தர்பூசணி தோலை இனி தூக்கி வீசாதீங்க... செடிகளுக்கு இந்த மேஜிக் உரத்தை கொடுத்து பாருங்க!

watermelon-rind-liquid-fertilize
watermelon-rind-liquid-fertilize
Updated on

சுட்டெரிக்கும் கோடை காலம் வந்துவிட்டாலே நமது வீடுகளில் தர்பூசணி பழம் கட்டாயம் இடம் பிடித்துவிடும். பழத்தின் உள்ளே இருக்கும் சிவப்பான, இனிப்பான பகுதியை மட்டும் ஆசையாக சாப்பிட்டுவிட்டு அதன் தோலை நாம் உடனடியாக குப்பைத் தொட்டியில் வீசிவிடுவோம். ஆனால் அந்த வெள்ளையான தோல் பகுதி நமது வீட்டுத் தோட்டத்திற்கு எவ்வளவு பெரிய பொக்கிஷம் என்பது நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. 

தர்பூசணித் தோலில் செடிகளை அசுர வேகத்தில் வளரச் செய்யும் அற்புதம் நிறைந்துள்ளது. குப்பையில் வீசப்படும் அந்த தோலை வைத்து இயற்கை திரவ உரம் எப்படி தயாரிப்பது என்பதை இப்போது பார்ப்போம்.

சத்துக்கள் நிறைந்தது!

தர்பூசணி தோலில் பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்துகள் அதிக அளவில் கொட்டிக் கிடக்கின்றன. இது செடிகளின் வேர்களை வலுவாக்கி அபரிமிதமான வளர்ச்சியைக் கொடுக்கும். இந்த உரம் தயாரிக்க முதலில் அந்த தோலை மிகச் சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். 

நறுக்கிய துண்டுகளை ஒரு பெரிய பிளாஸ்டிக் வாளியில் போட்டு, அது மூழ்கும் அளவிற்கு இரு மடங்கு தண்ணீரை ஊற்றிக் கொள்ளுங்கள். பின்னர் அந்த வாளியை காற்று புகாதவாறு நன்றாக மூடி, வெயில் படாத ஒரு இருட்டான இடத்தில் பாதுகாப்பாக வைக்க வேண்டும். தினமும் ஒரு முறை மட்டும் மூடியை திறந்து ஒரு குச்சியை வைத்து நன்றாக கலக்கி விடுங்கள். மூன்றே நாட்களில் செடிகளுக்கான திரவ உரம் அட்டகாசமாக தயாராகிவிடும்.

அறிவியல் சொல்லும் உண்மை!

இந்த உரத்தை வடிகட்டி ஒரு பாட்டிலில் பத்திரப்படுத்திக் கொள்ளலாம். இதில் கூடுதலாக ஒரு அறிவியல் ரகசியமும் அடங்கியுள்ளது. அதாவது இந்த தோல் தண்ணீரில் ஊறும் போது அதனுடன் ட்ரைக்கோடெர்மா என்ற நன்மை செய்யும் நுண்ணுயிரியை சேர்த்தால், உரம் இன்னும் அதிவேகமாக தயாராகிவிடும். அதுமட்டுமில்லாமல் செடிகளுக்கு கேடு விளைவிக்கும் கெட்ட பாக்டீரியாக்களும் இதில் அறவே இருக்காது என ஆய்வுகள் ஆணித்தரமாகக் கூறுகின்றன.

இதையும் படியுங்கள்:
பட்டுப்போன்ற கூந்தல் வேண்டுமா? வீட்டிலேயே வாழைப்பழ ஹேர் மாஸ்க் - இதோ எளிய முறை!
watermelon-rind-liquid-fertilize

பயன்படுத்தும் முறை!

இந்த உரத்தை அப்படியே நேரடியாக செடிகளுக்கு ஊற்றுவது பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். ஒரு பங்கு உரத்திற்கு ஒரு பங்கு சாதாரண தண்ணீரை கலந்து தான் கட்டாயம் பயன்படுத்த வேண்டும். கொளுத்தும் மதிய வெயிலில் இந்த உரத்தை செடிகளுக்கு கொடுப்பதை முற்றிலுமாக தவிர்த்து விடுங்கள். 

அதிகாலை நேரம் அல்லது சூரியன் மறைந்த பிறகு மாலை வேளையில் செடியின் வேர் பகுதியில் ஊற்றுவது தான் மிக சரியான முறை. இலைகளின் மீது ஊற்றினால் பூஞ்சை தொற்று வர வாய்ப்புள்ளது. வாரம் ஒருமுறை இதை கொடுத்தாலே செடிகள் செம செழிப்பாக வளரும். கீரை வகைகள் மற்றும் காய்கறி செடிகளுக்கு இது ஒரு அற்புதமான வரப்பிரசாதமாகும்.

இதையும் படியுங்கள்:
சிங்கப்பூர் போறீங்களா? அப்படின்னா இந்த 7 விஷயத்தை கண்டிப்பா செய்யாதீங்க!
watermelon-rind-liquid-fertilize

ஆரம்பத்தில் இந்த உரத்தை ஒரே ஒரு செடிக்கு மட்டும் கொடுத்து செக் செய்து பாருங்கள். சில நாட்களுக்குப் பிறகு அந்த செடியின் இலைகள் மஞ்சளாக மாறினால், நீங்கள் உரத்தில் இன்னும் அதிக அளவு தண்ணீர் சேர்க்க வேண்டும் என்று அர்த்தம். எந்த ஒரு ரசாயனமும் இல்லாத இந்த நூறு சதவீத இயற்கை உரம் உங்கள் வீட்டு செடிகளை பச்சைப் பசேலென மாற்றும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

logo
Kalki Online
kalkionline.com