

வீட்டில் திடீரென சுவற்றிலோ அல்லது பாத்ரூமிலோ பல கால்களை கொண்ட ஒரு பூரானை பார்த்தால் நமக்கு ஏற்படும் அந்த பகீர் உணர்வை வார்த்தைகளால் சொல்ல முடியாது. இவை பார்ப்பதற்கு கொஞ்சம் பயங்கரமாக இருந்தாலும், உண்மையில் நமது வீட்டைத் தேடி வருவதற்கான காரணங்கள் ரொம்பவே சாதாரணமானவைதான்.
நமது வீட்டிற்குள் இருக்கும் சில சாதகமான சூழ்நிலைகள்தான் இவற்றுக்கு மிகப்பெரிய அழைப்பிதழாக அமைகின்றன. இப்படி தேடி வரும் இந்த பலகால் பூச்சிகளை எப்படி ஈஸியாகவும் நிரந்தரமாகவும் வீட்டை விட்டு விரட்டுவது என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க.
வீட்டிற்குள் வர முக்கிய காரணங்கள்!
பொதுவாகவே இந்த பூச்சிகள் சைவ சாப்பாட்டை விரும்புவது கிடையாது. உங்கள் வீட்டில் ஏற்கனவே சிலந்தி, எறும்பு அல்லது கரப்பான் பூச்சிகள் அதிகமாக இருந்தால், அவற்றை வேட்டையாடி சாப்பிடுவதற்காகவே இவை சத்தமில்லாமல் உள்ளே நுழைந்துவிடும். வெளிச்சம் என்றால் இவற்றுக்கு சுத்தமாக பிடிக்காது என்பதால், எப்போதும் இருட்டாக இருக்கும் மூலை முடுக்குகளில் தஞ்சம் அடைகின்றன.
அதுமட்டுமில்லாமல், பாத்ரூம் மற்றும் சமையலறை சிங்க் போன்ற ஈரப்பதம் அதிகம் உள்ள இடங்கள் இவற்றுக்கு ரொம்பவே பிடிக்கும். வெளியே கடுமையான வெயிலோ அல்லது பெருமழையோ பெய்தால், தங்களைப் பாதுகாத்துக்கொள்ள உடனடியாக நமது வீடுகளை நோக்கி படையெடுக்கத் தொடங்கிவிடுகின்றன.
தொல்லை அதிகரித்துள்ளதை காட்டும் அறிகுறிகள்!
ஒன்றிரண்டு பூச்சிகளை எப்போதாவது பார்த்தால் அதை நினைத்து நாம் பெரிய அளவில் பயப்படத் தேவையில்லை. ஆனால், அடிக்கடி இவை உங்கள் கண்ணில் பட்டால் நிலைமை சற்று சீரியஸாக உள்ளது என்று அர்த்தம். இவை வளரும்போது தங்களின் பழைய தோல்களை உரித்து ஆங்காங்கே போட்டுவிட்டு செல்லும்.
வீட்டை சுத்தம் செய்யும்போது அப்படிப்பட்ட வெள்ளை நிற தோல்களை நீங்கள் பார்த்தால், ஏதோ ஒரு இடத்தில் அவை முகாமிட்டுள்ளன என்பதை புரிந்து கொள்ளலாம். வீட்டின் ஏதாவது ஒரு இருட்டான பகுதியில் இவை கூட்டமாக சுற்றிக்கொண்டு இருந்தாலும் அது ஒரு பெரிய எச்சரிக்கை மணிதான். அதேபோல, உங்கள் வீட்டில் மற்ற சிறு பூச்சிகளின் நடமாட்டம் திடீரென அதிகரித்தாலும், அவற்றை தேடி இவை வருவதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம்.
நிரந்தரமாக விரட்ட வழிகள்!
இவற்றை ஒழிப்பதற்கு மிகச் சிறந்த ஐடியா என்னவென்றால், இவற்றின் சாப்பாட்டை முதலில் ஒழிப்பதுதான். ஆம், வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொண்டு மற்ற சிறு பூச்சிகளை ஒழித்துவிட்டாலே இவற்றுக்கு சாப்பாடு இல்லாமல் தானாகவே வீட்டை விட்டு வெளியேறிவிடும்.
சுவர்கள் மற்றும் கதவு, ஜன்னல் ஓரங்களில் இருக்கும் சின்னச் சின்ன விரிசல்களை சிமெண்ட் வைத்து முழுமையாக அடைத்துவிட வேண்டும். குறிப்பாக, தண்ணீர் குழாய்களில் கசிவு இருந்தால் அதை உடனே சரி செய்வது மிக முக்கியம். காற்றோட்டத்தை அதிகப்படுத்தி வீட்டை எப்போதும் ஈரம் இல்லாமல் காய்ந்த நிலையில் வைத்திருந்தாலே பாதி பிரச்சனைகள் அங்கேயே முடிவுக்கு வந்துவிடும்.
இந்த பூச்சிகளை பார்த்தவுடன் பயந்துபோய் கண்டகண்ட கெமிக்கல்களை அடித்து வீணாக செலவு செய்ய வேண்டாம். வீட்டின் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருப்பதும், தேவையற்ற குப்பைகளை வீட்டில் சேர விடாமல் தடுப்பதும் மட்டுமே இவற்றுக்கு எதிரான ஒரு நிரந்தர தீர்வாக அமையும்.