

நம் வீடுகளில் தற்போது வகை வகையான குக்கர்கள், சமையல் பாத்திரங்கள், தோசை தவாக்கள் என்று வாங்கி வைத்திருக்கிறோம். அவற்றை வசதிக்கேற்ப பயன்படுத்திக் கொள்கிறோம் என்றாலும், எரிபொருள் சிக்கனத்தைக் கடைபிடிக்க சில வழிகளைப் பின்பற்றும்போது எரிபொருள் மிச்சமாவதோடு, சமையலும் கால நேரத்தோடு முடியும். அதற்கு நாம் என்னவெல்லாம் செய்யலாம் என்பதை இந்தப் பதிவில் காண்போம்.
பெரும்பாலானோருக்கு சமைக்க வேண்டுமென்றால் அடி கனமான, அகலமான, வாயகன்ற, தேவைக்குத் தக்க உயரமான பத்திரங்களை உபயோகிப்பதால் எரிசக்தியை கணிசமாக சேமிக்க இயலும். கேஸ் கட்டு பழையதாக ஆகிவிட்டால் சமைக்கும்பொழுது குக்கரில் இருந்து நீர் வடியும். பிறகு அதனை மாற்றி சமைப்பதற்கு நேரம் ஆவதுடன் எரிவாயுவும் வீணாகும். அதற்கு முன்கூட்டியே அதன் எக்ஸ்பயரி தேதியை தெரிந்து வைத்துக் கொண்டு புதிய கேஸ் கட்டை மாற்றினால் எரிபொருளை மிச்சம் ஆக்கலாம்.
கேஸ் அடுப்பின் பர்னரை மண்ணெண்ணெயில் ஊற வைத்து பிறகு பழைய டூத் பிரஷ் மூலம் சுத்தம் செய்து வைத்துக் கொண்டால் அடைப்பு எதுவும் இல்லாது இருப்பதனால் எரிபொருள் மிச்சமாகும். சமையலையும் எளிதில் முடிக்கலாம்.
தனித்தனியாக அரிசி, பருப்பு, காய்கறி என்று வேக வைக்காமல் செப்பரேட்டரில் வைத்து குக்கரை பயன்படுத்தினால் எரிபொருள் மிச்சமாவதுடன் சமையலையும் எளிதில் முடிக்கலாம். இதனால் 2, 3 முறை குக்கரை கழுவ வேண்டிய அவசியமும் இருக்காது.
தோசை, சப்பாத்தி போன்றவற்றை செய்து விட்டு அந்தக் கடாய் தவாக்கள் சூடாக இருக்கும்பொழுதே அதில் சூடாக்க வேண்டிய பொருட்களை சிறு கிண்ணத்தில் வைத்தால் சூடாகிவிடும். இதனால் சூடாவதற்கான எரிபொருள் மிச்சமாகும்.
மிளகாய், மல்லி போன்ற மசாலா பொருட்களை நன்றாக வெயிலில் காய வைத்து அரைத்தால் அடுப்பில் சூடாக்க வேண்டிய அவசியம் இருக்காது. ஆதலால் எரிபொருளை மிச்சப்படுத்தலாம்.
ஆட்டோமேட்டிக் ரைஸ் குக்கர், இன்டக் ஷன் ஸ்டவ் போன்றவற்றை அவ்வப்பொழுது பயன்படுத்தினாலும் எரிபொருள் மிச்சமாகும்.
அளவுக்கு அதிகமாக சமையல் செய்யாமல், தேவையான அளவு செய்வது, தேவையான அளவு தண்ணீர் விட்டு சமைப்பது, தேவையான அளவுக்கு அதிகமாக தீய்த்து எடுப்பது போன்றவற்றை தவிர்த்தாலும் எரிபொருள் மிச்சமாகும்.
சாதம் சமைக்க அடுப்பில் தண்ணீர் வைக்கும்பொழுது அதற்கு மேல் இன்னொரு பாத்திரத்திலும் தண்ணீர் வைத்தால் கீழே இருக்கும் தண்ணீரும் நன்றாக சூடாகி விடும். அந்த சுடு நீரை மீண்டும் சிறிது நேரம் கொதிக்க வைத்து குடிநீராக பயன்படுத்தலாம். இதனாலும் எரிபொருள் மிச்சமாகும்.
பாரம்பரிய அரிசி, பருப்பு வகைகளை நன்றாக ஊற வைத்து குக்கரில் சமைத்தால் எரிபொருள் மிச்சமாகும்.
முக்கியமாக, ஃபிரிட்ஜில் இருந்து எதையாவது சூடாக்க வேண்டும் என்றால் முன்கூட்டியே வெளியே எடுத்து வைத்து சூடுபடுத்துவதால் எரிபொருள் மிச்சமாகும்.
குக்கரின் நீராவி வெளியே செல்லாமல் சமையல் செய்வது சிறந்தது. அவ்வாறு செய்தால் எரிபொருள் செலவு குறையும்.
கொதிக்கும் நீருக்கும் நீராவிக்கும் உள்ள வெப்பநிலை நூறு டிகிரி செல்சியஸ். ஆனால், நீராவியில் வெப்ப நிலை மறைந்திருக்கும். அதனால்தான் அது உடலில் பட்டவுடன் கொப்பளம் தோன்றுகிறது. அதிகப்படியான நீராவி வெளியேறும்போது எரிபொருள் நஷ்டம் ஏற்படுகிறது.
ஆவி அடங்குவதற்கு முன் அவசரமாக குக்கரின் வெயிட்டை தூக்கி விட்டு அதை திறக்க முயற்சிப்போம். அப்பொழுது குக்கரின் உள்ளே அழுத்தம் இருப்பதால் தீயை அணைத்தாலும் உள்ளே இருக்கும் வெப்பநிலை மாறாது. அதனால் உணவுப்பொருள் கூடுதலாக வேகும். அப்படி வெந்து ஆவி அடங்கிய பின் எடுத்தால்தான் உணவு நன்றாக வெந்திருக்கும். திரும்பத் திரும்ப சூடு செய்ய வேண்டிய தேவை இருக்காது. இதனாலும் எரிபொருள் மிச்சமாகும்.
பாத்திரத்தில் சாதம் சமைப்பவர்கள் உலை கொதிக்கும்போது ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி தூவ வேண்டும். இதனால் உலை கொதித்து வெளியே வழியாமல் இருக்கும்போது அடுப்பில் அடைப்பு ஏற்படாது. இதனாலும் சீக்கிரமாக சாதம் வடித்து எரிபொருளை மிச்சமாக்கலாம்.