தொழில்சார் சுகாதாரம் என்பது தொழிலாளர்களின் தொழில் முறை சூழல்களில் அவர்களின் உடல், மனம் மற்றும் சமூக நல வாழ்வை உறுதி செய்வதில் கவனம் செலுத்தும் துறையைக் குறிக்கிறது. இது பாதுகாப்பான பணி நிலைமைகள் மற்றும் நடைமுறைகளை ஊக்குவிக்கும். தொழில்சார் சுகாதாரத்தை பராமரிக்கும் முறைகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
நிறுவனங்கள், தொழிற்சாலைகள், அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளர்களின் தொழிலசார் சுகாதாரம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும். அவர்களது பாதுகாப்பான பணி நிலைமைகளை ஊக்குவிக்கும் அதே வேளையில் பணியிடத்தில் ஏற்படும் காயங்கள், நோய்கள் மற்றும் ஆபத்துக்களையும் தடுப்பதை நோக்கமாகக் கொண்டது தொழில்சார் சுகாதாரம். ஊழியர்களின் உடல் மற்றும் உளவியல் தேவைகளுக்கு ஏற்ப பணிச்சூழலை மாற்றி அமைப்பதையும் இது வலியுறுத்துகிறது.
தொழில்சார் சுகாதாரத்தை பராமரிக்கும் வழிமுறைகள்:
தொழில்சார் சுகாதாரத்தை திறம்பட பராமரிக்க முதலாளிகள் மற்றும் ஊழியர்கள் இருவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
முதலாளிகள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்:
பணியாளர்களுக்கு பாதுகாப்பான பணிச்சூழலை வழங்க வேண்டும்.
ஆபத்துக்களை கண்டறிந்து அவற்றைக் குறைக்க வேண்டும்.
பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் தரநிலைகளுக்கு இணங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
பணியாளர்களுக்கு தேவையான பயிற்சி மற்றும் கல்வியை வழங்க வேண்டும்.
பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்து ஊழியர்களுக்கு பயிற்சி அளிப்பது மிக முக்கியமான ஒன்றாகும். சாத்தியமான அபாயங்கள் மற்றும் உபகரணங்களின் சரியான பயன்பாடு பற்றி அவர்களுக்கு கற்பிக்க வேண்டும்.
அலுவலகங்களில் பணியாளர்கள் அமர்ந்து வேலை செய்ய ஏற்ற நாற்காலிகள், மேசைகள் போன்றவற்றை வழங்க வேண்டும். பழுதடைந்த ஃபர்னிச்சர்களை மாற்றி விட்டு அல்லது அவற்றை பழுது பார்த்து தர வேண்டும்.
பணியிடத்தில் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் சூழல் இருக்க வேண்டும். தசைக் கூட்டு கோளாறுகளை தடுக்க சரியான தோரணையை பணியாளர்கள் கடைபிடிக்க வேண்டும்.
பணியிடங்களில் காயம் அல்லது உடல் சார்ந்த வலி போன்றவை ஏற்பட்டால் தொழிலாளர்கள் சுகாதார நிபுணர்களை அணுகும் வகையில் இருக்க வேண்டும்.
லேபில்கள், அடையாளங்கள் மற்றும் நினைவூட்டல்களை பயன்படுத்த வேண்டும்.
அதிக ஆபத்துள்ள தொழில்களில் ஈடுபடும் ஊழியர்களுக்கு அவ்வப்போது சுகாதார பரிசோதனைகளை வழங்க முதலாளிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள். தொழிற்சார் நோய்களை முன்கூட்டியே கண்டறிவதற்கும் சரியான நேரத்தில் சிகிச்சைகள் அளிப்பதற்கும் ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
வேலை நேரத்தில் ஏற்படும் பணியிட விபத்துக்கள் மற்றும் காயங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும். வேலை தொடர்பான காயங்கள் அல்லது நோய்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்
ஊழியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்:
நாற்காலியில் அமரும்போது ஊழியர்கள் முதுகை தாங்கி, சரியான தோரணையில் அமர்ந்து வேலை செய்ய வேண்டும்.
கணினிகளை சரியான உயரத்தில் வைத்து கண் மட்டத்தில் கணினி திரைகள் இருக்குமாறு அமைக்க வேண்டும்.
நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்வதை தவிர்க்க வேண்டும். அவ்வப்போது போதிய இடைவெளி எடுத்துக்கொண்டு நடக்க வேண்டும்.
நீரேற்றத்துடன் இருக்க வேண்டும். ஆரோக்கியமான உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். ஆற்றல் அளவை பராமரிக்க சத்தான காலை உணவுடன் வேலையைத் தொடங்க வேண்டும்.
வேலையின் நடுவில் குறுகிய கால இடைவேளைகள் எடுப்பது சோர்வை தடுக்கவும் கவனத்தை மேம்படுத்தவும் உதவும். நடைப் பயிற்சி அல்லது கால்களை நீட்டி மடக்குதல் போன்ற லேசான உடல் செயல்பாடுகள் நாள் முழுவதும் உற்சாகமாக வேலை செய்ய ஆற்றல் அளிக்கும்.
தொழிலாளர்கள் சரியான தலைக்கவசம், கையுறைகள், கண்ணாடிகள் போன்ற பொருத்தமான பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து கொண்டு இயந்திரங்களைக் கையாள வேண்டும்.
பணியாளர்கள் பணியிடத்தில் ஏற்படும் ஆபத்துகள் அல்லது அபாயங்கள் குறித்து மேற்பார்வையாளர்களுக்கு தெரிவித்து சரியான நேரத்தில் தீர்வு காண வேண்டும்.