீட்டில் ஒரு மாதிரி பூஞ்சை வாடை அடிப்பது போன்ற அறிகுறிகள் தெரிந்தால் உடனே உஷாராகி விடுங்கள். உங்கள் வீட்டில் ஈரப்பதம் அதிகமாகிவிட்டது என்று அர்த்தம். மேலே சொன்ன இந்த சின்னச் சின்ன மாற்றங்களைச் செய்தாலே வீட்டின் ஈரப்பதத்தைப் பெருமளவு குறைத்துவிட முடியும்.

logo
Kalki Online
kalkionline.com