
வீடுகளின் தினசரி பல்வேறு தேவைகளுக்காக நாம் விதவிதமான பாத்திரங்களை புழக்கத்தில் வைத்து கையாளுகிறோம். அவற்றில் அலுமினியம், பித்தளை, எவர் சில்வர் என பல வகையான பாத்திரங்களைப் பயன்படுத்துகிறோம். அவற்றை முறையாகப் பராமரித்தால்தான் நீண்ட நாள் உழைப்பதோடு, எப்போதும் பளிச்சென்றும் இருக்கும். மேற்சொன்ன பாத்திரங்களை பராமரிக்கும் விதம் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
வெள்ளிப் பாத்திரங்கள் பளிச்சென்று இருக்க வேண்டுமானால் ஒரு கரண்டி கடலை மாவில் சிறிதளவு எலுமிச்சை பழச்சாறை கலந்து நன்றாகத் தேய்க்க வேண்டும். அதேபோல், பித்தளை மற்றும் வெள்ளிப் பாத்திரங்கள் கருத்து காணப்பட்டால் சாதம் வடித்த கஞ்சியில் சிறிது நேரம் அந்தப் பாத்திரத்தை ஊற வைத்து எடுத்துவிட்டு பிறகு நன்றாகக் கழுவினாலே போதும் பளிச்சென்று மாறிவிடும்.
உபயோகப்படுத்தாத பித்தளைப் பாத்திரங்களின் மேலே பச்சை நிறம் படிந்து காணப்படுகிறதா? கவலையே வேண்டாம். வினிகரையும் கொஞ்சம் உப்பையும் கலந்து நன்றாகத் தேய்த்துக் கழுவினால் பளிச்சென்று ஆகிவிடும்.
செம்புப் பாத்திரங்கள் பளிச்சென்று இருக்க வேண்டுமானால் புளித்த தயிரில் அந்தப் பாத்திரங்களை கொஞ்ச நேரம் ஊற விட்டு எடுத்து. பிறகு சபீனா கொண்டு தேய்த்துக் கழுவினாலே பளிச்சென்று மின்னும்.
சில நேரம் பாத்திரங்கள் ஒரேயடியாக எண்ணெய் பிசுக்காக இருக்கிறதா? அப்படியானால் சாம்பலைக் கொண்டு எண்ணெய் பிசுக்கான பாத்திரங்களைத் தேய்த்து கழுவுங்கள். எண்ணெய் பிசுக்கு பறந்தே போய்விடும்.
எவர்சில்வர் கரண்டியின் காம்பு உடைந்து போய்விட்டதா? உடனே அதை தூர தூக்கிப் போட்டு விடாதீர்கள். அதனை சாணை பிடித்து காய்கறி வெட்டும் கத்தியாகப் பயன்படுத்தலாம்.
அலுமினியப் பாத்திரத்தின் உட்பகுதியில் ஒரே கருப்பு நிறமாக இருக்கிறது என்று கவலைப்படுகிறீர்களா? அந்தப் பாத்திரத்தில் ஒரு தக்காளியை வெட்டி போட்டு வேக வையுங்கள். உடனே கருப்பு நிறம் மாறிவிடும்.
தினசரி சமையலுக்கு உபயோகிக்கும் எவர்சில்வர் பாத்திரங்கள் துரு பிடிக்காமல் இருக்க வேண்டுமா? சமைத்து முடித்து தேய்த்த பிறகு நன்றாகக் கழுவி ஒரு துணியால் நன்றாகத் துடைக்க வேண்டும். இதனால் எவர்சில்வர் பாத்திரங்கள் பளபளப்பாக இருக்கும். அதோடு, சீக்கிரம் துருவும் பிடிக்காது.
வெள்ளிப் பாத்திரங்களைத் தேய்க்கும்போது கடுகை அரைத்து தேய்த்தால் அந்தப் பாத்திரம் பளபளவென்று இருக்கும். வெள்ளிப் பாத்திரத்தில் உள்ளே உள்ள கறையும் காணாமல் போய்விடும்.
அடுப்பில் இருந்து எடுத்த உடனேயே பாத்திரங்களை தண்ணீருக்குள் போடக் கூடாது. அப்படிப் போட்டால் பாத்திரத்தின் ஆயுள் விரைவில் குறைந்து விடும்.