
இந்த சம்மர் சீசன்ல மாவடு, ஆவக்காய், மாம்பழம் என எங்கெங்கு காணினும் மாம்பழ ராஜ்ஜியம் தான். மாவடுவையும், ஆவக்காயையும் ஊறுகாயாக போட்டுக் கொண்டாலும், ருசியான மாம்பழத்தை சுவைத்து சாப்பிடும் ஆர்வம் எல்லோருக்குமே உண்டு. இப்பழத்தை பிடிக்காதவர்களே இருக்க முடியாது.
கடைகளில் நாம் மாம்பழங்களைப் பார்க்கும் பொழுது இவைகளை கல் என்று கூறக்கூடிய கால்சியம் கார்பைடு வைத்து பழுக்க வைத்ததா அல்லது இயற்கையாகவே பழுத்ததா என்கிற சந்தேகம் வந்துவிடும். இதை ஓரளவு சிறிய செயல்களின் மூலம் கண்டறிந்து விடலாம்.
மாம்பழத்தை எடுத்துப் பார்க்கும் பொழுது நன்றாக பள பள வென்று மஞ்சள் நிறத்தில் நம் கண்களை ஈர்க்கும் வகையில் இருந்தால் அது கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் ஆகும். பொதுவாக இயற்கையாகவே பழுக்கும் மாம்பழங்கள் என்றால் பழத்தில் ஒரு சில இடங்களில் பச்சை நிறமும் தெரியும். எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி மஞ்சள் இருந்தால் நிச்சயம் அது இயற்கையில் பழுத்தது அல்ல.
இரண்டாவது, மாம்பழத்தை எடுத்து முகர்ந்து பார்த்தால் வாசனை இருக்காது. ஆனால் மாம்பழத்தின் எந்தப் பகுதியை முகர வேண்டும் தெரியுமா? மாம்பழத்தின் காம்புப் பகுதியைத் தான் முகர்ந்து பார்க்க வேண்டும். அப்படி முகரும் பொழுது நல்ல வாசனை வந்தால் அது நல்லபழம். கல் வைத்து பழுக்க வைத்த மாம்பழம் என்றால் அந்த வாசனை வராது.
மூன்றாவது, மாம்பழம் இயற்கையாக பழுத்தால் கைகளில் எடுக்கும் பொழுதே கனமாக அறிய முடியும். செயற்கையாக பழுக்க வைத்திருந்தால் அவ்வளவாக வெயிட் தெரியாது. லேசாக அறியப்படும்.
இப்பழத்தில் இரண்டு ஆண்டி ஆக்ஸிடண்ஸ் இருப்பதால், புற்று நோய் வராமல் தடுக்கும் ஆற்றலைக் கொண்டது. மேலும் இதிலிருக்கும் வைட்டமின் ஏ, வைட்டமின் சி இரண்டும் , இதயம், கண்கள், சருமம் சம்பந்தப்பட்ட ரோகங்களுக்கு தடா போடும் சக்தியைக் கொண்டது.
இந்த சீசனில் மட்டுமே கிடைக்கக்கூடிய மாம்பழத்தை தேர்ந்தெடுத்து, ஆனந்தமாகப் புசியுங்கள். சர்க்கரை நோயாளிகள் கூட சில துண்டங்கள் சாப்பிடலாம், தவறில்லை என்று மருத்துவர்களே கூறி வருகிறார்கள். ஆகையால் வயது, ரோகம் இவற்றைக் கருத்தில் கொண்டு, மருத்துவரின் ஆலோசனையோடு மாம்பழத்தை சாப்பிடுங்கள். காற்றுள்ள பொழுதே தூற்றிக் கொள்ள வேண்டியதுதான்.