
அதிகமாக பசித்தால் தாங்கிக் கொள்பவர்கள் உண்டு. எதையாவது கேட்டுத் தொலைத்தால் தவறாக போய் விடுமோ என்று பேசாமல் இருப்பவர்களும் உண்டு. அது அவசியமா என்றால் தேவையில்லை. அதுபோல் உள்ள சில விஷயங்களை எப்படி கையாள்வது என்பதை இப்பதிவில் காண்போம்.
பிரசவித்த பெண்ணுக்கு:
என் தோழியின் மகளுக்கு குழந்தை பிறந்திருந்தது. பால் கொடுக்கும் தாயான அவளுக்கு அடிக்கடி பசி ஏற்பட்டது. ஏதாவது சாப்பிட்டால் பரவாயில்லை என்று இருந்த பொழுதும் பசியை பொறுத்துக் கொண்டு இருந்து விடுவாள். காரணம் மூன்று வேளை சாப்பிடுவதற்கு பதிலாக, இரண்டு ஒரு வேளை அதிகமாக சாப்பிட்டால் வீட்டில் உள்ள பெரியோர்கள் நம்மைப் பற்றி ஏதாவது நினைத்துக் கொள்வார்களோ என்ற பயம். அல்லது அடிக்கடி சாப்பிடுவதை வெளியில் சொல்லி விடுவார்களோ என்ற அச்சம். காரணம் அவளுக்கு அம்மா இல்லை. அதனால் கணவர் வீட்டில் தான் பிரசவம் பார்த்து கவனித்துக் கொண்டிருந்தார்கள்.
அதனால் அங்கு அவளுக்கு சாப்பிடுவதற்கு ஒரு அச்சம் இருந்தது. இதனால் தான் இப்படியாக பசியை பொறுத்துக் கொண்டு இருந்திருக்கிறார் . நாளடைவில் அவள் மிகவும் மெலிந்து போய் இருப்பதை பார்த்தவர்கள் காரணம் கேட்ட பொழுது தான் விஷயம் வெளியில் தெரிய வந்தது. பிறகு அப்பெண்மணிக்கு தனியாக ஒரு டப்பாவில் சாப்பிடுவதற்கு ஏற்ற ஸ்நாக்ஸ் வகைகளை செய்து அவரின் இடத்திலேயே வைத்து விட்டார்கள்.
அதேபோல் கொஞ்சம் சாதம், குழம்பு எல்லாம் அதிகமாக சமைத்து பசி எடுக்கும் பொழுது சாப்பிட சொல்லி அவர்களாகவே ஒரு தட்டில் பரிமாறி கொடுத்தார்கள். அதன் பிறகு அவள் பழைய நிலைக்கு திரும்பி உடல் தேறினாள். ஆதலால் பிரசவித்த பெண்கள் இருக்கும் வீட்டில் அவர் சரியாக சாப்பிடுகிறாரா என்பதை கவனிக்க வேண்டியது அவசியமே!
முதியோர் விருப்பம்:
முதியோர் வீட்டிலும் அப்படித்தான். மிகவும் வயதானவர்கள் இருக்கும் வீட்டில் அவர்களுக்கு மென்று சாப்பிட முடியாது என்பதால் முறுக்கு பிஸ்கட் போன்ற பலகாரங்களை வைக்காமல் மற்றவர்கள் சாப்பிடுவார்கள். அதை அவர்கள் கவனித்துக் கொண்டு, தானும் சாப்பிட ஆசைப்படுவார்கள். ஆனால் மருமகள், பெண்ணிடம் கேட்பதற்கு அச்சப்பட்டு கொண்டு அப்படியே இருந்து விடுவார்கள். இதைக் குறிப்பால் அறிந்து கொண்ட அவரின் மருமகள் முறுக்கை பொடியாக்கி கொடுக்க அந்த மாமியார் சாப்பிட்டு ஆசையை தீர்த்துக் கொண்டார்.
அதன் பிறகு ஒரு டப்பாவில் தன் குழந்தைகளுக்கு பள்ளிக்கு போட்டு அனுப்பும் ஸ்நாக்ஸ் வகைகள் மற்றும் நூடுல்ஸ்களை குழந்தைகளுக்கு கொடுக்கும்போது இவர்களுக்கும் சேர்த்து செய்து ஒரு டப்பாவில் போட்டு வைத்து விடுவார்கள். அதை முதியோர்கள் விரும்பி சாப்பிட்டு ஆசைய தீர்த்துக் கொள்வார்கள்.