

போலித்தனம் போர்த்தியபடி உலா வரும் மனிதக் கூட்டத்திற்கு இடையே நிஜமான நற்குணம் நிறைந்த நல்ல மனிதர்களை அடையாளம் காண்பது அவ்வளவு சுலபமல்ல. உரத்த குரலில் பேசி, வெளிப்படைத் தன்மையுடன் இருப்பதுபோல் நடிப்பவர்களை நல்லவர்கள் லிஸ்டில் சேர்த்துவிட முடியாது. நல்ல பண்புடையவர்கள், எல்லா சூழ்நிலைகளிலும் அமைதியுடனிருந்து முரணற்ற சீரான மனோபாவங்களை வெளிப்படுத்துபவர்களாய் இருப்பர்.
அவர்களிடம் குற்றம் குறை காணமுடியாத வகையில் குடிகொண்டிருக்கும் ஐந்து வகை நற்பண்புகளை இப்பதிவில் பார்க்கலாம்.
சுயசிந்தனையோடு தனித்து நிற்கும் நல்ல மனிதர்கள்
மற்றவர்கள் என்ன கூறினாலும், அவர்களை திருப்திப் படுத்தும் வகையில் அதை ஆமோதிக்கும் வழக்கம் இவர்களிடம் கிடையாது. உலகமே எதிர்த்து நின்றாலும் தன் மனதிற்கு நியாயம் எனப்பட்டதை நேர்மையான முறையில் வெளிப்படுத்த இவர்கள் தயங்குவதில்லை. அதன் விளைவாய் இவர்கள் தனித்து விடப்பட்டாலும் அதற்காக வருத்தப்படவும் மாட்டார்கள். தங்கள் இருப்பை நிரூபிக்க ஒரு வைரல் ட்ரெண்டிங்கை உருவாக்காமல், தங்களுக்கான இடத்தை சுய விழிப்புணர்வுடன் தாமாகவே அமைத்துக்கொண்டு பூரணமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பர்.
அகத்தின் வழிகாட்டுதலைப் பின்பற்றும் நல்ல மனிதர்கள்
வெளியிலுள்ளவர்களின் வழிகாட்டுதலை பயன்படுத்தி இவர்கள் எந்த செயலையும் செய்வதில்லை. இவர்களின் உள் மனமே இவர்களுக்கு சிறந்த திசைகாட்டி. ஒரு செயலை செய்யும்போது மற்றவர்கள் இதைப்பற்றி என்ன நினைப்பார்கள் என்ற கவலை இவர்களுக்கு ஒரு போதும் வராது. தன் மனதுக்கு சரியெனப்பட்டதை செய்து முடிப்பதிலேயே கவனம் செலுத்துவர். தனக்கான எல்லைக்கோட்டை வகுத்துக்கொண்டு, எந்தவித உயரிய லாபத்திற்காகவும் அதை இவர்கள் ஒருபோதும் மீறுவதில்லை. இவர்களின் சொல்லும் செயலும் எப்பொழுதும் ஒருமித்ததாகவே இருக்கும் என்பதை இவர்களின் பேச்சிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.
மற்றவர்களிடம் குறை கண்டுபிடிக்கவோ அல்லது மற்றவர்களை எடை போடவோ இவர்கள் ஒருபோதும் தங்கள் சக்தியை செலவிடுவதில்லை. அதற்கு பதில், மற்றவர் அனுபவங்களை கேட்டறிந்து தங்கள் வியப்பை வெளியிடுவார்கள். இதனால், இவர்கள் தங்களுடன் இருப்பது பாதுகாப்பு என பிறர் எண்ணும்படியான வாய்ப்பு உருவாகும். மேலும், "நம் முந்தைய கால தவறுகளை இவர்கள் ஆயுதமாக்கி நம்மை ரண களமாக்க முயலவில்லை. நம்முடன் மனித நேயத்துடன் பழகவே விரும்புகின்றனர்" என்ற நல்லெண்ணத்தை பிறர் மனதில் உண்டு பண்ணும்.
தவறுகளை ஒப்புக்கொண்டு பொறுப்பேற்கும் நல்ல மனிதர்கள்
இவர்கள் ஒருபோதும் தங்கள் தோல்விகளை மறைக்க விரும்புவதில்லை. "அந்த முறை நான் ரொம்ப சொதப்பிவிட்டேன். அடுத்த முறை மீண்டும் அதே தவறை செய்யாமல் கவனமுடன் இருக்க வேண்டும் என்ற படிப்பினையை இதன் மூலம் பெற்றுக் கொண்டேன்" என்று வெளிப்படையாகக் கூறி வெற்றியை நோக்கி பயணத்தை தொடர்ந்து கொண்டிருப்பார்கள்.
தங்கள் ஈகோவைக் காத்துக்கொள்ள இவர்கள் ஒருபோதும் உண்மைக்குப் புறம்பானதை திரித்துக் கூறுவதில்லை. தாங்கள் செய்த தவறுக்கு மன்னிப்பு கோரவும் இவர்கள் தயங்குவதில்லை. தன்னிடமுள்ள குறைகளை சுய விழிப்புணர்வுடன் உன்னிப்பாக உற்று நோக்கி, அதற்கான பொறுப்பை தாங்களே ஏற்றுக் கொள்வார்கள். இந்த மாதிரியான நேர்மை பலரிடம் காணமுடியாத ஒன்று. ஒரு விவாதத்திற்காக நல்லவற்றை பேசி நிறுத்திக்கொள்ளாமல், இவர்கள் நல்லவர்களாக வாழ்வதையே மதிப்பு மிக்க செயலாக கருதி வாழ்ந்து வருவார்கள்.
இந்தப் பதிவை வாசிப்பதன் மூலம், உங்களைச் சுற்றியுள்ளவர்களில் யார் உண்மையானவர், யார் போலி என்பதைத் துல்லியமாகப் புரிந்துகொள்ளும் தெளிவு உங்களுக்குக் கிடைக்கும். இது உங்களை ஏமாற்றங்களில் இருந்து பாதுகாப்பதோடு, உங்கள் வாழ்க்கையில் உண்மையான நற்பண்புகள் கொண்ட மனிதர்களை மட்டும் தக்கவைத்துக் கொள்ளவும், உங்களைச் சுற்றிலும் ஒரு நேர்மறையான சுற்றத்தாரை உருவாக்கிக் கொள்ளவும் வழிவகுக்கும்.