ஒருசில பூக்கள் அதீத மணம் கொண்டவையாக இருக்கும். அதில் குறிப்பிடத்தகுந்தது மகிழம்பூ. அடர்த்தியான கரும்பச்சை இலைகளைக் கொண்டது மகிழ மரம். இதன் பூ சந்தன நிறத்தில் இருக்கும். மகிழம்பூ காய, காய மேலும் அதன் நறுமணம் அதிகரிக்கும். அதனால்தான் கடவுள்களுக்குக் கூட. காய்ந்திருந்தாலும் மகிழம் பூவினை மாலையாக அணிவிக்கிறார்கள்.
மகிழம் பூ 27 நட்சத்திரங்களில் அனுஷத்திற்கு உரியது. மகிழம் பூ மரத்திற்கும், ஆன்மிகத்திற்கும் மிகுந்த தொடர்பு உண்டு. மகிழம் என்பது 'வகுளம்' என்ற தமிழ்ச் சொல்லை மருவி வந்தது. ‘இலஞ்சி’ என்ற பெயரும் இதற்கு உண்டு. பல கோயில்களில் இது தலவிருட்சமாக உள்ளது. மகிழம் பூவின் மருத்துவ குணங்கள் பல உள்ளன. அவற்றில் சிலவற்றை இந்தப் பதிவில் பார்ப்போம்.
மகிழம் பூவை நிழலில் உலர்த்தி தூளாக்கி ஒரு சிட்டிகை அளவு எடுத்து நாசியில் வைத்து நுகர துர்நீர் வெளியேறி, தலைவலி குணமாகும். மகிழம் பூவின் பொடியை மூக்குப்பொடி போல் அவ்வப்போது நுகர பீனிசம் எனும் சைனஸ் தொந்தரவு குணமாகும்.
மகிழம் பூவை வாயிலிட்டு மென்று சாற்றை வாயில் அடக்கி 5 நிமிடங்கள் கழித்து துப்பி விட்டு வாய் கொப்பளித்து வர நாளடைவில் பல் வலி மற்றும் பல் ஆட்டம் சரியாகும். மகிழம் பூவை நீரில் போட்டு காய்ச்சி வடிகட்டி குடிக்க உடல் வெப்பம் தணியும், உடல் பலத்தை அதிகரிக்கும். மகிழம் பூவை நீரில் காய்ச்சி பின்னர் அதில் பால் கலந்து குடித்தால் ஆண்மை அதிகரிக்கும்.
சிறிது மகிழம் பூக்கள் அத்துடன் சிறிது கொத்தமல்லி சேர்த்து, நீரில் இட்டு காய்ச்சி வடிகட்டி, அந்த நீரை தினமும் இரவு உறங்கும் வேளையில் பருகி வர, நிம்மதியான ஆழ்ந்த உறக்கம் உண்டாகும். மகிழம் பூ சாறு இதயம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. மகிழம் பூவை தேங்காய் எண்ணெயில் போட்டு வைத்து தலைக்குத் தடவி வந்தால் உங்களுக்கு பொடுகு, பேன் தொல்லை இருக்காது. மகிழம் பூவை காயவைத்து அரைத்துப் பொடியாக்கிப் பாலில் கலந்து காலை, மாலை அருந்தி வர, காய்ச்சல், தலைவலி, உடல் வலி, கழுத்து, தோள்பட்டை வலி போகும். அறிவு வளர்ச்சிக்கும் உதவும்.
10 கிராம் மகிழம் பட்டையைப் பொடித்து அரை லிட்டர் நீரிலிட்டு 100 மி.லி.யாகக் காய்ச்சி வடிகட்டி தேன் சேர்த்து 50 மி.லி.யாக காலை, மாலை தொடர்ந்து சாப்பிட்டு வர கருப்பை பலவீனம் தீரும்.
மகிழ விதையை நீர் விட்டு காய்ச்சி குடித்து வர காய்ச்சல் தணியும். மகிழ விதையை நன்கு தூளாக்கி நெய் கலந்து சாப்பிட உடல் பலம் மற்றும் ஆண்மையை அதிகரிக்கும். மகிழ விதையை பொடி செய்து தேனில் கலந்து உண்ண இறுகிய மலத்தை இளக்கி வெளியேற்றும். மலச்சிக்கல் தீரும். உடல் உஷ்ணத்தை தணிக்கும்.
மகிழ மர துளிர் இலைகளை சேகரித்து நிழலில் உலர்த்தி அதனுடன் பாதிரி மரப் பட்டையை சேர்த்து பொடி செய்து, நல்ல வெல்லம் சேர்த்து ஒரு கிராம் அளவு சாப்பிட்டு வர சர்க்கரை நோய் கட்டுப்படும். மகிழ மர இலையை ஒன்றிரண்டு எடுத்துக் கொண்டு அவற்றை நீர் விட்டு காய்ச்சி ஆறிய பின் அந்தக் கஷாயத்தை கொண்டு வாய் கொப்பளித்து வர பல்வலி மற்றும் பல் நோய்கள் சரியாகும். மகிழ மரப்பட்டையை பொடியாக்கி பல் துலக்கினால் எப்படிப்பட்ட பல் வலியும் சரியாகும். மகிழ மரத்தின் முற்றாதக் காயை வாயில் போட்டு மென்று வந்தால் பல் இறுகும், ஈறு பலப்படும்.
மகிழ வேர், புங்கம் வேர், திப்பிலி, மிளகு, சீந்தில் இலை இவற்றை சம அளவு எடுத்து கற்றாழை சாற்றில் அரைத்து சிறு மாத்திரைகளாக உருட்டி நிழலில் காயவைத்து சாப்பிட அனைத்து விஷங்களையும் போக்கும் சக்தி உடையது. மகிழ மர பிஞ்சை அதிகமாக சாப்பிடக் கூடாது. அதனால் வாந்தி, நா வறட்சி மற்றும் மலச்சிக்கல் ஏற்படும்.