
இன்றைய காலகட்டத்தில் நாட்டில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டை போகிறது. வரும் ஆண்டுகளில் இன்னும் அது அதிகரிக்கக்கூடும். இந்த AI தொழில் நுட்ப காலத்தில் மாணவச் செல்வங்களே, நீங்கள் படிப்பை மட்டுமே நம்பியிருக்கக் கூடாது. படிப்போடு நிறுத்தி விடாமல் பணியிடத்தில் உதவக்கூடிய சில பயனுள்ள திறன்களையும் கண்டிப்பாக நீங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
பள்ளியிலோ அல்லது கல்லூரியிலோ இதை உங்களால் கற்றுக்கொள்ள இயலாது. நீங்கள் தானாகவே உங்கள் சொந்த முயற்சியினாலும் விருப்பத்தாலும் இவற்றைக் கற்றுக்கொள்ள வேண்டும். மாணவர்களே, படிப்பைத் தவிர வளர்த்துக்கொள்ள வேண்டிய சில முக்கியமான விஷயங்கள் பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
உங்களை நீங்களே கண்டுபிடியுங்கள்: முதலில் நீங்கள் வாழ்க்கையில் உங்கள் பெயருக்குப் பின்னால் என்ன அடையாளத்தைச் சேர்க்க விரும்புகிறீர்கள் என்பதை ஆராய வேண்டும். உங்களுக்குப் படிப்பைத் தவிர வேறு எந்தத் துறையில் ஈடுபாடு அதிகமாக இருக்கிறதோ அதில் தக்க பயிற்சியை பெற வேண்டும்.
சிலருக்கு விளையாட்டில் விருப்பமிருக்கலாம், சிலருக்கு டிவி மொபைல் போன்ற சாதனங்களில் உள்ள உறுப்புகளை எப்படி உருவாக்குவது அல்லது சரி செய்வது என்கிற ஆர்வம் அதிகமாக இருக்கும். இன்னும் சிலருக்கு புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் இருக்கும். உங்களுடைய ஆர்வம் எதில் அதிகமாக இருக்கிறது என்று தெரிந்து கொண்டு படிப்போடு அதையும் இணைத்து அதற்கான பயிற்சியையும் செய்தீர்களேயானால் பிற்காலத்தில் உங்கள் பெயருக்குப் பின்னாலும் ஒரு அடையாளம் இருக்கும்.
புத்தகங்களைப் படியுங்கள்: இந்த கம்ப்யூட்டர் யுகத்தில் இப்போதெல்லாம் புத்தகங்கள் படிக்கும் வழக்கமே இல்லாமல் போய் விட்டது. பலதரப்பட்ட நல்ல பயன் தரக்கூடிய புத்தகங்களைப் படிக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். தொழில் வளர்ச்சி மற்றும் leadership போன்ற துறைகளை பற்றி கூறும் புத்தகங்களை படியுங்கள். Six hats, seven havits of highly effective people, emotional intelligence போன்ற தலைசிறந்த புத்தகங்களை நேரம் கிடைக்கும் போதெல்லாம் படித்து வெளி உலக அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். இதைத் தவிர கண்டிப்பாக நீங்கள் உங்களின் மதத்திற்கு ஏற்றவாறு வாரத்தில் ஒரு நாளாவது கண்டிப்பாக பகவத் கீதையையோ, குரானையோ அல்லது பைபிளையோ படிக்க வேண்டும். உங்கள் வாழ்க்கையை சீராக வைத்திருக்க உதவும் வழியை holy booksல் மட்டும்தான் நீங்கள் பெற முடியும்.
பேச்சுத் திறமையை வளர்த்து கொள்ளுங்கள்: கல்லூரி படிப்பை முடித்து விட்டு முதன் முதலில் வேலைக்கான நேர்முக interview கொடுக்கும்போது நிறைய பேர் தட்டு தடுமாறுவார்கள். எப்படிப் பேசுவது, என்ன சொல்வது என்று எண்ணி யோசித்து கொண்டே இருப்பார்கள். அப்படியே வேலை கிடைத்து விட்டாலும் சக ஊழியர்களிடம் எதை சொல்ல வேண்டும்? எப்படிப் பேச வேண்டும் என்பது மிகவும் பிரச்னைக்குரிய விஷயமாகி விடும். ஆகவே நீங்கள் தனக்குத்தானே அடுத்தவர்களைப் பார்த்து எந்த இடத்தில் எப்படி பேசுகிறார்கள் மற்றும் என்ன விளைவு ஏற்படும் என்பதை எல்லாம் முன்னதாகவே கற்றுக்கொள்ள வேண்டும்.
