
இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 9-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 19-ந் தேதி முதல் மார்ச் 9-ந் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது.
பாகிஸ்தானில் உள்ள கராச்சி தேசிய ஸ்டேடியம், லாகூர் கடாபி ஸ்டேடியம், ராவல் பிண்டி ஸ்டேடியம் ஆகியவற்றில் போட்டிகள் நடைபெறயுள்ளன. 1996-ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக ஐ.சி.சி. போட்டி பாகிஸ்தானில் அரங்கேறுவதால் அந்த நாடே விழாக்கோலம் பூண்டுள்ளது மட்டுமில்லாமல், மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. ‘ஏ’ பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய அணி தனது தொடக்க லீக்கில் பிப்.20-ந்தேதி வங்காளதேசத்தையும், 23-ந்தேதி பாகிஸ்தானையும், மார்ச்.2-ந்தேதி நியூசிலாந்தையும் சந்திக்கிறது.
19-ந்தேதி கராச்சியில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. ஒவ்வொரு அணியும் சவால்களை எதிர்த்து முன்னேற போராடும் என்பதால் ஒவ்வொரு ஆட்டமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். அதன்படி போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.60 கோடியாகும்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி என்பது மினி உலகக் கோப்பை என்றும் அழைக்கப்படும் நாக் அவுட் போட்டியாகும், இது 1998-ம் ஆண்டு ஐசிசியால் தொடங்கப்பட்டது.
பாகிஸ்தானில் போட்டி நடைபெறும் ஸ்டேடியங்களில் போட்டியில் பங்கேற்கும் நாடுகளின் தேசிய கொடிகள் வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் தேசிய கொடி மட்டும் இடம்பெறவில்லை. தொடக்க லீக் ஆட்டம் நடைபெறும் கராச்சி தேசிய ஸ்டேடியத்தில் இந்திய கொடி இல்லாத வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி சர்ச்சையாக வெடித்த நிலையில் பாகிஸ்தான் வேண்டுமென்றே இந்திய தேசிய கொடியை புறக்கணித்தாக கூறி, சமூக வலைதளங்களில் கண்டனங்கள் வலுக்கத்தொடங்கியது.
இந்த நிலையில் இந்தியாவின் தேசிய கொடி இடம் பெறாதது ஏன்? என்பது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விளக்கம் அளித்துள்ளது. அதில், இந்திய அணி சில காரணங்களால் எங்கள் நாட்டிற்கு வந்து விளையாட மறுத்து விட்டதால் இந்தியா மோதும் போட்டிகள் துபாய்க்கு மாற்றினோம். பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் கோப்பை போட்டி நடைபெறும் ஸ்டேடியங்களில் அங்கு விளையாடும் நாடுகளின் கொடிகள் மட்டுமே ஏற்றப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.
மேலும் துபாயில் முதல் ஆட்டத்தில் இந்தியாவை சந்திக்கும் வங்காள தேச அணி இன்னும் பாகிஸ்தான் வந்தடையாததால் அந்த நாட்டு கொடி இன்னும் ஏற்றப்படவில்லை. போட்டியில் விளையாட பாகிஸ்தான் வந்தடைந்துள்ள நாடுகளின் கொடிகள் மட்டுமே தற்போது ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் வேண்டுமென்றே பாகிஸ்தானுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சர்ச்சைகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விளக்கம் அளித்துள்ளது.