
நேர்மறையான ஆளுமைப் பண்புகள் ஒருவருக்கு நன்மை தரக்கூடியதாகும். இவை நம்மை சிறந்த நபராக மாற்றுவதற்கும், வாழ்வில் எதிர்ப்படும் சவால்களை சமாளிப்பதற்கும் உதவியாக இருக்கும். அதுவே எதிர்மறை ஆளுமைப் பண்புகள் என்பவை நமக்கு உதவியாக இருப்பதற்கு பதிலாக அதிக தீங்குகளை விளைவிக்கக் கூடியதாக இருக்கும். அவை வாழ்க்கையில் மற்றவர்களுடனான நம் உறவை பாதிக்கக்கூடிய வகையில் இருக்கும். எதிர்மறை ஆளுமைப் பண்புகளைப் பற்றியும் அவற்றைக் கையாள்வது குறித்தும் இப்பதிவில் காணலாம்.
1. ஆணவம் கொண்டிருப்பது: எதிர்மறை ஆளுமைப் பண்பான ஆணவம் என்பது தன்னை மிக உயர்ந்தவராகக் கருதுவதும், மற்றவர்களை மதிக்காமல் இருப்பதும் ஆகும். ஆணவம் கொண்டவர்கள் தாங்கள் அனைத்தையும் நன்கு அறிந்தவர்கள் என்று எண்ணிக்கொண்டு, மற்றவர்களின் கருத்துக்களை நிராகரிப்பார்கள். அத்துடன் பிறருடன் பேசும்பொழுது அதிகம் ஆதிக்கம் செலுத்துவார்கள். தான் சொல்வதுதான் சரி என்று வாதிடவும் தயங்க மாட்டார்கள்.
2. சகிப்புத்தன்மையற்றது: சகிப்புத்தன்மை சிறிதும் இல்லாமல் இருப்பது. ஒருவருடைய கருத்துக்கள், நம்பிக்கைகள் மீது சகிப்புத்தன்மை இல்லாமல் இருப்பதும், அதனை ஏற்றுக் கொள்ளாததும் எதிர்மறை ஆளுமைப் பண்பின் செயலாகும். பிறர் கூறும் கருத்துக்களை மதித்து ஏற்றுக்கொள்ள மறுப்பது இவர்களுடைய செயலாக இருக்கும்.
3. ஆக்ரோஷமான குணம் கொண்டிருப்பது: மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் ஒரு சிறிய தவறு நேர்ந்தால் கூட மிகவும் ஆக்ரோஷமாக இருப்பது. பொறுமையின்மை மற்றும் சீக்கிரமாகக் கோபப்படுவது இவர்களின் இயல்பாக இருக்கும். இது பொதுவாக கோபம், எரிச்சல் அல்லது வன்முறை போன்ற உணர்வுகளுடன் தொடர்புடையது. ஆக்ரோஷமான குணம் கொண்டவர்கள் சின்னச் சின்ன விஷயங்களுக்கும் கூட எளிதில் கோபப்படுவதும் மற்றவருடன் சண்டை இடவும் தயங்க மாட்டார்கள்.
4. சுயநலம் கொண்டவராக இருப்பது: எதிர்மறை ஆளுமைப் பண்பில் முக்கியமானது சுயநலம் கொண்டவராக இருப்பது. இவர்கள் தன்னைப் பற்றி மட்டுமே கவலைப்படுவார்கள். தன்னுடைய வளர்ச்சியில் மட்டுமே சுயநலமாக இருப்பார்கள். தன்னுடைய செயல்கள் தன்னைச் சுற்றி உள்ளவர்களை எவ்வாறு பாதிக்கின்றது என்பதைைப் பற்றி சிறிதும் கவலைப்பட மாட்டார்கள். குழு அல்லது நிறுவனத்தின் வெற்றியை விட தனது சொந்த இலக்குகளுக்கு முன்னுரிமை அளிப்பவராக இருப்பது.
5. அலட்சியப் போக்கு: அலட்சியப் போக்கு என்பது உறவுகளை சிக்கலாக்கும். குழுப்பணியை தடுக்கும். அத்துடன் தனிப்பட்ட வளர்ச்சியையும் தடுக்கக்கூடியது. தனிப்பட்ட வாழ்க்கையிலும், தொழில் முறையிலும் கடுமையான தடைகளை உருவாக்கக்கூடும். ஒரு விஷயத்தில் அக்கறை காட்டாமல் கவனக்குறைவாக இருப்பது அல்லது ஆர்வமின்மையால் வேண்டுமென்றே ஒரு செயலைச் செய்யாமல் விடுவது எதிர்மறை ஆளுமைப் பண்பாகும்.
6. நம்பகத்தன்மையற்றது: பிறர் மீது எப்போதும் சந்தேகப்படுவதும், நம்பாமல் இருப்பதும் எதிர்மறை ஆளுமைப் பண்பில் மிகவும் முக்கியமானது. எந்த ஆதாரமும் இல்லாமலே பிறரின் நோக்கங்களை சந்தேகிப்பது இவர்களின் குணமாக இருக்கும்.
7. வெளிப்படை தன்மை இல்லாதது: வெளிப்படைத் தன்மை என்பது வெளிப்படையாகவும், நேர்மையாகவும் இருப்பதைக் குறிக்கும். வெளிப்படைத் தன்மை இல்லாதது மக்களிடையே நம்பிக்கையை சிதைத்து விடும்.
8. எதிர்மறை ஆளுமைப் பண்புகளின் தாக்கம்: இது ஒருவரின் சமூக மற்றும் தொழில் முறை வாழ்க்கையை பாதிக்கலாம். உறவுகள் முறிந்து போகலாம். வேலை செய்யும் இடங்களில் பிரச்னைகள் ஏற்படலாம். குறிப்பாக, ஒரு குழுவில் பணிபுரியும் பொழுது எதிர்மறை ஆளுமைப் பண்புகள் குழுவினுடைய மன உறுதியை பாதிப்பதுடன், உற்பத்தி திறனையும் குறைக்கும்.
9. இதனை கையாள்வது எப்படி? எதிர்மறை ஆளுமை என்பது நிலையானது அல்ல. சிறிது முயற்சியும், கொஞ்சம் பொறுமையும் இருந்தால் அவற்றை வளர்ச்சிக்கான வாய்ப்புகளாக மாற்றலாம்.எதிர்மறை ஆளுமைப் பண்பை கையாள்வதற்கு சுய விழிப்புணர்வு மிகவும் அவசியம். என்ன செய்கிறோம், ஏன் செய்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ளவும், எதிர்மறை ஆளுமைப் பண்புகளைக் கையாள்வதற்கான பயிற்சிகளையும் மேற்கொள்ளலாம். நம்மால் முடியாத பட்சத்தில் ஒரு சிறந்த உளவியலாளரின் உதவியை நாடுவதில் தவறில்லை.