புத்தாண்டு பிறந்துவிட்டால் எல்லோருக்கும் கொஞ்சம் சந்தோஷத்தோடு ஒருவித பீதியும் வரும். அதுதான் நாம் சந்திக்கப்போகும் கோடை கால சீசன். இதற்குமுன் என்னதான் நம்மைக் குளிர் வாட்டி வதைத்தாலும் கோடைகாலத்தை ஒப்பிடும்போது பலரும் ‘குளிரே இருந்துட்டுப் போகட்டும்’ என்று நினைப்பார்கள். ஆனால், வேறு வழியில்லை இயற்கையின் ஆணைப்படி கோடைகாலத்தை அனுபவித்துதான் ஆக வேண்டும். கோடை கால உக்கிரத்தில் இருந்து தப்பிக்க, நாம் என்னென்ன செய்யலாம்? என்னென்ன செய்யக்கூடாது?
1. மின்சாதனங்களை அதிகமாக பயன்படுத்துதல்:
ஓவன்கள், அடுப்புகள், சலவை இயந்திரங்கள் போன்ற மின்சாதனங்களை அதிகமாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம். அவை வீட்டிற்குள் கூடுதல் வெப்பத்தை உருவாக்குகின்றன. அதிகப்படியான பயன்பாடு உட்புற வெப்பநிலையை அதிகரிக்க வழிவகுக்கும், சுற்றுச்சூழலை அசௌகரியமாக்கும். வெப்பம் தொடர்பான தேவையற்ற நோய்களையும் வரவழைக்கலாம்.
2. காற்றோட்டத்தைப் புறக்கணிப்பது:
ஜன்னல்கள், கதவுகளை எப்போதும் மூடி வைத்திருப்பது வெப்பத்தை உள்ளே அடைத்து காற்று சுழற்சியைக் குறைக்கும். சற்று குளிர் காற்று வரும் நேரங்களில் ஜன்னல்கள், கதவுகளைத் திறந்துவைப்பதன் மூலம் சரியான காற்றோட்டத்தை உறுதிசெய்து வெப்பத்தால் வரும் மூச்சுத்திணறல், அசௌகரியம் மற்றும் சுவாசப் பிரச்னைகளைத் தடுக்கலாம்.
3. அடர் நிற திரைச்சீலைகள்(Dark-Colored Curtains) மற்றும் துணிகளைப் பயன்படுத்துவது:
அடர் நிற திரைச்சீலைகள் மற்றும் துணிகள் வெப்பத்தை உறிஞ்சி உட்புற வெப்பநிலையை அதிகரிக்கும். இதைத் தடுக்க வெப்பத்தைத் தடுக்கும் வெள்ளை நிற அல்லது வெளிப்படையான திரைச்சீலைகளைப் (Transparent curtains) பயன்படுத்தலாம்
4. நீரேற்றத்தைத் தவிர்ப்பது நீரிழப்புக்கு வழிவகுக்கும்:
போதுமான அளவு தண்ணீர் குடிக்க மறந்துவிடுவது அதிக வெப்பநிலையில் நீரிழப்புக்கு வழிவகுக்கும். தண்ணீர், மோர் மற்றும் சத்தான பழச்சாறுகள் போன்ற ஏராளமான திரவங்களைக் குடிக்கும் பழக்கத்தை உருவாக்குங்கள். இது நீரிழப்பால் உண்டாகும் தலைவலி, தலைச்சுற்றல் மற்றும் சோர்வை தடுத்து ஒட்டுமொத்த உடல் நலனைப் பாதுகாக்கும்.
5. பிற்பகலில் வெப்பத்தை உண்டாக்கும் செயல்களைத் தவிர்க்கவும்:
நாளின் வெப்பமான மதிய நேரத்தில் உணவுகளைச் சமைப்பதற்குப் பதிலாக சாலடுகள் (salads), ஸ்மூத்திஸ் (smoothies), சாண்ட்விச்கள் (sandwiches) போன்ற உணவுகளை உண்ணலாம். இது ஏதோ ஒரு வழியில் உங்கள் வீட்டைக் குளிர்ச்சியாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், உணவு பழக்கத்தில் புத்துணர்ச்சியூட்டும் மாற்றத்தையும் வழங்குகிறது.
6. வீட்டைச் சுற்றி மரம் வளர்வதைத் தடுக்காதீர்கள்:
கோடையில் வெப்பத்தால் வரும் சலிப்பைத் தணிக்கவும், தேவையான குளிர்ச்சியுடன் இருக்கவும் சிறிது காலம் உங்கள் வீட்டைச் சுற்றி மரங்களை வளரவிடுங்கள். சில மரங்களின் கிளைகள் தேவையில்லாமல் நீண்டு வளர்ந்திருந்தாலும் அவை ஒரு சில மாதங்களுக்கு நிழற்குடையாக இருக்கலாம்.
7. ஜன்னலில் வெப்பத்தைத் தடுக்கும் பிலிம்களை நிறுவவும்:
ஜன்னல்களில் வெப்பத்தைத் தடுக்கும் பிலிம்களை(stickers) பயன்படுத்துவதால் தீங்கு விளைவிக்கும் புற ஊதாக் கதிர்கள்(UV rays) தடுக்கப்படுகின்றன. இது உங்கள் வாழும் இடத்தை முடிந்தவரை வெப்பத்தை தடுத்து, குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகின்றன.
8. இயற்கையாக குளிரை தரும் முறைகளை தேர்வு செய்யவும்:
தண்ணீர் நிரப்பப்பட்ட களிமண் பானைகளை இயற்கையான குளிரூட்டும் முறையாகப் பயன்படுத்துங்கள். உங்கள் வீட்டின் வெவ்வேறு மூலைகளில் இந்தப் பானைகளை வைக்கும்போது அதிலிருந்து நீர் கொஞ்சம் கொஞ்சமாக ஆவியாகி (water evaporation) அறைகளின் வெப்பநிலையைக் குறைக்க உதவுகிறது. ஜன்னல்களுக்கு அருகில் ஈரமான துணிகளைத் தொங்கவிடலாம். ஜன்னல் வழியே உள்ளே வரும் வெப்பமான காற்றைச் சற்று தணிக்க இது உதவும்.
9. தீவிர உடற்பயிற்சிகளைத் தவிர்க்கவும்:
வீட்டிற்குள் அதிக வெப்பமான நேரங்களில் தீவிர உடற்பயிற்சிகளைத் தவிர்த்திடுங்கள். அதற்குப் பதிலாக அதிகாலையில் யோகா அல்லது நன்கு காற்றோட்டமான பகுதிகளில் லேசான உடற்பயிற்சிகளைச் செய்யலாம். இது வெப்பத்தால் உண்டாகும் சோர்வை தடுத்து, உங்கள் உடலைச் சுறுசுறுப்பாகப் பராமரிக்க உதவுகிறது.
இந்த வழிமுறைகளைப் பின்பற்றி வரப்போகும் கோடைகாலத்தை சிரமமில்லாமல் கடந்து வாருங்கள்.