

கடுமையான கோடைக்காலம் தொடங்கிவிட்டாலே பரண் மீதோ அல்லது வீட்டின் ஒரு மூலைலயோ பல மாதங்களாக அனாதையாக தூங்கிக் கொண்டிருக்கும் ஏர் கூலரைத் தட்டி எடுப்பது தான் நமது முதல் வேலையாக இருக்கும். ஆனால் அப்படி வெளியே எடுத்த உடனே தண்ணீர் ஊற்றி பிளக்கை மாட்டி ஆன் செய்வது ஆபத்தான ஒரு விஷயம். பல மாதங்களாக அடைந்து கிடந்த அந்த இயந்திரத்திற்குள் ஏகப்பட்ட ஒட்டடைகள், தூசிகள் மற்றும் உடலுக்கு மிகப்பெரிய கெடுதல் விளைவிக்கும் கண்ணுக்கு தெரியாத பூஞ்சைகள் தஞ்சம் அடைந்திருக்கும்.
இதை அப்படியே ஆன் செய்து சுவாசித்தால் வீணாக சளி, அலர்ஜி மற்றும் மூச்சுத்திணறல் போன்ற பல தேவையற்ற உடல் உபாதைகள் வரக்கூடும். அதுமட்டுமில்லாமல் கூலிங் சுத்தமாக கிடைக்கவே கிடைக்காது. ஒரு புது ஏசியை விட சூப்பரான கூலிங் கிடைக்க உங்களது பழைய ஏர் கூலரை எப்படி வீட்டிலேயே சுத்தம் செய்வது எனத் தெரிந்து கொள்ளலாம் வாங்க.
திறந்தவெளிமில் சுத்தம் செய்யுங்கள்!
எப்போதுமே இந்த கிளீனிங் வேலையை வீட்டுக்குள் வைத்து செய்யக்கூடாது. முதலில் உங்கள் மெஷினை வீட்டுக்கு வெளியே தண்ணீர் சுலபமாக வடிந்து செல்லக்கூடிய ஒரு இடத்திற்கு நகர்த்தி செல்லுங்கள். மெயின் பவர் சப்ளை துண்டிக்கப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்து கொள்வது மிக மிக அவசியம்.
அதன் பிறகு மூன்று பக்கங்களிலும் உள்ள பேனல்களை மிக கவனமாக கழற்றி எடுக்க வேண்டும். உள்ளே எட்டிப் பார்த்தால் பெரிய பெரிய ஒட்டடைகள் அடைந்திருக்கும். ஒரு பழைய பெயிண்ட் பிரஷ் அல்லது காய்ந்த துடைப்பம் கொண்டு அந்த தூசிகளை முழுமையாக தட்டி சுத்தம் செய்து விடுங்கள்.
வினிகர்!
எந்த ஒரு ஏர் கூலருக்கும் மிக முக்கியமான பாகமே அந்த தேன்கூடு போல அமைந்திருக்கும் கூலிங் பேடுகள் தான். அதை தனியாக வெளியே எடுத்து கொஞ்சம் மைல்டான சோப்பு தண்ணீர் வைத்து லேசாக தேய்த்து கழுவுங்கள். இதிலுள்ள பிடிவாதமான அழுக்குகள் மற்றும் துர்நாற்றம் வீசும் பாக்டீரியாக்களை அடியோடு ஒழிக்க ஒரு சூப்பரான ஐடியா இருக்கிறது.
ஒரு பெரிய பிளாஸ்டிக் டப்பில் நிறைய தண்ணீர் நிரப்பி அதில் இரண்டு அல்லது மூன்று கப் அளவு வினிகர் ஊற்றி, இந்த கூலிங் பேடுகளை ஒரு பத்து நிமிடம் அப்படியே ஊற வையுங்கள். அதன் பிறகு வெளியே எடுத்து நல்ல வெயிலில் காய வைத்தால் பேட் புத்தம் புதிதாக மாறிவிடும்.
டேங்க் & மோட்டாரை கவனிக்கவும்!
அடுத்ததாக நாம் தண்ணீர் ஊற்றி வைக்கும் தொட்டியை நன்றாக ஒரு ஸ்க்ரப்பர் போட்டு தேய்த்து கழுவ வேண்டும். உள்ளே இருக்கும் பழைய கழிவு நீர் முழுவதையும் வெளியேற்றி விடுங்கள். மெஷினை அப்படியே மெதுவாக தலைகீழாகக் கவிழ்த்து வைத்தால் மிச்சம் மீதி இருக்கும் தண்ணீர் முழுவதும் வடிந்து விடும். விசிறி மற்றும் மோட்டார் இருக்கும் பகுதிகளில் எக்காரணம் கொண்டும் நீங்கள் தண்ணீரை ஊற்றி கழுவக் கூடாது.
அங்கு ஒரு காய்ந்த காட்டன் துணியை வைத்து தூசிகளை மட்டும் துடைத்து எடுங்கள். ஃபேன் எந்த ஒரு இரைச்சலும் இல்லாமல் ஸ்மூத்தாக ஓடுவதற்கு, அதன் சுழலும் பகுதிகளில் கொஞ்சம் தேங்காய் எண்ணெய் அல்லது மெஷின் ஆயில் விடுவது நல்ல ரிசல்ட்டைத் தரும்.
இந்த விஷயங்களை கொஞ்சம் மெனக்கெட்டு செய்தாலே போதும், உங்களது பழைய கூலர் ஒரு புது ஏசி மாதிரி சில்லென்று காற்றை வீடு முழுவதும் அள்ளி வீசும்.