

நம்மில் பலரும் வாரத்திற்கு ஒருமுறை அல்லது மாதத்திற்கு ஒருமுறையாவது ஃப்ரிட்ஜை சுத்தம் செய்வதை வழக்கமாக வைத்திருப்போம். உள்ளே இருக்கும் காய்கறிகள், பால் பாக்கெட்டுகள் மற்றும் பழைய உணவுகளை எடுத்துவிட்டுத் தட்டுகளைத் துடைப்போம். ஆனால், நாம் எல்லோரும் வசதியாக மறந்துவிடும் அல்லது கவனிக்கத் தவறும் ஒரு முக்கியமான இடம் உண்டு. அதுதான் ஃப்ரிட்ஜ் கதவின் ஓரத்தில் இருக்கும் அந்த 'ரப்பர் சீல்'.
இந்த ரப்பர் பட்டைதான் ஃப்ரிட்ஜின் பாதுகாப்பு அரண். உள்ளே இருக்கும் குளிர் காற்றை வெளியே விடாமலும், வெளியே இருக்கும் வெப்பத்தை உள்ளே அனுமதிக்காமலும் தடுப்பது இதுதான்.
ஏன் இந்த ரப்பர் சீல் முக்கியம்?
காலப்போக்கில் இந்த ரப்பர் பட்டையின் இடுக்குகளில் உணவுத் துகள்கள், தூசி மற்றும் திரவங்கள் சிந்தி, ஒரு விதமான பிசுபிசுப்பான அழுக்கு சேரத் தொடங்கும். இது நாளடைவில் கறுப்பு நிறப் பூஞ்சையாக மாறிவிடும். அதுமட்டுமல்லாமல், அழுக்கு சேரச் சேர ரப்பர் தனது நெகிழ்வுத்தன்மையை இழந்து, வெடிப்பு விட ஆரம்பிக்கும். இதனால் ஃப்ரிட்ஜின் கதவு சரியாக மூடாது. விளைவு? உள்ளே இருக்கும் குளிர் காற்று லீக் ஆகி, கம்ப்ரஸர் ஓயாமல் ஓடிக்கொண்டே இருக்கும். இதனால் உங்கள் மின்சாரக் கட்டணம் எகிறும், உணவும் சீக்கிரம் கெட்டுப்போகும்.
இதைச் சுத்தம் செய்யக் கடைகளில் விற்கும் விலை உயர்ந்த கெமிக்கல்கள் எதுவும் தேவையில்லை. உங்கள் சமையலறையில் இருக்கும் பொருட்களே போதும்.
மிதமான சுடு தண்ணீர் - 2 கப்
பேக்கிங் சோடா - 2 ஸ்பூன்
பயன்படுத்தாத பழைய பல் துலக்கும் பிரஷ்
மென்மையான துணி
செய்முறை: ஒரு கிண்ணத்தில் சுடு தண்ணீரோடு பேக்கிங் சோடாவைக் கலந்து கொள்ளவும். அழுக்கு அதிகமாக இருந்தால், அதனுடன் ஒரு சொட்டு பாத்திரம் கழுவும் திரவத்தைச் சேர்த்துக் கொள்ளலாம்.
பிரஷ்ஷை இந்தக் கலவையில் நனைத்து, ரப்பர் சீலின் இடுக்குகள் மற்றும் மடிப்புகளில் மெதுவாகத் தேய்க்கவும். பிரஷ் இடுக்குகளில் உள்ள பூஞ்சை மற்றும் பிசுக்கை எளிதாக வெளியேற்றிவிடும்.
பின்னர், சுத்தமான ஈரத்துணியால் துடைத்துவிட்டு, இறுதியாக ஒரு காய்ந்த துணியால் ஈரம் இல்லாமல் துடைக்க வேண்டும். ஈரம் இருந்தால் மீண்டும் பூஞ்சை வரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
உங்கள் ஃப்ரிட்ஜ் ரப்பர் சீல் நன்றாக இருக்கிறதா அல்லது மாற்ற வேண்டுமா என்பதை அறிய ஒரு எளிய சோதனை உள்ளது. ஒரு ரூபாய் நோட்டை ஃப்ரிட்ஜ் கதவுக்கும் ரப்பருக்கும் இடையே வைத்து மூடுங்கள். இப்போது அந்த நோட்டை வெளியே இழுக்கவும். நோட்டு இருக்கும் இடத்திலியே இறுக்கமாக இருந்தால் சீல் நன்றாக உள்ளது என்று அர்த்தம். அதுவே, நோட்டு மிக எளிதாக வழுக்கிக்கொண்டு வெளியே வந்தால், ரப்பர் லூஸ் ஆகிவிட்டது என்று அர்த்தம். உடனே அதை மாற்றுவது நல்லது.
எச்சரிக்கை!
சுத்தம் செய்கிறேன் என்ற பெயரில் பிளீச் அல்லது அமோனியா கலந்த கிளீனர்களைப் பயன்படுத்தாதீர்கள். இவை ரப்பரை வறட்சியடையச் செய்து, உடைந்து போகச் செய்துவிடும். வினிகர் பயன்படுத்தினால் கூட, அதைத் தண்ணீரில் கலந்து பயன்படுத்துவதே பாதுகாப்பானது.
ஃப்ரிட்ஜ்-ன் ஆயுட்காலத்தை அதிகரிக்கவும், மின்சாரத்தைச் சேமிக்கவும் அதன் ஒவ்வொரு பாகத்தையும் கவனிப்பது அவசியம். மாதத்திற்கு ஒருமுறையாவது இந்த ரப்பர் சீலை சுத்தம் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்புறம் இருக்கும் காயில்களில் சேரும் தூசியையும் அவ்வப்போது நீக்குவது ஃப்ரிட்ஜின் செயல்திறனை அதிகரிக்கும்.