ஒவ்வொரு உறவிலும், குறிப்பாக காதல் மற்றும் திருமண பந்தங்களில், கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது இயல்பான ஒன்று. இருவேறுபட்ட பின்னணியில் இருந்து வந்த இரு நபர்கள் ஒன்றாக வாழும்போது, அவர்களின் எண்ணங்களிலும், விருப்பங்களிலும், பழக்கவழக்கங்களிலும் வேறுபாடுகள் இருப்பது தவிர்க்க முடியாதது. ஒருவருக்குப் பிடித்தது மற்றவருக்கு பிடிக்காமல் போகலாம். ஒருவரின் கனவுகள் மற்றவரின் லட்சியங்களாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், இந்த வேறுபாடுகளுக்கு மத்தியிலும் அவர்களை ஒன்றிணைப்பது அன்பென்ற உணர்வுதான்.
எப்போதெல்லாம் இந்த அன்பை விட புரிதல் குறைந்துவிடுகிறதோ, அப்போதெல்லாம் உறவில் விரிசல் விழத் தொடங்குகிறது. ஒருவரை ஒருவர் சரியாகப் புரிந்து கொள்ளாத நிலையில்தான் பெரும்பாலான சண்டைகள் உருவாகின்றன. அப்படியென்றால், நம்முடைய துணையை நாம் எப்படி சரியாகப் புரிந்து கொள்வது?
முதலில், உங்கள் உறவில் சண்டைகள் வருவதற்கான மூல காரணங்களை ஆராயுங்கள். உங்களுக்கு எது பிடிக்கிறது, உங்கள் துணைக்கு எது பிடிக்கிறது என்பதை கவனியுங்கள். எந்த மாதிரியான சூழ்நிலைகளில் உரசல் ஏற்படுகிறது என்பதை கண்டறியுங்கள். ஒரு பிரச்சனை வரும்போது, அவர்கள் உங்கள் வாழ்க்கைத் துணை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
அந்த நேரத்தில், உங்களையும் அந்தப் பிரச்சனையையும் மட்டுமே பாருங்கள். உங்கள் கோபத்தையோ அல்லது உங்கள் துணையையோ பார்க்காதீர்கள். பிரச்சனைகளை அமைதியான மனநிலையில் அணுகுவதுதான் முக்கியம். கோபப்படுவதால் எந்த தீர்வும் கிடைக்காது.
அடுத்ததாக, மற்றவர்கள் சொல்வதை கவனிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். நாம் எப்போதும் நம்முடைய கருத்தே சரியானது என்று நினைப்போம். ஆனால், மற்றவர்களின் கருத்துக்களையும் கேட்க வேண்டும். அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை பொறுமையாக கேட்டால்தான் அவர்களின் நியாயமான கோணத்தைப் புரிந்து கொள்ள முடியும். ஒரே மாதிரியான பிரச்சனைகளுக்காக திரும்பத் திரும்ப சண்டையிடுவதை தவிருங்கள். அப்படிப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியாது. தீர்வு இருந்திருந்தால், அது முதல் முறையிலேயே கிடைத்திருக்கும்.
உங்கள் பிரச்சனைகளையும், அதற்கான தீர்வுகளையும் அலசி ஆராயுங்கள். ஒரு தீர்வு இருவருக்கும் ஏற்புடையதாக இருந்தால், ஒருவர் மற்றவருக்காக சிறிது விட்டுக்கொடுக்க தயாராக இருங்கள். சண்டையின்போது ஒருபோதும் உங்கள் குரலை உயர்த்தாதீர்கள். சிறியதாக இருந்தாலும் சரி, பெரியதாக இருந்தாலும் சரி, கத்துவது அல்லது கூச்சலிடுவது பிரச்சனையை மேலும் பெரிதாக்குமே தவிர, எந்த நன்மையையும் தராது. அமைதியாக இருந்து பிரச்சனைகளை கையாளுவதே சிறந்தது.
எந்தவொரு பிரச்சனையையும் எதிர்காலத்தில் பேசுவதற்கு தயங்காதீர்கள். பிரச்சனைகளைத் தீர்த்துவிட்டு உறங்குவது மிகவும் முக்கியம். அதேபோல், பழைய பிரச்சனைகளை மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டிருக்காதீர்கள். முடிந்தவரை பிரச்சனைகளை மறந்துவிட்டு, வாழ்க்கையை முன்னோக்கி நகர்த்த முயற்சி செய்யுங்கள்.
நல்ல உறவுக்கு மன அமைதி மிகவும் அவசியம். உங்கள் துணை ஒரு மனிதர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர்களும் தவறுகள் செய்யக்கூடும். குறை இல்லாத மனிதர்கள் யாருமில்லை என்பதை உணர்ந்து, மற்றவர்களின் தவறுகளை ஏற்றுக்கொள்ளப் பழகுங்கள்.