படுக்கை விரிப்புகள் மற்றும் போர்வைகளை வாரத்திற்கு ஒரு முறை தோய்த்து உபயோகிப்பது நல்லது. சுத்தம் சுகாதாரத்தை பேணுவதற்கும், தொற்று நோய்கள் நம்மை அணுகாமல் இருப்பதற்கும் போர்வைகளை டெட்டால் போன்ற கிருமி நாசினிகளைக் கொண்டு துவைத்து உபயோகிப்பது நல்லது. தலையணை உறைகள், படுக்கை விரிப்புகள், போர்வைகள் அனைத்தையும் துவைத்து நல்ல வெயிலில் காயவைத்து பயன்படுத்துவதே சிறந்தது. கிருமிகள் மற்றும் தூசி பூச்சிகளை தடுக்கவும் சருமத்தில் அலர்ஜி, அரிப்பு போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்கவும் பெட்ஷீட்டை சுத்தமாக துவைத்துப் பயன்படுத்துவது நல்லது.
பல் தேய்ப்பது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் நாம் படுக்க உபயோகிக்கும் போர்வைகளை துவைத்துப் பயன்படுத்துவது. ஏனெனில், 8 மணி நேரமாவது படுக்கையில் செலவிடுகிறோம். வியர்வையின் காரணமாக நம் படுக்கை விரிப்புகளில் கிருமிகள் மற்றும் தூசி பூச்சிகள் வேகமாக வளரும்.
சளி, இருமல் போன்ற உடல் உபாதைகள் இருக்கும் சமயம் வைரஸ் பாக்டீரியா பரவுவதைத் தடுக்க பெட்ஷீட்டை அடிக்கடி துவைத்து உலர்த்துவதும் நல்லது. உறவினர்கள் வந்து தங்கி படுத்த விரிப்புகளை அவர்கள் சென்றதும் மறக்காமல் துவைத்து காய வைக்க வேண்டும். இரண்டு நாட்கள்தானே உபயோகப்படுத்தியது என்று அலட்சியமாக இருக்கக் கூடாது. தலையணை உறைகளை அடிக்கடி மாற்றுவது நம் தலைமுடி, முகம் மற்றும் ஆரோக்கியத்திற்கு சிறந்தது. இதனால் நல்ல உறக்கமும் புத்துணர்ச்சியும் ஏற்படும். நோய்வாய்பட்டவர்களின் படுக்கை விரிப்புகளை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை கிருமி நாசினி கொண்டு வெந்நீரில் துவைத்து வெயிலில் உலர்த்த வேண்டியது மிகவும் அவசியம்.
நம்முடன் செல்லப்பிராணிகள் உறங்கும் பட்சத்தில் நம்மிடம் இருந்து சிறிது விலகி அவற்றிற்கென தனி போர்வையில் தூங்கும்படி பழக்கவும். நம் படுக்கையில் செல்லப் பிராணிகளான நாய், பூனை போன்றவை நம்முடன் இருக்குமானால் அவற்றின் முடி விழலாம். எனவே, அவற்றை நன்கு துவைத்து வெயிலில் காய வைக்க வேண்டியது அவசியம்.
பத்து நாட்களுக்கு மேல் நம் படுக்கை விரிப்புகளை துவைக்கவில்லை என்றால் அவற்றிலிருந்து ஒருவிதமான வாடை வரும். அத்துடன் பூச்சிகள், பாக்டீரியாக்கள் இருக்கும் இடமாக மாறிவிடும். நம் உடலில் இருந்து விழும் இறந்த செல்களை சாப்பிட சின்னச் சின்ன பூச்சிகள் (தூசி பூச்சிகள்) இனப்பெருக்கமாகி நாம் சரியாக துவைக்காமல் பயன்படுத்தினால் உடலில் அரிப்பு, தடிப்பு, சருமப் பிரச்னைகளை உருவாக்கும். தலையணை உறைகளை அடிக்கடி துவைக்க வேண்டியது அவசியம். காரணம் பொடுகு, தூசி பூச்சிகள், பூஞ்சை பாக்டீரியா போன்றவை தலைமுடி மற்றும் சருமத்தில் உள்ள எண்ணெய் பசை, அழுக்கு போன்றவற்றின் காரணமாக உருவாகும். எனவே, இவற்றை அடிக்கடி மாற்றி சோப்பு மற்றும் கிருமி நாசினி கொண்டு துவைக்கவில்லை என்றால் முகப்பரு, உடலில் அரிப்புடன் கூடிய சிவப்பு திட்டுகள் ஏற்படும்.
மருத்துவமனைகளில் நோயாளியின் நிலையை பொறுத்து தினமுமே படுக்கை விரிப்புகள் மாற்றப்படுகின்றன. கல்லூரி விடுதிகளில் வாரம் ஒரு முறை மாற்றப்படுகின்றது. ஹோட்டல்களில் தினமுமே படுக்கை விரிப்புகள், துண்டுகள், போர்வைகளை மாற்றுகிறார்கள். துவைக்கப்படாத துணிகள் சுகாதாரமற்றது மட்டுமல்லாமல், தொற்று நோய்களுக்கும் வழிவகுக்கும்.
ப்ளீச் செய்வது அல்லது ரசாயன சவர்க்காரங்களைப் பயன்படுத்துவது நம் சருமம் மற்றும் சுவாச அமைப்பில் பிரச்னைகளை உண்டுபண்ணலாம். குழந்தைகளுக்கும் ஒவ்வாமையை ஏற்படுத்தும். எனவே, சூடான வெந்நீரில் துணிகளை சோப்பு போட்டு ஊற வைத்து துவைத்து வெயில் காய வைப்பது சிறந்தது.