
இன்றைய காலத்தில் குழந்தைகள் ஸ்மார்ட்போன், டேப்லெட்டுகள், கணினிகள் போன்ற மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துவது இயல்பான ஒன்றாகிவிட்டது. இது அவர்களுக்கு பல விதங்களில் உதவினாலும் அதிகப்படியான ஸ்கிரீன் டைமிங் குழந்தைகளின் உடல்நலம், மனநிலை, கல்வி போன்றவற்றில் பாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே, குழந்தைகளுக்கு எவ்வளவு நேரம் ஸ்கிரீன் டைமிங் பாதுகாப்பானது என்ற கேள்வி பெற்றோர்களுக்கு ஏற்படுகிறது. இந்தப் பதிவில் அதுகுறித்த முழு விவரங்களைப் பார்க்கலாம்.
அதிகப்படியான ஸ்கிரீன் டைமிங் குழந்தைகளுக்கு உடற்பருமன், தூக்கக் குறைபாடு, கண் பார்வை பிரச்சினைகள் போன்றவற்றை ஏற்படுத்தக்கூடும். இதனால், மன அழுத்தம் மனச்சோர்வு சமூகத் தொடர்பு குறைவு போன்ற பாதிப்புகளும் ஏற்படலாம். எதிலும் கவனம் செலுத்தாமல் தொடர்ச்சியாக சாதனங்களைப் பயன்படுத்துவது அவர்களின் கற்றல் திறனைக் குறைத்து படிப்பு மீதான ஆர்வத்தை இழக்கச் செய்யும். தூங்குவதற்கு முன்பாக அவர்கள் சாதனங்களைப் பயன்படுத்துவது தூக்கமின்மைக்கு வழிவகுக்கும். காலப்போக்கில் அவர்கள் சாதனங்களுக்கு அடிமையாகி குடும்பத்தினர், நண்பர்கள் போன்றவர்களுடனான தொடர்பை இழக்கின்றனர்.
எவ்வளவு நேரம் பயன்படுத்தலாம்?
உலக சுகாதார நிறுவனம் மற்றும் பிற நிபுணர்களின் பரிந்துரைகளின் படி, 2 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் எலக்ட்ரானிக் சாதனங்கள் பயன்படுத்துவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். 2 முதல் 4 வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு அதிகபட்சம் ஒரு மணி நேரம் மட்டுமே திரை நேரத்தைக் கொண்டிருக்க வேண்டும். 5 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் முடிந்த அளவு ஸ்க்ரீன் டைமிங்கைக் கட்டுப்படுத்தி பிற செயல்பாடுகளில் நேரம் செலவிட ஒதுக்க வேண்டும். தினசரி திரை இல்லாத நேரம் என தனியாக ஒதுக்கி விளையாட்டு, குடும்ப நேரம் போன்றவற்றில் அவர்களை ஈடுபடுத்த வேண்டும்.
எலக்ட்ரானிக் சாதனங்களைப் பயன்படுத்துவது முற்றிலும் தீமையானது அல்ல. கல்வி, பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக அவற்றை மிதமான அளவில் பயன்படுத்துவது சிறந்தது. ஆனால், அதிகப்படியான பயன்பாடு பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். குழந்தைகளின் வயது மற்றும் தேவையைப் பொருத்து அவர்களின் திரை நேரத்தை பெற்றோர்கள் நிர்வகிக்க வேண்டும். இதற்கு பெற்றோர்கள் முதலில் அதிகமாக திரை சாதனங்கள் பயன்படுத்துவதைக் குறைப்பது முக்கியம்.
இதனால், குழந்தைகள் இந்த நிஜ உலகத்துடன் இணைந்து செயல்பட்டு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஏற்றுக்கொண்டு வாழ உதவலாம்.