மார்கழி என்றாலே தனிச் சிறப்புதான். மார்கழி மாதம் வந்தாலே அனைத்து மங்கையருக்கும் கோலம்தான் நினைவுக்கு வரும். இந்த மாதம் கோலம் போடுவதற்கு மிக உகந்த மாதம் என்றுகூடச் சொல்லலாம். இம்மாதத்தில் அனைத்து நாட்களிலும் அதிகாலையில் கோலம் போடுவார்கள்.
மார்கழி மாத அதிகாலையில் பெருமாளை வணங்குவதற்கு சிறந்த மாதமாகவும் இது கூறப்படுகிறது. மார்கழி அதிகாலை வீட்டு வாசலில் நீர் தெளித்துக் கோலம் போடுவதால் மனதுக்கு உற்சாகமும், நினைவாற்றலும் பெருகுகிறது.
வீட்டு வாசலில் அதிகாலை நேரத்தில் கோலம் போடுவது மன மகிழ்ச்சியை தருகிறது. மார்கழி அதிகாலை நேரத்தில் நிலவும் இருப்பதால் அதன் குளிர்ச்சி தன்மையும் நமக்குக் கிடைக்கிறது. இம்மாதத்தில் வான்வெளியில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் தேவர்கள் மற்றும் ரிஷிகளிடமிருந்து நமக்கு நல்ல ஆற்றல்களும் ஆசிகளும் கிடைப்பதோடு, நல்ல காற்று ஓசோன் வாயுவும் நமக்குக் கிடைக்கிறது.
மார்கழி மாதத்தில் ஒளி வடிவமான இறைவனை வணங்கும்போது நமக்கு ஒளி ஆற்றல் கிடைக்கிறது. கோயிலை வலம் வரும்போது நிலத்தின் ஆற்றல் நமக்குக் கிடைக்கிறது. அந்தக் காலத்தில் நமது முன்னோர்கள் அரிசி மாவால்தான் வீட்டு வாசலில் கோலம் போடுவார்கள். வீட்டு வாசலில் கோலம் போடுவதால் தீய சக்திகளை வீட்டினுள் வருவது தடுக்கப்படும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
மார்கழி மாத அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து கை, கால்களை அசைத்து இடுப்பை வளைத்து வாசலில் தண்ணீர் தெளித்து கோலம் போடுவதால் நமக்குக் குளிர் போய், கதிரவனின் ஒளி நமக்குக் கிடைக்கிறது. இதனால் உடலுக்கு உடற்பயிற்சி செய்த பலன் கிடைக்கும். அது மட்டுமின்றி, இம்மாதத்தில் எங்கும் நிறைந்த இறைவனை வாயினால் பாடி, மனதினால் சிந்தித்தால் நாம் முன்பு செய்த பிழைகளும், இனி மேல் வருவதும் நெருப்பில் இட்ட தூசு போல அழிந்து விடும் என்று சொல்லப்படுகிறது.
‘ஊருக்கு முன்னரே வாசல் தெளித்து கோலம் போடு, இருள் பிரியும் முன்பே கோலம் போடு, சூரியன் வருவதற்கு முன்பு கோலம் போடு’ என்று நமது வீட்டுப் பெரியவர்கள் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். காரணம், யாராவது வீட்டை விட்டு அதிகாலையில் வெளியில் போவதாய் இருந்தால் அவர்கள் போவதற்கு முன்பு வாசல் தெளித்துக் கோலம் போட வேண்டும். அவர்கள் வீட்டிலிருந்து கிளம்பி போன பிறகு வாசல் தெளிக்காதே என்றெல்லாம் பெரியவர்கள் கூறுவார்கள். அதிகாலையில் கோலம்போடுவது வீட்டிலிருந்து வெளியில் செல்வோருக்கும் பாதுகாப்பாக விளங்கும்.