பெரும்பாலோர் பொதுவாக ஒரு மாதத்திற்கு வீட்டிற்குத் தேவையான அரிசி மற்றும் மளிகைப் பொருட்களை சம்பளம் வாங்கியவுடன் மொத்தமாக வாங்கி வைத்து விட்டு, ‘அப்பாடா’ என்று பெருமூச்சு விடுவது வழக்கம். ஏனெனில், மளிகை என்பது ஒரு குடும்பத்திற்கு மாதாமாதம் ஏற்படும் பெரும் செலவுகளில் ஒன்றாகும்.
தற்காலத்தில் ஒரு நடுத்தரக் குடும்பத்திற்கு ஆறாயிரம் முதல் பத்தாயிரம் ரூபாய் வரை அரிசி மற்றும் மளிகைப் பொருட்களுக்காகவே செலவழிக்க வேண்டி இருக்கிறது. இப்போது நாம் மளிகைப் பொருட்களை மொத்தமாக வாங்குவது நல்லதா அல்லது அவ்வப்போது வாங்குவது நல்லதா என்பதைப் பற்றி சற்று பார்ப்போம்.
பருப்பு, பூண்டு, மிளகு, எண்ணெய் முதலான மளிகைப் பொருட்களின் விலை ஒரே மாதிரியாக இருக்காது. இவற்றின் விலை பெரும்பாலும் அடிக்கடி மாறுபடும். உதாரணமாக, மூன்று மாதங்களுக்கு முன்னால் இருநூறு ரூபாய்க்கு விற்கப்பட்ட பூண்டு தற்போது நானூறு முதல் ஐநூறு ரூபாய் வரை விற்பனையாகிறது. இதன் விலை கணிசமாகக் குறையலாம் அல்லது இன்னும் அதிகரிக்கலாம். இதை யாராலும் கணிக்க முடியாது.
இதுபோன்று விலை அதிகமாக உள்ள பொருட்களை அவை எப்போது குறைகிறதோ அப்போது தேவையான அளவிற்கு வாங்கிக் கொள்ளுவது சிறந்தது. அதுவரை வழக்கத்தைவிட மிகக் குறைவான அளவில் வாங்கி சிக்கனமாகப் பயன்படுத்துவது சிறந்தது.
ஒரு குறிப்பிட்ட பிராண்ட் அரிசியின் விலையை நான்கைந்து கடைகளில் விசாரித்துப் பாருங்கள். இருபத்தி ஐந்து கிலோ அளவுள்ள மூட்டைக்கு நாற்பது ரூபாய் முதல் ஐம்பது ரூபாய் வரை வித்தியாசம் இருக்கும். எனவே, உங்களுக்கு அருகில் உள்ள சில கடைகளில் விசாரித்து எந்தக் கடையில் குறைவான விலை சொல்லுகிறார்களோ அங்கே வாங்கிக் கொள்ளுங்கள்.
ஒரே சமயத்தில் மொத்தமாக வாங்குவதால் சில நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. உதாரணமாக, நிறைய மளிகைப் பொருட்களைப் பார்க்கும்போது சற்று தாராளமாக அவற்றை உபயோகிக்கலாம் என்ற எண்ணம் மனதில் பொதுவாக ஏற்படும். இதனால் இவை அதிகமாக உபயோகிக்கப்பட்டு சீக்கிரமே தீர்ந்து போகக்கூடிய சூழல் ஏற்படலாம். அப்போது உங்களுக்குக் கூடுதல் செலவாகும்.
சமையல் எண்ணெயின் நிலையும் இதே கதைதான். எனவே, பருப்பு, எண்ணெய் முதலான விலை அதிகமுள்ள மளிகைப் பொருட்களை வாரத்திற்கு ஒரு முறை தேவையான அளவிற்கு மட்டும் வாங்கி சிக்கனமாக உபயோகிப்பது சிறந்தது. இது நமது பணத்திற்கு மட்டுமின்றி உடல் நலத்திற்கும் சிறந்தது.
சூப்பர் மார்க்கெட்டுகளில் அவ்வப்போது ஆஃபர்களை அறிவிப்பார்கள். அவற்றின் விலை மற்ற கடைகளை விட சற்று குறைவாகவே இருக்கும். ஒன்று வாங்கினால் மற்றொன்று இலவசம் அல்லது இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் என்று ஆஃபர்களை அறிவிப்பார்கள். மேலும் சில கடைகளில் ஒரு பொருளின் விலை ஒரு கிலோ எழுபது ரூபாய் என்றும் அதையே இரண்டு கிலோவாக வாங்கினால் ஒரு கிலோ அறுபது ரூபாய்க்குத் தருவதாக விளம்பரம் செய்வார்கள். இத்தகைய பொருட்களை இரண்டு கிலோவாக வாங்கும்போது இருபது ரூபாய் லாபம் கிடைக்கும். இதுபோன்ற ஆஃபர்களை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
காய்கறிகளின் விலையும் இதே கதைதான். பொருட்கள் வரத்துக்கு ஏற்றாற்போல ஒவ்வொரு நாளும் ஒரு விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. காய்கறிகளை மொத்தமாக வாங்கி பிரிட்ஜில் அடைத்து வைத்து உபயோகிக்காதீர்கள். காய்கறிகளைப் பொறுத்தவரை ஃப்ரெஷ்ஷாக தினந்தோறும் எந்த காய்கறியின் விலை மலிவாக இருக்கிறதோ அதை வாங்கிப் பயன்படுத்துங்கள்.