ஒருவர் நம் மீது பொறாமை கொண்டுள்ளார் என்பதை அவர்களின் செயல்களே நமக்குத் தெள்ளத் தெளிவாக விளக்கும். அதுபோன்று நம் மீது பொறாமை கொள்ளும் நபர்களை எப்படிக் கண்டறிவது என்பதை இந்தப் பதிவில் காண்போம்.
புறம் பேசுதல்: நம்மைப் பற்றி நாம் இல்லாத சமயங்களில் புறம் பேசுவதும், நம்மை இழிவுபடுத்துவதற்கான வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருப்பதும் அவர்களின் சுபாவமாக இருக்கும். நம் ஒவ்வொரு செயல்களையும் உற்று கவனித்து நம்மை நேரிடையாகவோ மறைமுகமாகவோ குறை கூறுவது நம் மீது பொறாமை கொண்டுள்ளார் என்பதை நமக்குத் தெளிவுபடுத்தும்.
வளர்ச்சியைக் கண்டு பொறுக்க மாட்டார்கள்: வெற்றியோ பாராட்டோ இங்கு யாருக்குமே எளிதில் கிடைத்து விடுவதில்லை. அதற்கென்று நிறைய மெனக்கிட வேண்டும். ஆனால், நம் மீது பொறாமை கொள்பவர்கள் நம் வளர்ச்சியினைக் கண்டு பொறுக்காது, இது நம்முடைய கடின உழைப்பால் வந்தது என்று எண்ணாமல் அதிர்ஷ்டத்தால் வந்தது என்று பேசுவார்கள்.
சறுக்கலைக் கண்டு ரசிப்பவர்கள்: நமக்குக் கிடைத்த நல்லவை அனைத்தும் அதிர்ஷ்டத்தால் கிடைத்ததாக எண்ணுவதுடன், நாம் எதற்கும் தகுதியற்றவர்கள் என்று பேசி நம் தோல்வியைக் கண்டு முதலில் ரசிப்பவர்களும் இவர்கள்தான். நம் வாழ்வில் ஏற்படும் சிறு சிறு சறுக்கல்களையும், தோல்விகளையும் கண்டு சந்தோஷப்படுவார்கள்.
தரக்குறைவான விமர்சனம்: நம்மை இழிவுபடுத்துவதற்கான வாய்ப்புக்காகக் காத்துக் கொண்டிருப்பதும், மற்றவர்களிடம் நம்மைப் பற்றி தரக்குறைவாக விமர்சனம் செய்வதும், நம் மீது அதீத வெறுப்பைக் காட்டுவதும் பொறாமைப்படுபவர்களின் குணமாக இருக்கும். இவர்களிடம் எந்த உணர்வையும் வெளிக்காட்டாமல் ஒதுங்கி விடுவதுதான் நல்லது. இவர்களுக்கு எதிரில் நன்றாக வாழ்ந்து சாதித்துக் காட்டுவதுதான் சிறந்தது.
பாராட்ட மனம் வராது: நாம் செய்யும் எந்த செயலிலும் குறை கண்டுபிடிப்பார்கள். உதாரணத்திற்கு, புதிதாக வாங்கிய நகையை அவரிடம் காட்டினால் நன்றாக இருக்கிறது என்று சொல்ல மனம் வராது. எந்தக் கடையில் வாங்கினீர்கள்? இந்தக் கடை நகை சரியாக இருக்காதே என்று எந்த ஒரு நல்ல விஷயத்தையும் அவர்களுக்கு பாராட்டத் தெரியாது. நமக்கு நடக்கும் எந்த ஒரு நல்ல விஷயத்தையும் பொறுத்துக் கொள்ளவும் முடியாது. தேடித்தேடி குறை கண்டுபிடிப்பார்கள். பாராட்டு என்பது இவர்களிடம் இருந்து கிடைக்கவே கிடைக்காது. அதைக் கொண்டே தெரிந்து கொள்ளலாம், இவர்கள் நம் மீது பொறாமை கொண்டுள்ளார்கள் என்று.
நம்மை விட பணத்திலோ, குணத்திலோ, அழகிலோ என ஏதோ ஒன்றில் உயர்வாக இருக்கும் மற்றவரை பார்க்கும் பொழுது ஏற்படும் தீய எண்ணம்தான் பொறாமையாக மாறுகிறது. எனவே நாம் எப்போதும் அடுத்தவரைப் பார்த்து வாழாமல் நமக்காக வாழப் பழகினால் இந்தப் பொறாமை என்ற எண்ணம் தலை தூக்காது. பொறாமை குணம் நமக்குள் இருக்கும் நல்லவற்றை அழித்து விடும் தன்மை கொண்டது. எனவே, எந்த நிலையிலும் நாம் பிறரைக் கண்டு பொறாமை கொள்ளாமல் இருப்பதே நல்லது.