

டாக்ஸிக் என்ற ஆங்கில வார்த்தைக்கு பொதுவான அர்த்தம் நச்சுத்தன்மை அல்லது விஷம் என்பதாகும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் மனிதர்களின் நடத்தை மற்றும் உறவுகளைக் குறிப்பதற்கு இந்த வார்த்தை பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. ஒருவர் நம்மிடம் காட்டும் எதிர்மறையான நடத்தை நம்மை மனரீதியாகவோ அல்லது உணர்வு ரீதியாகவோ காயப்படுத்தினால் அதனை டாக்ஸிக் நடத்தை (Toxic Behaviour) என்று கூறுகிறோம்.
ஒரு நபருடன் பழகிய பிறகு அல்லது ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருக்கும் பொழுது நாம் மகிழ்ச்சியாக இல்லாமல் எந்நேரமும் பயம், பதற்றம் அல்லது சோர்வை உணர்ந்தால் நாம் ஒரு நச்சுத்தன்மையான சூழலில் இருக்கிறோம் என்று அர்த்தம்.
ஒருவருடைய பேச்சு, செயல் அல்லது குணம் நம்முடைய மன அமைதியைக் கெடுத்து, தொடர்ந்து மன அழுத்தத்தையும், எதிர்மறை எண்ணங்களையும் உருவாக்கினால் அந்த மனிதர்களிடமிருந்து ஒதுங்கி விடுவது நல்லது.
டாக்ஸிக் மனிதர்களை எப்படிக் கண்டறிவது?
1. எப்போதும் குறை கூறுவது:
நாம் என்ன செய்தாலும் அதில் தப்பு கண்டுபிடிப்பார்கள். நம்மை எப்போதும் தாழ்த்திப் பேசுவார்கள் மற்றும் நம் தவறுகளை மட்டுமே சுட்டிக்காட்டுவார்கள்.
2. சுயநலம்:
எப்போதும் தங்களைப் பற்றியே நினைப்பார்கள். நம் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க மாட்டார்கள். அவர்களின் தேவைகளுக்கு மட்டுமே நமக்கு முக்கியத்துவம் தருவார்கள். தங்களின் தவறுகளை ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். பழியை மற்றவர்கள் மீது போடுவார்கள்.
3. பொறாமை:
நம் வெற்றியை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. நடந்த ஒரு உண்மை சம்பவத்தையே மாற்றிப் பேசி, நம் நினைவாற்றல் அல்லது புத்தி கூர்மை மீதே நமக்கு சந்தேகம் வர வைப்பார்கள்.
4. கையாளுதல்(Manipulation):
தங்களுக்குச் சாதகமாக நம்மை மாற்றி யோசிக்க வைப்பார்கள். தவறு அவர்கள் மீது இருந்தாலும், நம்மை குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்குவார்கள். தங்களுக்குத் தேவையானதை சாதிக்க நம்மை குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்க சிறிதும் தயங்க மாட்டார்கள்.
இவர்களை எப்படி கையாள்வது?
டாக்சிக் மனிதர்கள் நம் குடும்பத்திலோ, நட்பிலோ அல்லது வேலை பார்க்கும் இடத்திலோ இருக்கலாம். அவர்களைக் கையாள்வதற்கு சில எளிய வழிகள் உள்ளன.
1. எல்லைகளை வகுத்துக் கொள்ளுங்கள்:
நம்மிடம் அவர்கள் எப்படி நடக்க வேண்டும், எவற்றையெல்லாம் நாம் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். உதாரணத்திற்கு தேவையில்லாமல் நம்மை விமர்சித்தால் இம்மாதிரி பேசினால் என்னால் உங்களுடன் உரையாடலைத் தொடர முடியாது என்று நேரடியாக கூறி விடுவது அவர்களை ஒரு எல்லைக்குள் வைத்திருக்கும் வழியாகும்.
எவ்வளவு தூரம் பழகலாம், என்ன பேசலாம் என்ற எல்லையைத் தீர்மானிக்க வேண்டியது அவசியம். அவர்களின் தேவையற்ற பேச்சுகளுக்கு இடம் கொடுக்காமல் இருந்தாலே போதும், நாம் மன உளைச்சலுக்கு உள்ளாக மாட்டோம்.
2. எதிர்வினை ஆற்றாதீர்கள்:
அவர்கள் நம்மைத்தூண்டும் விதமாகப் பேசினாலும் உணர்ச்சிவசப்படாமல் அமைதியாக இருப்பதும், அவர்கள் உருவாக்கும் வீண் வம்புகளிலோ அல்லது அதிகாரப் போட்டிகளிலோ சிக்கிக்கொள்ளாமல் இருக்கப் பழக வேண்டும். அவர்கள் நம்மைக் கோபப்படுத்த அல்லது உணர்ச்சிவசப்பட வைக்க முயலும் பொழுது, அமைதியாக இருப்பதே நல்லது. நம் அமைதியே அவர்களுக்குப் பெரிய பதிலடியாக இருக்கும்.
3. நேரடியாகப் பேசுங்கள்:
அவர்களின் நடத்தை நம்மைக் காயப்படுத்துகிறது என்றால் அதைத் தெளிவாகவும் கண்ணியமாகவும் அவர்களிடம் சொல்லிவிடுவது நல்லது. அத்துடன் அவர்களுடன் செலவிடும் நேரத்தைக் குறைக்கவும். நேரில் சந்திப்பதையோ அல்லது போனில் பேசுவதையோ தேவையான அளவுக்கு மட்டுமே வைத்துக் கொள்ளலாம். அவர்கள் நம்மைக் குறை சொல்லும் பொழுது வாதாடாமல் உண்மையை மட்டும் நிதானமாகக் கூறிவிட்டு நகர்ந்து விடுவது நல்லது.
4. விலகி இருங்கள்:
அனைத்து முயற்சிகளுக்கும் பிறகும் ஒருவருடைய டாக்ஸிக் நடத்தை மாறாமல் இருந்தால், குறிப்பாக அவை நம் மன ஆரோக்கியத்தை பாதித்தால் அந்த உறவில் இருந்து அல்லது நபரிடமிருந்து முற்றிலும் விலகி விடுவது தான் சிறந்த முடிவாக இருக்கும். நம் மன ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு பலமுறை சொல்லியும் அவர்கள் மாறவில்லை என்றால் நம் மன அமைதிக்காக அவர்களிடமிருந்து மெதுவாக விலகி இருப்பதே நல்லது.
5. சுய பாதுகாப்பு:
நம்மை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். நேர்மறையான எண்ணங்கள் கொண்ட மனிதர்களுடன் அதிக நேரம் செலவிட டாக்ஸிக் மனிதர்களிடமிருந்து அல்லது அந்த சூழ்நிலையில் இருந்து நம்மால் எளிதில் தப்பிக்க முடியும். நம் மன அமைதியும் சுயமரியாதையும் தான் எல்லாவற்றையும் விட முக்கியம் என்பதை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளவும்.
உங்கள் மன அமைதியைக் கெடுக்கும் நச்சுத்தன்மை கொண்ட மனிதர்களைத் துல்லியமாக அடையாளம் கண்டு, அவர்களின் எதிர்மறை அழுத்தத்திலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் தெளிவும் மன வலிமையும் கிடைக்கும்.