கூடியவரை அழகாக அன்போடு பேச கற்றுக் கொள்ளுங்கள். அழகாகப் பேசுவதன் மூலம் மற்றவர்களிடமிருந்து உங்களுக்கு எதுவும் கிடைக்காமல் இருக்கலாம். ஆனால், அவ்வாறு பேசுவதால் மட்டுமே மற்றவர்களின் மனதில் ஒரு இடத்தைப் பிடிக்க முடியும். அழகான வார்த்தைகள் ஆளுமையை வெளிப்படுத்துகின்றன. நீங்கள் வணிகத்திலோ அல்லது தொழிலிலோ முன்னேற வேண்டும் என்று நினைத்தால் நிச்சயமாக பேச்சுத் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
Extra curricular activities ல் பங்கேற்கவும்: இப்போதெல்லாம் மாணவ, மாணவிகள் இந்த extra curricular activitiesல் பங்கேற்பதே கிடையாது. அதில் கலந்து கொண்டால் படிக்கும் நேரம் வீணாகி விடும் என்று நினைத்து ஒதுங்கி விடாதீர்கள். ஏதாவது ஒரு போட்டியிலோ அல்லது இசை மற்றும் நாடக நிகழ்ச்சியிலோ கலந்து கொள்ளுங்கள். மாலை நேரத்தில் ஏதாவது ஒரு விளையாட்டுத் துறையில் பயிற்சி பெற சிறிது நேரத்தை ஒதுக்குங்கள். உங்களின் தனிப்பட்ட திறனை வெளிபடுத்த இதுதான் சிறந்த வழி. மேலும் நீங்கள் பணிக்கு விண்ணபிக்கும்போது அவர்கள் கண்டிப்பாக உங்களிடமிருந்து extra curricular activitiesஐ எதிர்ப்பார்க்கலாம்.
பிரச்னைகளை கண்டு பயப்படாமல் தீர்வு காண முயற்சிக்கவும்: வாழ்க்கையில் எல்லா வயதினருக்கும் பிரச்னை என்பது இருக்கத்தான் செய்யும். உங்களை பொறுத்த வரையில் பாடம் கற்பதில் இருக்கலாம், தோழர்களின் மூலமாக வரலாம், இல்லை என்றால் வீட்டில் இருப்பவர்களோடு பிரச்னைகள் இருக்கலாம். எதுவாக இருந்தாலும் நிதானமாக யோசித்து ஒரு தீர்வை காணும் முயற்சியை கையாள வேண்டும். பள்ளி பருவத்திலிருந்தே சுமூகமாக பிரச்னைகளை கையாளப் பழகி விட்டீர்களேயானால் பணியில் சேர்ந்த பிறகு உங்களுக்கு அவற்றை கையாளுவதற்கு சுலபமாக இருக்கும்.
பல்வேறு மொழிகளை கற்றுக்கொள்ளவும்: தாய்மொழி மற்றும் ஆங்கிலத்தை நீங்கள் உங்களுடைய பள்ளிப் படிப்பிலேயே கற்றுக்கொண்டு விடுவீர்கள். இதைத் தவிர பிற மாநில மொழிகள் சிலவற்றையும் பன்னாட்டு மொழிகள் சிலவற்றையும் கற்றுக்கொள்ளுதல் மிக இன்றியமையாத ஒன்றாகும். ஏனென்றால், பிற்காலத்தில் உங்களுக்கு வேறு ஒரு நாட்டிலோ அல்லது மாநிலத்திலோ வேலை வாய்ப்பு கிடைத்தால் உங்களுக்கு மொழி பிரச்னை வராமல் இருக்கும். ஓரளவுக்கு பேச தெரிந்து கொண்டாலே போதுமானது.
உங்களின் சீனியர்களுடன் மற்றும் நண்பர்களுடன் தொடர்பில் இருக்கவும்: பள்ளி படிப்பு முடிந்தவுடன் எல்லோரும் தனித்தனியாகப் பிரிந்து தனக்குப் பிடித்த துறையில் கல்லூரி படிப்பை பயிலுவார்கள். ஒருசிலர் ஒரே கல்லூரியிலும் சேருவார்கள். நீங்கள் உங்களுடன் பள்ளியிலோ அல்லது கல்லூரியிலோ படித்த நண்பர்களுடன் தொடர்பில் எப்போதும் இருக்க வேண்டும்.
அது மட்டுமில்லாமல் உங்களுடைய சீனியர்களிடமும் கண்டிப்பாக தொடர்பில் இருக்க வேண்டும். அப்போதுதான் உங்களுக்கு ஒரு ஐடியா கிடைக்கும். எந்தப் பணியை செய்யலாம், இன்னும் மேற்கொண்டு என்ன படிக்கலாம் போன்ற விஷயங்களை எல்லாம் கேட்டு தெரிந்து கொள்வதற்கு ஏதுவாக இருக்கும்.
பணத்தின் மதிப்பை தெரிந்து கொள்ள வேண்டும்: பணத்தின் மதிப்பை நீங்கள் சிறு வயதிலிருந்தே தெரிந்து கொள்வது மிக மிக அவசியம். எங்கு செலவழிக்க வேண்டும், எங்கு செலவழிக்கக் கூடாது என்பதை பற்றி அறிந்து கொள்வது மிக மிக அவசியம். எப்படிப் பணத்தை சேமிக்க வேண்டும் என்பதையும் பள்ளி பருவத்திலேயே தெரிந்து கொண்டால்தான் பணியில் சேர்ந்த பிறகு பணத்தை பக்குவமாகக் கையாள முடியும்.
மாணவர்களே, இந்தத் திறன்களை எல்லாம் உங்களுடைய பள்ளி பருவத்திலேயே நீங்கள் கற்றுக்கொள்ள முயற்சி செய்தீர்களேயானால் வேலையில் அமரும் சமயத்தில் தேவையான திறமையும் மற்றும் எல்லாவற்றையும் சந்திக்கும் மனப்பக்குவமும் உங்களுக்கு தானாகவே வந்து விடும்.