நமது உடல் ஆரோக்கியமாக விளங்க வேண்டும் என்ற ஆசையிலேயே பலவிதமான காய்கறிகளை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளுகிறோம். இத்தகைய காய்கறிகளிலுள்ள சத்துக்கள் அப்படியே முழுவதுமாக நமக்குக் கிடைக்க வேண்டுமென்றால் அதற்காக நாம் சில முக்கியமான வழிமுறைகளை கடைபிடித்தாக வேண்டும். அத்தகைய வழிமுறைகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
காய்கறிகள் பூமிக்கு அடியிலிருந்தும், செடி, கொடி, மரங்களில் இருந்தும் நமக்குக் கிடைக்கின்றன. காய்கறிகளில் வைட்டமின் ஏ, பி, ரிபோஃப்ளோவின், வைட்டமின் சி, கால்சியம், சிறிதளவு புரோட்டின், நார்ச்சத்து, மாவுச்சத்து முதலானவை நமக்குக் கிடைக்கின்றன.
காய்கறிகளின் தோலை நீக்காமல் அப்படியே வேக வைக்க வேண்டும். வேக வைத்த பின்னர் தோலை நீக்கினால் காய்கறியிலுள்ள சத்துக்களை இழக்காமல் பெறலாம். காய்கறிகளை தேவைக்கு அதிகமாக நீண்ட நேரத்திற்கு வேக வைக்கக் கூடாது. இப்படிச் செய்வதால் பலவிதமான சத்துக்களை நாம் இழக்க நேரிடும்.
காய்கறிகளின் பச்சை நிறம் சமைத்த பின்னரும் அப்படியே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சமையலில் சிறிதளவு சோடா உப்பைச் சேர்க்கும் வழக்கம் நம்மிடையே உள்ளது. இதனால் காய்கறிகளிலுள்ள வைட்டமின்கள் அழிந்துவிடுகின்றன. எனவே, நாம் சமைக்கும்போது சோடா உப்பைச் சேர்ப்பதை நிறுத்த வேண்டும்.
காய்கறிகளை நன்றாகக் கழுவிய பின்னரே அவற்றை நறுக்க வேண்டும். முதலில் காய்கறிகளை நறுக்கி விட்டு பின்னர் தண்ணீரில் போட்டுக் கழுவினால் தண்ணீரில் கரையக் கூடிய வைட்டமின்கள் கழுவும் தண்ணீரில் கரைந்து வீணாகப் போய்விடும்.
காய்கறிகளை நறுக்கியவுடன் சமைத்துவிட வேண்டும். மாறாக நறுக்கிய பின்னர் நீண்ட நேரம் வைத்திருந்தால் அவற்றிலுள்ள சத்துக்கள் வீணாகிவிட அதிக வாய்ப்புள்ளது.
காரட், கோஸ், தக்காளி, வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகளை சமைக்காமல் நன்றாகக் கழுவி பச்சையாக சாப்பிட்டால் முழுமையான சக்தியைப் பெற்று ஆரோக்கியமாக வாழலாம்.
காய்கறிகளை வேகவைக்க மிகக்குறைந்த அளவு நீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அப்படிப் பயன்படுத்திய நீரை கீழே கொட்டாமல் சமையலில் மீண்டும் பயன்படுத்தினால் சத்துக்கள் வீணாகாமல் இருக்கும். நீர்க்காய்கறிகளை குறைந்த அளவு நேரமே வேக வைக்க வேண்டும். இவற்றை அதிக நேரம் வேகவைத்தால் சத்துக்கள் வீணாகிவிடும்.
காய்கறிகளை குளிர்ச்சாதனப் பெட்டியில் வைத்துப் பயன்படுத்தும் வழக்கத்தை உடனடியாகக் கைவிட வேண்டும். முடிந்தவரை தினமும் காய்கறிகளை வாங்கி பயன்படுத்தினால் முழு சக்தியையும் பெறலாம்.
காய்கறிகளைச் சமைக்கும்போது அதைத் திறந்து வைத்து சமைக்காமல் மூடிவைத்துச் சமைக்க வேண்டும். அப்போதுதான் காய்கறிகளில் உள்ள வைட்டமின்கள் அழியாமல் பாதுகாக்கப்படும். காய்கறிகளை பொதுவாக சமைத்த உடனேயே சாப்பிட வேண்டும்.
வருடத்தின் சில மாதங்களில் மட்டுமே கிடைக்கும் காய்கறிகளை தவறாமல் நமது உணவில் பயன்படுத்த வேண்டும். இத்தகைய காய்கறிகளின் சில அத்தியாவசிய சத்துக்கள் நமது உடலுக்கு அவசியத் தேவையாக இருக்கும்.