

வீட்டின் Entrance, அதாவது நுழைவாயிலை அழகாகக் காட்ட நாம் தொட்டிகளில் அழகுச்செடிகளை வளர்த்து அலங்கரிப்போம்.
ஆனால் வீட்டின் வாசலில் சிதறிக் கிடக்கும் நாம் அணியும் காலணிகள், வீட்டின் அழகை குறைத்துவிடும். அதனால் நமது பயன்பாட்டுக்கும் அழகுக்கும் ஏற்ற ஷூ ரேக் பயன்படுத்துவது அவசியம்.
உங்கள் வீட்டை அழகாக வைத்திருக்க உதவும் ஷூ ரேக்குகள் பல வடிவங்களில் இன்று எளிதாக கிடைக்கின்றன. அவற்றில் சிலவற்றைப் பற்றி இங்கே பார்க்கலாம்:
இருக்கை பெஞ்சுடன் கூடிய ஷூ ரேக் – உட்கார்ந்து காலணி அணிய வசதி. கீழே டிராயர்கள் இருப்பதால் காலணிகளை உள்ளே மறைவாக வைத்துக்கொள்ளலாம். முதியோருக்கும் குழந்தைகளுக்கும் மிகவும் ஏற்ற வடிவமைப்பு.
சுவரில் பொருத்தும் வகை ரேக் – இது தரையில் இடத்தை அடைக்காது. சுத்தம் செய்ய எளிது. LED விளக்குகள் சேர்த்தால் நவீன தோற்றம் அளிக்கும்.
திறந்த அலமாரி ரேக் – தினசரி பயன்படுத்தும் செருப்பு, சாண்டல் வைக்க ஏற்றது. காற்றோட்டமாக இருக்கும்.
சுழலும் கேரோசல் ரேக் – சுழலவிட்டு எளிதில் காலணியைத் தேர்வு செய்யலாம். பெரிய குடும்பங்களுக்கு உதவும்.
மூடிய கேபினட் முறை ரேக்– இதிலுள்ள ஷட்டர் கதவுகள் தூசி மற்றும் துர்நாற்றத்தை தடுக்கும். நுழைவாயில் சுத்தமாகத் தெரியும். அதன் மேல் இரண்டு சிறிய தொட்டிகளில் செயற்கை மலர்கள் (Artificial flowers) வைத்துக்கொண்டால் மேலும் அழகாக இருக்கும்.
படிக்கட்டு கீழ் அலமாரி ரேக் – வீணாக இருக்கும் இடத்தை அலமாரி அல்லது புல்-அவுட் டிராயர்களாக மாற்றலாம். இதனால் இடத்தை வீணாக்காமல் பயனுள்ள முறையில் பயன்படுத்தலாம்.
கண்ணாடி கதவு ஷூ அலமாரி - கண்ணாடி ஷட்டர்கள் கொண்ட ஷூ கேபினட் ஒரே நேரத்தில் இரண்டு நோக்கங்களுக்கு உதவுகிறது. இது காலணிகளை வைப்பதற்கு மட்டுமல்லாமல் , வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பு டிரஸ்ஸிங் கண்ணாடியாகவும் செயல்படுகிறது. கண்ணாடி ஒளியை பிரதிபலித்து, நுழைவாயிலை பெரியதாகவும் பிரகாசமாகவும் காட்டும். இந்த வடிவமைப்பு சிறிய அடுக்குமாடி குடியிருப்புகள் அல்லது குறுகிய நுழைவாயில்களில் குறிப்பாக உதவியாக இருக்கும்.
ஷூ ரேக் வாங்கும்போது கவனிக்க வேண்டிய சில குறிப்புகள்:
குடும்பத்தில் உள்ளோரின் எண்ணிக்கைக்கு ஏற்ற அளவைத் தேர்வு செய்யுங்கள். காற்றோட்டம் இருக்கும்படி வடிவமைப்பு இருக்க வேண்டும்.
ஷூ பாலிஷ் பிரஸ், ஷூ பாலிஷ் போன்றவை வைக்க சிறிய பகுதி அமைத்தால் வசதியாக இருக்கும்.
குழந்தைகளுக்காக கீழ்தட்டில் தனி பகுதி அமைத்தால், அவர்கள் காலணிகளை முறையாக எடுத்து தங்கள் இடத்தில் வைக்கும் பழக்கம் வரும். பருவகால காலணிகளுக்காக மேல்தட்டில் கூடுதல் இடம் வைத்துக் கொள்ளலாம்.
நுழைவாயில் அலங்காரத்துடன் பொருந்தும் நிறம் மற்றும் பொருளைத் தேர்வு செய்தால் அழகும் நேர்த்தியும் ஒருங்கே கிடைக்கும். நாம் செய்யும் சிறிய மாற்றமும் நம் நுழைவாயிலை அழகாகவும் நேர்த்தியாகவும் மாற்றும்.