இன்றைய டிஜிட்டல் யுகத்தில், ஸ்மார்ட் தொலைக்காட்சி (Smart TV) என்பது ஒரு பொழுதுபோக்கு சாதனம் அல்ல; அது நம் வீட்டின் ஒரு முக்கிய அங்கமாக, ஏன் ஒரு அந்தஸ்தின் அடையாளமாகவே மாறிவிட்டது. ஆயிரக்கணக்கில், சில சமயங்களில் லட்சக்கணக்கில் செலவு செய்து, பார்த்துப் பார்த்து வாங்கும் இந்த மதிப்புமிக்க சாதனத்தை, நாம் அறியாமல் செய்யும் சில சிறு தவறுகள் மூலம் நாமே பாழாக்கி விடுகிறோம்.
ஒரு சிறிய கவனக்குறைவு கூட, பெரிய பழுதில் முடிந்து, பல்லாயிரம் ரூபாய் செலவை ஏற்படுத்திவிடும். உங்கள் ஸ்மார்ட் டிவியைப் பல ஆண்டுகள் பழுதாகாமல் பாதுகாக்க, நீங்கள் பின்பற்ற வேண்டிய சில எளிய, வழிமுறைகளை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
கண்ணுக்குத் தெரியாத எதிரிகள்:
உங்கள் டிவியின் முதல் எதிரி வெப்பம். தொலைக்காட்சிப் பெட்டியை ஜன்னல் ஓரமாகவோ அல்லது நேரடி சூரிய ஒளி படும் இடங்களிலோ வைப்பதைத் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். சூரியனின் வெப்பக் கதிர்கள், டிவியின் மென்மையான டிஸ்ப்ளே பேனலின் தரத்தைக் குறைத்து, திரையில் வண்ணப் புள்ளிகளை ஏற்படுத்தக்கூடும். மேலும், அதிக வெப்பம் அதன் உள் பாகங்களையும் சேதப்படுத்தும்.
அடுத்த முக்கிய எதிரி, மின்சார ஏற்றத்தாழ்வு. இது மின்னணு சாதனங்களுக்கு ஏற்படும் ‘மாரடைப்பு’ போன்றது. திடீரென மின்சாரம் அதிகரிப்பதோ அல்லது குறைவதோ, டிவியின் மிக முக்கியமான பாகமான மதர்போர்டை நிரந்தரமாகச் செயலிழக்கச் செய்துவிடும்.
இதைத் தவிர்க்க, உங்கள் வீட்டில் மின்சார ஏற்றத்தாழ்வு பிரச்சனை இருந்தால், தாமதிக்காமல் ஒரு நல்ல ஸ்டெபிலைசரை வாங்கிப் பொருத்துவது அவசியம். அது உங்கள் டிவிக்கு ஒரு மெய்க்காப்பாளனாக இருந்து, மின்சாரத்தைச் சீராக வழங்கும்.
சுத்தம் செய்யும் சரியான முறை:
பழைய CRT தொலைக்காட்சிப் பெட்டிகளைப் போலல்லாமல், இன்றைய ஸ்மார்ட் டிவியின் திரை மிகவும் மென்மையானது. அதைச் சுத்தம் செய்யும்போது மிகுந்த கவனம் தேவை. ஈரமான துணியை ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது. கடைகளில் விற்கப்படும் கிளீனிங் ஸ்ப்ரேக்களை நேரடியாகத் திரையின் மீது அடிப்பது மிகப் பெரிய தவறு. திரவங்கள், திரையின் விளிம்புகள் வழியாக உள்ளே கசிந்து, சர்க்யூட்களைப் பாழாக்கிவிடும்.
சுத்தம் செய்யும்போது முதலில் டிவியை அணைத்து விடுங்கள். ஒரு மென்மையான மைக்ரோஃபைபர் துணியை எடுத்து, தூசியை மெதுவாகத் துடைக்கவும். கறைகள் இருந்தால், திரையைச் சுத்தம் செய்யப் பரிந்துரைக்கப்பட்ட திரவத்தை, திரையின் மீது அடிக்காமல், துணியின் மீது லேசாகத் தெளித்து, மென்மையாக அழுத்தாமல் துடைப்பதே பாதுகாப்பானது.
ஒரு ஸ்மார்ட் டிவி என்பது ஒரு சிறிய கணினி போன்றது. அது நீண்ட நேரம் இயங்கும்போது, அதன் புராசஸர் (Processor) வெப்பத்தை வெளியிடும். இந்த வெப்பம் சரியாக வெளியேறவில்லை என்றால், டிவியின் செயல்பாடு பாதிக்கப்பட்டு, அதன் ஆயுள் குறையும்.
எனவே, டிவியின் காற்றோட்டத்திற்கு வழிவகை செய்வது மிக முக்கியம். டிவியை சுவரில் பொருத்துவதாக இருந்தால், சுவருக்கும் டிவிக்கும் இடையில் குறைந்தபட்சம் நான்கு அங்குல இடைவெளி இருக்க வேண்டும். அதன் பின்பக்கம் உள்ள காற்றோட்டத் துவாரங்களை எதுவும் மறைக்காமல் இருப்பதை உறுதி செய்யுங்கள்.
ஒரு ஸ்மார்ட் டிவியை வாங்குவது என்பது ஒரு நீண்ட கால முதலீடு. அந்த முதலீட்டைப் பாதுகாக்க, மேலே கூறப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றுவது கடினமான காரியமல்ல. சரியான இடம், சரியான மின்சாரப் பாதுகாப்பு, சரியான பராமரிப்பு மற்றும் சரியான காற்றோட்டம் ஆகிய இந்த நான்கு மந்திரங்களையும் நீங்கள் பின்பற்றினால், உங்கள் ஸ்மார்ட் டிவி எந்தவிதமான பெரிய செலவுகளையும் தராமல், பல ஆண்டுகளுக்கு உங்கள் குடும்பத்திற்கு மகிழ்ச்சியை வழங்கும்.