
சுய மாற்றத்திற்கும், சுய உணர்தலுக்கும் அடிப்படை காரணமாக விளங்கும் யோகா என்ற அறிவியல் உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் தோன்றியது என்கிறார்கள். இன்று உலகமே மன நிம்மதியை தேடி யோகா பின்னால் செல்கிறது. இந்த கலை மலைகளில் வசித்த துறவிகள், சப்தரிஷிகள், முனிவர்கள் வழியாக உலகம் முழுவதும் பரவியது, பரவி வருகிறது.
பொதுவாக நமக்கு அபாயம் வரும் போது இரண்டு காரியங்களை செய்ய மனது கட்டளையிடுகிறது. ஒன்று அங்கிருந்து 'ஓடி விடு' என்று வரும் கட்டளை, மற்றொன்று 'எதிர்த்துப் போராடு' என்ற கட்டளை 'ஃபைட் ஆர் ஃப்ளைட் ரெஸ்பான்ஸ்' (fight or flight) என்கிறார்கள் இதை. இந்த இரண்டு கட்டளைகளில் எது மனதை ஆக்கிரமித்தாலும் கார்டிசோல் என்ற 'டென்ஷன்' ஹார்மோனை உடல் முழுவதும் பரவச் செய்கிறது. ஆனால் மனதை ஒரு முகப்படுத்தி தியானம் செய்யும் போது இந்த 'ஃபைட் ஆர் ஃப்ளைட்' விஷயங்கள் காணாமல் போய், ஹார்மோன்களை இயல்பாக இருக்க செய்கிறதாம்.
யோகா செய்வதால் நல்ல உறக்கமும், புத்துணர்ச்சியும் கிடைக்கிறது. இந்த பயிற்சியின் போது மூளையின் 'காமா அமினோபியூட்ரிக்' அதிகளவில் சுரப்பதே இதற்கு காரணம். இந்த காமா அமினோபியூட்ரிக் அளவு குறையும் போது மனச்சோர்வு, மற்றும் மன உளைச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன என்று அமெரிக்கா பாஸ்டன் பல்கலைக்கழக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
அதோடு நடைப்பயிற்சியை விட யோகா மூலம் நீரிழிவு, இரத்த கொதிப்பு, மன அழுத்தம் போன்றவற்றை தீவிரமாக தவிர்க்க முடியும் என்கிறார்கள்.
தற்போது பிரபலமாக இருக்கும் யோகா என்பது உடல் நிலைகள், மூச்சுக் கட்டுப்பாடு, தியானம் மற்றும் தளர்வு நுட்பங்கள் என்பனவற்றை உள்ளிடக்கிய ஒரு பயிற்சியாகும். இதனை பண்டைய காலம் முதல் இந்தியர்கள் செய்து வருகின்றனர்.
இதன் தோற்றம் இந்தியாவாக பார்க்கப்படுகின்றது. பல கலைகளுக்கு பெயர் பெற்ற இந்தியாவில் யோகா என்பது அனைவராலும் செய்யக் கூடிய பயிற்சியாக உள்ளது. இந்த பயிற்சியை உடலுக்கும் மனதிற்கும் அமைதி கொடுப்பதற்காக கண்டுபிடிக்கப்பட்டிருக்கலாம் என அனுமானங்கள் கூறுகின்றன.
யோகா பயிற்சியை உடல் ரீதியாக பார்க்கும் போது தசைகளை நீட்டி ஆசனங்கள் செய்வதால் உடலை வலுப்படுத்தும் அத்துடன் நெகிழ்வுத்தன்மை, வலிமை மற்றும் சமநிலை என்பவற்றையும் மேம்படுத்த உதவும். உடல் எடையை சீராக பேண நினைப்பவர்கள் யோகாசனங்களை தொடர்ந்து செய்யலாம். ஏனெனின் இந்த பயிற்சியில், ரத்த ஓட்டமானது, மூட்டு இணைப்புகள் வரை சென்று ஆரோக்கியமாக உடலை வைத்து கொள்ளும்.
யோகா பயிற்சிகளை யார் வேண்டுமென்றாலும் செய்யலாம். உடலை வளைக்கும் நபர்கள் மாத்திரம் செய்யலாம் என்பது முற்றிலும் கட்டுக்கதை. யோகா செய்வது தொடர்பில் முன்னேற்றம் தான் முக்கியமே தவிர உடலமைப்பு பற்றிய எந்த கவலையும் வேண்டாம். யோகா செய்யும் பொழுது உடல் வலிமையாகவும் நெகிழ்வுத்தன்மையாகவும் மாறும். அத்துடன் மன அழுத்தம் குறையும். யோகா செய்வதற்கு வயது எல்லை இல்லை. குழந்தைகள், முதியோர்கள், இளம் வயதினர்கள் என அனைவரும் செய்யலாம். பயிற்சியாளர்களிடம் பயின்று செய்வது நல்லது.